தண்டனைகள் தருபவர் பெருமாள்… தயை காட்டுபவர் தாயார்!

தண்டனைகள் தருபவர் பெருமாள்… தயை காட்டுபவர் தாயார்!
Published on

ட்ட திட்டங்களை போடுபவர் பெருமாள். இவ்வுலகை படைக்கும் போது, மனிதர்கள் இந்த தர்மங்களின் படி நடக்க வேண்டும் என்று சட்டங்கள் போட்டு நம்மை இவ்வுலகிற்கு அனுப்புகிறான் எம்பெருமான். அந்த சட்டங்களை தர்மங்களை நாம் மீறும் போது, அதற்கான தண்டனையை நமக்கு கொடுத்து நம்மை திருத்துகிறார், பெருமாள். தாயாருக்கோ நாம் அந்த தண்டனையை அனுபவிப்பதில் என்றைக்குமே எப்போதுமே இஷ்டம் இல்லை. கஷ்டத்தில் இருந்து கொண்டு மனம் திருந்தி நம்மை சரண் அடைந்தவர்களுக்கு எதற்காக பெரிய தண்டனையை கொடுக்க வேண்டும்? அந்த ஜீவனை தயவு கூர்ந்து மன்னித்து விடுங்கள் என எம்பெருமானிடம் நமக்காக மன்றாடுவாளாம் திருமாமகள்.

ஸ்வாமி தேசிகன் ஒரு விஷயத்தை ரசமாக காட்டி இருப்பார். தவறுகள் பல புரிந்து, பெருமாள் நாம் செய்த தவறுகளுக்காக என்ன தண்டனை கொடுக்க போகிறாரோ என்ற தவிப்புடன் மனிதர்கள் பலர் பெருமாள் முன்பும் தாயார் முன்பும் நின்றிருந்தார்களாம். இதோ இருக்கிறார்களே இந்த மானிடன், இவன் என்ன செய்தான் தெரியுமா? ஒருவரை பற்றி மற்றவர்களிடம் தப்பு தப்பாக கோள் சொல்லும் வேலையை செய்து வந்தான். பிறரை பற்றி தவறாக பேசியதற்காக இவன் மீனாக பிறக்க வேண்டும் என பெருமாள் சொல்ல உடனே தாயாரோ, “எதற்காக இவன் மீனாக பிறக்க வேண்டும்?” என கேட்க உடனே பெருமாள், “தேவி நீ அக்னி தேவன் செய்த செயலை மறந்து விட்டாயோ? முன்னொரு காலத்தில், பூலோகத்தில் உள்ள மனிதர்கள், எந்தெந்த தேவதையை நோக்கி ஹோமம் செய்கிறார்களோ, அந்தந்த தேவதைகளிடம் அந்த ஹோமத்தில் இட்ட பொருட்களை அக்னி தேவனின் 3 சகோதர்களும் செய்து வந்தனரே.

அந்த பணியை செய்யும் போது 3 சகோதர்களும் இறந்து விட, தாம் அந்த பணியை செய்ய கூடாது என பயந்து அக்னி தேவன் தண்ணீருக்குள் சென்று ஒளிந்து கொண்டானே. தண்ணீருக்குள் ஒளிந்து கொண்டிருந்த அக்னியை ஒரு மீன் பார்த்து தேவர்களிடம் சொல்ல, தேவர்கள் உடனே வலை வீசி அக்னி பகவானை பிடித்தார்களே… அதனால் கோபம் கொண்ட அக்னி பகவான், “மீன்களே என்னை தேவர்கள் வலை விசி பிடித்ததை போலவே, இனி இவ்வுலகில் எல்லோரும் உங்களை வலை வீசி பிடிப்பார்கள்” என சபித்ததை மறந்து விட்டாயா? மீனை போல கோள் சொன்னதால், அந்த மனிதன் மட்டுமல்ல அவனை போல கோள் சொல்பவர்கள் அனைவருமே மீனாக தான் பிறப்பார்கள்” என எம்பெருமான் சொல்ல, அதற்கு தயா தேவியான தாயாரோ, “பெருமாளே அவனுக்கு பதிலாக நீங்களே பெரிய மீனாக அவதாரம் எடுத்து விடுங்கள்’ என கூற, தாயார் சொல்படி, தானே மச்ச அவதாரம் எடுத்தாராம் பெருமாள்.

நாம் செய்த தவறுகளை மன்னித்து, நம்மை மேலும் தவறுகள் செய்யாமல் காப்பவளான அந்த நாச்சியாரை, தாயாரை, நவராத்திரி நாயகியை,  திருமலையப்பன் நாச்சியார் திருக்கோலத்தில் எழுந்தருளிய இந்த நன்னாளின் சரண் புகுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com