பலா விருட்சத் திருமேனியராய் பக்தர்களுக்கும் அருளும் நெய்யப்ப கணபதி!

Pala Virutcha Thirumeniyaraai Bakthargalukku Arulum Neiyappa Ganapathi
Pala Virutcha Thirumeniyaraai Bakthargalukku Arulum Neiyappa Ganapathi

கேரள மாநிலம், கொல்லத்தின் வடகிழக்கில் சுமார் 27 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கொட்டாரக்கரா திருத்தலம். இத்தலத்தில் அருளும் மகாகணபதிக்கு ‘நெய்யப்பம்’தான் மிகவும் பிரியமான நிவேதனமாக உள்ளது. மகாகணபதிக்கு நெய்யப்பம் கொண்டு பக்தர்கள் வழிபட்டால் வேண்டுதல்கள் அனைத்தும் விரைவில் நிறைவேறும் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

தனது தந்தை மூலம் அரச குலத்தவர்கள் மீது ஏற்பட்ட பகையால் உலகம் முழுவதும் கண்ணில் பட்ட அரசர்கள் பலரையும் அழித்ததால் ஏற்பட்ட பாவத்தைப் போக்க பரசுராமர் தான் சென்ற இடங்களில் எல்லாம் சிவன் கோயில்களை எழுப்பினார். அப்படி அவர் எழுப்பிய கோயில்களில் கேரளாவின் கொட்டாரக்கராவில் உள்ள சிவன் கோயிலும் ஒன்று. இந்தக் கோயில் சென்று வழிபட்டுத் திரும்பிய கேரளாவின் புகழ் பெற்ற சிற்பியான பெருந்தச்சன் என்பவர் வழியில் ஒரு பலா மரத்தைக் கண்டார். அந்தப் பலா மரம் அவரைக் கவர அந்த மரத்தின் ஒரு பகுதியை வெட்டி, அதில் கணபதியின்  திருமேனி ஒன்றைச் செய்தார். அதை கொட்டாரக்கராவில் உள்ள சிவன் கோயில் தனிச் சன்னிதி ஒன்றில் பிரதிஷ்டை செய்ததாக தல வரலாறு. காலப்போக்கில் அந்த கணபதி சன்னிதி சிதைந்து போனது.

சுமார் அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பு கொட்டாரக்கராவில் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கிய நாராயணன் எனும் வேதியர், தினமும் கொட்டாரக்கரா சிவன் கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபட்டு வந்ததாகவும், ஒரு நாள் அவர் அந்தக் கோயிலுக்குள் சென்று திரும்பியபோது, ‘வேதியரே! இங்கிருக்கும் என்னையும் வணங்கிச் செல்லுங்கள்’ என்று குரல் கேட்டதாகவும் திடுக்கிட்டுத் திரும்பிய அவர் அங்கு ஒரு பலா மரம் சாய்ந்து கிடந்ததையும் அந்தப் பலா மரத்தின் வேர்ப்பகுதியில் ஏற்பட்ட பள்ளத்தில், விநாயகர் உருவத் திருமேனி ஒன்று இருந்ததையும்  கண்டு வியந்துள்ளார்.

தன்னிடம் பேசியது அங்கிருந்த விநாயகர்தான் என்பதைத் தெரிந்து கொண்ட அவர், விநாயகரை அந்த இடத்திலேயே பிரதிஷ்டை செய்து, அனைவருக்கும் அருள்புரிய வேண்டிக் கொண்டார். அவரது வேண்டுதலை ஏற்றுக்கொண்ட விநாயகர் அந்த இடத்திலேயே கோயில் கொண்டார். பிறகு விநாயகருக்கு அங்கு புதிதாகக் கோயில் ஒன்று கட்டப்பட்டது என்றும் மற்றொரு வரலாறு சொல்கிறது.

கொட்டாரக்கரா சிவன் கோயில் வளாகத்தில் அருளும் விநாயகர், வழிபடும் அனைவருக்கும், வேண்டியது வேண்டியபடி அருளும் செய்தி அப்பகுதியில் பரவ, பரசுராமரால் நிறுவப்பட்ட சிவன் கோயிலை விடப் பெருமையுடையதாக மாற்றம் பெற்று, ‘மகாகணபதி’ எனும் பெயரை பெற்றார். கருவறையில், பலா மரத்திலான மகாகணபதி அப்பம் ஒன்றைக் கையில் வைத்தபடி காட்சி தருகிறார். மோதகப் பிரியரான கணபதி இங்கு நெய்யப்பப் பிரியராக இருப்பது தனிச்சிறப்பு.

கோயில் வளாகத்தில், தர்மசாஸ்தா, சுப்பிரமணிய சுவாமி, நாகதேவதைகள் போன்றவர்களுக்கும் தனிச்சன்னிதிகள் அமைக்கப்பட்டு  வழிபாடுகள் நடைபெறுகின்றன. விநாயகர் சதுர்த்தி, திருவாதிரை, சிவராத்திரி, ஆயில்யம்,  மகம், நவராத்திரி, தைப்பூசம், விஷு போன்ற சிறப்பு  நாட்கள் இக்கோயிலில் சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
மன அழுத்தம் போக்கி சீரான தூக்கத்தைத் தரும் ஜாதிபத்திரி!
Pala Virutcha Thirumeniyaraai Bakthargalukku Arulum Neiyappa Ganapathi

மகாகணபதியை வழிபட வரும் பக்தர்கள், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நெய்யப்பத்தைப் படைத்துத் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேற வழிபடுகின்றனர். நெய்யப்பம் கொண்டு வழிபடும் பக்தர்களின் வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறிவிடும் என்பது இப்பகுதி பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

கேரள மாநில நடனங்களில் ஒன்றான கதகளி கொட்டாரக்காரா மகாகணபதி கோயிலில்தான் தோன்றியதாகச் சொல்லப்படுகிறது. எனவே, கதகளியாட்டக் கலைஞர்கள் ஆண்டுக்கு ஒருமுறையாவது இங்கு வந்து மகாகணபதிக்கு ’நெய்யப்ப வழிபாடு’ செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். நெய்யப்ப விரும்பியான மகாகணபதியை வணங்கி நாமும் நிறைவான வாழ்வை பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com