சிறுகதை - கலிகாலம்!

Pancha paandavargal
Pancha paandavargal

ழகான, கம்பீரமான, கனுக்காலில் தேவமணி எனும் சுழிகளையுடைய பஞ்சகல்யாணி குதிரைகளோடு நின்றிருந்தான் குதிரைக்காரன் உருவில் கலி புருஷன். அக்குதிரைகளின் கம்பீரத்திலும், அழகிலும் மயங்கிய பீமன், அர்ச்சுனன், நகுல, சகாதேவர்கள் அக்குதிரைகளின் விலை என்னவென்று கேட்டனர்.

“இந்தப் புரவிகள் விற்பதற்கல்ல; எனது வினாக்களுக்குச் சரியான விடையளிக்க வேண்டும். அதே நேரம் பதில் தவறாயிருந்தால் நான் போடும் வட்டங்கள், கூண்டாகி உங்களைச் சிறைபிடித்து விடும்” என்றான் கலிபுருஷன்.

“எங்களுக்குச் சம்மதம்” என்று அவர்கள் கூற, அவர்களைச் சுற்றி கலிபுருஷன் ஜபித்த மந்திர வட்டம் எழுந்தது. கலிபுருஷனின் வினாக்களுக்கு விடை தெரியாததால் நான்கு சகோதரர்களும் வட்டத்துக்குள் சிக்கிக் கொண்டதைக் கேள்வியுற்று விரைந்து வந்தார் தருமர்.

“நான் சரியாக பதிலைச் சொன்னால் இவர்களை விடுவிப்பாயா?” என்று தருமர் கேட்க, கலிபுருஷன் ஒப்புக்கொண்டு முதல் வினாவை எழுப்பினான்.

“நான் வரும் வழியில் ஒரு பெரிய கிணறு. அதன் விளிம்பில் பொற்காசொன்று தொங்கியது. அந்தக் காசைப் பற்றியபடி மிகப் பெரிய தொங்கும் மலை! அப்படியிருந்தும் காசு கிணற்றுக்குள் விழாதது என்ன விந்தை?”

“பாபமே மலை. புண்ணியமே பொற்காசு. சிறிய புண்ணியமே நரகக் கிணற்றுக்குள் விழாமல் காக்கிறது” என தருமர் கூற, பீமனிருந்த கூண்டு மறைந்தது.

“நடுவில் ஒன்றும், சுற்றி நான்குமாக ஐந்து கிணறுகளைக் கண்டேன். சுற்றியிருந்த வாவிகளில் ஒன்றில் நீர் வற்றினாலும் நடுவிலிருந்த கிணற்றிலிருந்து நீர் வரத்து நடக்கிறது. ஆனால், சுற்றியிருக்கும் நான்கு வாவிகளும் தளும்பத் தளும்ப நீர் நிரம்பியிருந்தும் மத்தியிலிருந்த கிணறு வற்றியபோது நீர் போகவில்லை. இதன் தாத்பர்யம் என்ன?” என்றான் கலிபுருஷன்.

“நடுவிலுள்ளது தந்தை. சுற்றியிருப்பது பிள்ளைகள். புதல்வர்கள் நலிந்தால் தகப்பன் கைதூக்கி விடுவான். ஆனால் கலிகாலத்தில் பிதா முதுமையில் நலிவுற்றால் புத்திரர்கள் பாராமுகமாயிருப்பர் என்பதே இதன் பொருள்” என்றார் யுதிஷ்டிரர். அர்ஜுனன் இருந்த கூண்டு மறைந்தது!

இதையும் படியுங்கள்:
தண்டனைகள் தருபவர் பெருமாள்… தயை காட்டுபவர் தாயார்!
Pancha paandavargal

“ஓரிடத்தில் பசு, கன்றிடம் பால் குடிக்கும் அதிசயத்தைப் பார்த்தேன். இப்படியும் நடக்குமா?” என்றான் கலிபுருஷன்.

“பிள்ளைகள் நலனைக் கருத்தில் கொள்ளாமல் அவர்கள் சம்பாத்தியத்தில் வாழ்க்கை நடத்தும் பெற்றோர்கள் இருப்பார்கள் என்பதையே இது உணர்த்துகிறது” என்றார் யுதிஷ்டிரர். நகுலன் விடுபட்டான்.

“காட்டு வழியே வந்தேன். ஒரு விசித்திரமான விலங்கு, கேட்கச் சகிக்காத கேவலமான வார்த்தைகளைப் பேசியபடி தன் மலத்துவாரம் வழியே உணவு உட்கொண்டது. இது என்ன விபரீதம்?”

கண்களில் நீர் பெருக, “கலிபுருஷனே! உன்  ஆட்சி நடக்கும் கலியுகத்தில் வெட்கம், மானம், ரோஷம் இதெல்லாம் அரிதாகக் காணப்படும். வசதியாக வாழ்வது முக்கியமே தவிர, பொருள்வரும் விதம் பிரதானமாகாது. மழை பொய்க்கும். கொடிய நோய்கள் பரவும். பூலோகம் காடாயிருக்கும். ஆசிரம தர்மங்கள் சீர்குலையும். பண்பில்லாமல் பேசுவதே சொற்சாமர்த்தியமாகக் கருதப்படும். குலப் பெருமை காலில் மிதிபடும்” என்று தருமர் கூற, சகாதேவன் விடுபட்டான்.

கலிபுருஷன் தருமரை வணங்கி, “தங்களது ஆட்சி நடைபெறும்வரை பூலோகம் வரமாட்டேன்” என்று கூறி மாயப்புரவிகளோடு மறைந்தான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com