
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் பிரிக்கவே முடியாத இரண்டு விஷயங்கள் என்றால் விராட் கோலியும், பெங்களூர் அணியும் தான். கடந்த 18 ஆண்டுகளாக ஒரே அணிக்காக விராட் கோலி விளையாடி வருகிறார். வேறு எந்த வீரரும் இப்படியொரு சாதனையைச் செய்ததில்லை. அதற்கேற்ப பெங்களூர் அணி நிர்வாகமும் விராட் கோலிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கியது. 17 சீசன்களாக ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வந்த பெங்களூர் அணி, 2025 ஐபிஎல் சீசனில் அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டது.
சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 கோப்பைகளை வென்றதால், பெங்களூர் அணி மற்றும் விராட் கோலி மீது அதிகளவில் விமர்சனங்கள் எழுந்தன. என்றேனும் ஒருநாள் நிச்சயமாக ஐபிஎல் கோப்பை கோலியின் வசப்படும் என்று காத்திருந்த பெங்களூர் அணி ரசிகர்களுக்கு 2025 ஜூன் 3 மறக்க முடியாத நாளாக அமைந்து விட்டது. 18 வருட ஏக்கத்திற்கு தீர்வும் கிடைத்து விட்டது. பெங்களூர் அணிக்காக விராட் கோலி அனைத்தையும் செய்து விட்டார். இருப்பினும் ஐபிஎல் கோப்பையை வெல்லாதது மட்டுமே குறையாக இருந்தது. இன்று அந்த குறையும் நீங்கி விட்டது.
அதிக பவுண்டரிகள், அதிக சதங்கள், அதிக ரன்கள், தொடர்ச்சியான ரன்குவிப்பு, ஆக்ரோஷமான ஃபீல்டிங் மற்றும் சக வீரர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு கொடுத்தல் என விராட் கோலி அனைத்திலும் சிறந்தவராக திகழ்ந்தார். 19 வயதில் இளம் வீரராக பெங்களூர் அணியில் கால்தடம் பதித்த கோலி, இன்று அனுபவ வீரராக கோப்பையை ஏந்தியுள்ளார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு பெங்களூர் அணி முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இருப்பினும் டெக்கான் சார்ஜர்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது. அடுத்ததாக 2011 இல் சென்னை அணியிடமும், 2016 இல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியிடமும் இறுதிப்போட்டியில் தோற்று கோப்பைக் கனவை நிறைவேற்ற முடியாமல் தவித்தது. ஆனால் இம்முறை வரலாற்றைத் திருத்தி எழுதியுள்ளது ஆர்சிபி அணி. 4 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஆர்சிபி, முதல் 3 முறை தோல்வியைக் கண்டாலும் 2025 இல் பஞ்சாப் அணியை தோற்கடித்து முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று விட்டது.
ஆர்சிபி அணியின் வெற்றி உறுதியானதும் கோலியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் தானாகவே ஊற்றெடுத்தது. பெங்களூர் ரசிகர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் கோலி ஐபிஎல் கோப்பையை ஏந்தியதில் நிச்சயமாக மகிழ்ச்சி அடைவார்கள்.
இதுவரை ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூர் அணிக்காக விராட் கோலி 267 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இதில் 8 சதங்கள் மற்றும் 63 அரைசதங்களுடன் 8,661 ரன்களைக் குவித்திருக்கிறார். இதில் 771 பவுண்டரிகளும், 291 சிக்ஸர்களும் அடங்கும். ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள், அதிக சதங்கள் மற்றும் அதிக பவுண்டரிகளை விளாசியவர் கோலி தான்.
பல சாதனைகள் புரிந்திருக்கும் கோலிக்கு ஐபிஎல் கோப்பை என்றோ கிடைத்திருக்க வேண்டும். தாமதமாக கிடைத்தாலும் இதற்கு முழுக்க முழுக்க தகுதியான வீரர் விராட் கோலி. இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பே விராட் கோலிக்காக கோப்பையை வெல்வோம் என கேப்டன் ரஜத் பட்டிதார் மற்றும் விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா ஆகியோர் சூளுரைத்தனர். தற்போது சொன்னதை செய்தும் காட்டியுள்ளனர். விராட் கோலியின் 18 ஆண்டு கால தவத்திற்கு கிடைத்த பலன் தான் 2025 ஐபிஎல் கோப்பை என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.