அதிகக் காரமும் துவர்ப்பும் கொண்ட ஜாதிக்காய் மலேசியாவின் பினாங்கிலும், நம் நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலைகளிலும் அதிகம் உற்பத்தியாகிறது. ஜாதிக்காய் விதையின் மேல்புறம் சிவப்பு நிறத்தில் மெல்லிய தோல் போன்று இருப்பதைத்தான் ஜாதிபத்திரி என்கிறோம். ஜாதிக்காயின் அனைத்து பாகங்களும் மருத்துவ குணநலன் கொண்டவை.
உணவின் சுவையைக் கூட்டவும், குறிப்பாக பிரியாணியின் மணத்தை அதிகரிக்கவும் ஜாதிபத்திரி சிறிதளவு சேர்க்கப்படுகிறது. இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடல் ஆரோக்கிய பிரச்னைகளுக்கும் சிறந்த நிவாரணத்தை வழங்குகிறது.
ஜாதிபத்திரியில் கார்போஹைட்ரேட், புரதங்கள், கொழுப்பு சத்து, நார்ச்சத்துக்கள், வைட்டமின் ஏ, சி, ஃபோலேட், ரிபோபுளோவின், மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம், கால்சியம் என ஏகப்பட்ட சத்துக்கள் உள்ளன. இது உடலின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது. பசியை தூண்டக் கூடியது. மன அழுத்தம் குறைய ஜாதிபத்திரியிலுள்ள லைட்டமின் பி உதவுகிறது. மேலும், இதில் உள்ள நியசின், தைமின் மற்றும் ரிபோபுளோவின் போன்றவை மன அழுத்தத்தை குறைத்து மனதில் உள்ள பயத்தைப் போக்குகிறது.
ஜாதிபத்திரியை கஷாயம் வைத்து சாப்பிட இருமல், தும்மல், சளி போன்ற பிரச்னைகள் குணமாகும். இதில் உள்ள நார்ச்சத்துக்கள் ஜீரண சக்தியை அதிகரிக்க உதவுகிறது. சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்கவும், சிறுநீரகத் தொற்றை தடுக்கவும், சிறுநீரகக் கற்களை கரைக்கவும் ஜாதிபத்திரி உதவுகிறது.
தூக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்கள் ஜாதிபத்திரி கொண்டு டீ தயாரித்து குடித்தால் நல்ல தூக்கம் வரும். மூட்டு வலி, முழங்கால் வலிக்கு ஜாதிபத்திரி சிறந்த அருமருந்து என்றே கூறலாம். இதில் உள்ள கால்சியம் எலும்பு தேய்மானத்தை சரி செய்யக்கூடியது. பற்களுக்கும் வலிமை தரக்கூடியது. ஒரு சிட்டிகை ஜாதிக்காய் பொடியை பசும்பாலில் கலந்து இரவில் படுக்கும்போது பருக மன அழுத்தத்தை போக்கி நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி சீரான தூக்கத்தைத் தரும்.
ஜாதிக்காயில் உள்ள மைரிஸ்டிசின் (myristicin) எனும் சத்து சரும சுருக்கம் ஏற்படாமல் பாதுகாத்து, இளமையான தோற்றத்தைத் தருகிறது. இதனால் ஜாதிக்காயின் மைரிஸ்டிசின் சத்தை ஆன்ட்டி ஏஜிங் கிரீம்களில் சேர்க்கிறார்கள்.
ஜாதிக்காய், சுக்குத்தூள் இரண்டையும் சம அளவு எடுத்துக் கொண்டு அத்துடன் சீரகத்தையும் இரண்டு பங்கு சேர்த்து பொடி செய்து சாப்பிடுவதற்கு முன் நீரில் இரண்டு சிட்டிகை அளவு சேர்த்து பருக. வயிற்றில் ஏற்படும் வாயு தொல்லை, அஜீரணம் நீங்குவதுடன் வைரஸ், பாக்டீரியா காரணமாக ஏற்படும் வயிற்றுப் போக்கையும் இது குணப்படுத்துகிறது.