
ஐம்பத்தியோரு சக்தி பீடங்களில் தேவியின் நாபி விழுந்த சக்தி பீடம் காஞ்சி ஸ்ரீகாமாட்சி அம்பாள் திருக்கோயிலாகும். இக்கோயிலானது கி.பி.5 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.8 ஆம் நூற்றாண்டுக்குள் காஞ்சியை ஆட்சி செய்த பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டது. பின்னர் வந்த ஆட்சியாளர்களால் தற்போதுள்ள கோயில் கி.பி.1783 ஆம் ஆண்டில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. காமாட்சி அம்பாள் கோயில் கோபுரம் விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் மன்னர் காலத்தில் கட்டப்பட்டது. இத்தலத்தில் ஸ்ரீகாமாட்சி அம்பாள் தென்கிழக்கு திசையை நோக்கி அமர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீகாமாட்சி அம்பாளை வேத வியாசர் பிரதிஷ்டை செய்துள்ளார். தங்க விமானத்தின் கீழ் அம்பாள் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.
ஸ்ரீகாமாட்சி அம்பாள் இத்தலத்தில் காமகோடி ஸ்ரீகாமாட்சி, தபஸ் காமாட்சி, அஞ்சன காமாட்சி, பங்காரு காமாட்சி, உற்சவ காமாட்சி என ஐந்து ரூபங்களில் பஞ்ச காமாட்சியாக அருள்புரிகிறாள். அந்த ஐந்து ரூபங்களையும் இப்போது நாம் அறிந்து கொள்ளலாம்.
ஸ்ரீகாமாட்சி அம்பாள் மூன்று சொரூபியாக எழுந்தருளியுள்ளாள். கருவறையில் பத்மாசனத்தில் சாந்த சொரூபியாகவும், எதிரில் உள்ள ஸ்ரீ சக்கரத்தில் எந்திர சொரூபியாகவும், பிலாகாசத்தில் காரண சொரூபியாகவும் எழுந்தருளி அருள்புரிந்து தன் பக்தர்களைக் காத்து வருகிறாள்.
ஸ்ரீகாமாட்சி அம்பாள், கருவறையில் பத்மாசன யோக நிலையில் காட்சி தருகிறாள். சதுர்புஜ நாயகியாக காட்சி தரும் அம்பாளின் முன் இரு திருக்கரங்களில் கரும்பு வில்லினையும் மலர்க்கணைகளையும் மேல் இரு திருக்கரங்களில் பாசம் மற்றும் அங்குசத்தையும் தாங்கி காட்சி தருகிறாள்.
கருவறையினுள் மூலவராக வீற்றிருக்கும் அம்பாளுக்கு எதிரில் ஸ்ரீசக்ரம் காட்சியளிக்கிறது. அன்னை ஸ்ரீகாமாட்சியே ஸ்ரீசக்ரமாக எழுந்திருளி இருப்பதாக ஐதீகம். இத்திருத்தலம் ஸ்ரீசக்கரபீடத் தலம் என்றும் அழைக்கப்படுகிறது.
ஸ்ரீகாமாட்சி இத்தலத்தில் "பரப்பிரம்ம ஸ்வரூபினி" என்று அழைக்கப்படுகிறார். முற்காலத்தில் ஸ்ரீகாமாட்சி உக்கிரமாக காட்சியளித்ததால் அவர் 'உக்கிர ஸ்வரூபினி' என்றும் அழைக்கப்பட்டார். கி.பி.எட்டாம் நூற்றாண்டில் ஸ்ரீஆதிசங்கரர் ஸ்ரீசக்கரத்தைப் பிரதிஷ்டை செய்து உக்கிரமாக காட்சியளித்த அன்னை ஸ்ரீகாமாட்சியை சாந்தப்படுத்தினார். இதன்பின்னர் கருணையே வடிவான திருக்கோலத்தில் தன்னை நாடிவரும் பக்தர்களைக் காத்து அருளுகிறார்.
ஸ்ரீகாமாட்சி அம்பாளின் திருவுருவத்திற்கு அருகில் வலதுபுறத்தில் ஒற்றைக்காலில் பஞ்சாக்னியின் நடுவில் நின்ற கோலத்தில் தபஸ் காமாட்சியாகக் காட்சி தருகிறாள்.
அரூபலட்சுமி அதாவது உருவமற்ற லட்சுமி அஞ்சன காமாட்சி என்றழைக்கப்படுகிறாள். அம்பாள் சன்னிதியில் இடதுபுறத்தில் வடக்கு திசை நோக்கிய நிலையில் அரூபலட்சுமியாகிய அஞ்சன காமாட்சி காட்சி தருகிறாள். இந்த வடிவம் அம்பாளின் சூட்சும வடிவமாகும். வடிவமற்ற அம்பாளின் திருமேனியில் தடவப்படும் குங்குமத்தின் மகிமையால் அம்பாள் அழகிய உருவம் பெறுகிறாள் என்பது ஐதீகம்.
பங்காரு காமாட்சி அம்பாள் காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்பாள் கோயிலில் ஒரு சன்னிதியில் எழுந்தருளி இருந்தாள். முழுவதும் தங்கத்தினால் ஆன திருமேனி. பதினெட்டாம் நூற்றாண்டில் நிகழ்ந்த அந்நியர் படையெடுப்பின் காரணமாக பங்காரு காமாட்சி விக்கிரகம் காஞ்சிபுரத்தில் இருந்து பாதுகாப்பாக தஞ்சாவூருக்கு கொண்டு செல்லப்பட்டது. தங்கத்தினாலான விக்கிரகத்தின் பாதுகாப்பு கருதி துணியால் சுற்றப்பட்டு திருமுகத்திற்கு மட்டும் கருமை நிற புனுகு சாற்றிக் கொண்டு செல்லப்பட்டது. இதனால்தான் தற்போதும் பங்காரு காமாட்சி அம்பாளின் திருமுகத்தில் புனுகு சாற்றப்பட்டு வரும் வழக்கம் கடைபிடிக்கப்படுகிறது.
பங்காரு காமாட்சி அம்பாள் திருக்கோயில் தஞ்சாவூரில் மேலவீதியில் அமைந்துள்ளது. பதினெட்டாம் நூற்றாண்டில் அப்போது தஞ்சாவூரை ஆட்சி செய்த மராட்டியமன்னர் பிரதாபசிம்மன் இந்த கோயிலை கட்டியதாக கூறப்படுகிறது. இக்கோயில் கருவறையில் பங்காரு காமாட்சி அம்பாள் தங்கத்தினாலான திருமேனியோடு வலது திருக்கரத்தினில் கிளியை ஏந்தியவாறும் இடது திருக்கரத்தினை வளைத்து கீழே நளினமான நிலையில் தொங்கவிட்டவாறும் நின்ற திருக்கோலத்தில் காட்சி தந்து அருள்பாலிக்கிறார். அம்பாளின் திருமுகமானது எப்போதும் புனுகு சாற்றப்பட்டு கருமை நிறத்தில் காட்சி அளிக்கிறது.
ஸ்ரீகாமாட்சி அம்பாள் கோவிலில் தற்போது உள்ள பங்காரு காமாட்சி திருமேனி பஞ்சலோகத்தால் ஆனது.
திருவிழாக்காலங்களில் உற்சவ காமாட்சி வீதியுலா செல்லுவது வழக்கம். அன்னை ஸ்ரீகாமாட்சி கலைமகளான சரஸ்வதியையும் திருமகளான லஷ்மியையும் தனது இருகண்களாகக் கொண்டவள்.
இதன் காரணமாகவே உற்சவ காமாட்சி திருமேனியின் வலதுபுறத்தில் லஷ்மியும் இடதுபுறத்தில் சரஸ்வதியும் அமைந்துள்ளனர்.