
பொதுவாக பெருமாளை நினைத்து அனுஷ்டிக்கப்படும் ஏகாதசி விரதம் அளப்பரிய நற்பலன்களை கொடுப்பதோடு, சுத்தப் பட்டினியாக இருந்து விரதம் அனுசரிப்பதால் அளவிலா ஆரோக்கியத்தையும் அளிக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். வளர்பிறை ஏகாதசி, தேய்பிறை ஏகாதசி என்று வருடத்தில் வரும் 24 ஏகாதசி விரதங்கள். ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பெயர், ஒவ்வொரு விசேஷம் எல்லாமே உண்டு.
பங்குனி மாத தேய்பிறையில் வரும் ஏகாதசிக்கு 'பாபமோசனி' ஏகாதசி என்று பெயர். பாபமோசனி விரதம் மேற்கொள்வதன் பிரதான நோக்கமே நாம் அறிந்தும் அறியாமலும் செய்யும் பாவச் செயல்களின் வினைப் பயனை போக்குவதுதான். இதன் மஹிமை பற்றி கிருஷ்ணர் யுதிஷ்டிரருக்கு சொல்வதாக புராணத்தில் ஒரு கதை இருக்கிறது.
ஒரு காலத்தில் குபேரன் ஒரு அழகிய வனத்தை சிருஷ்டி செய்திருந்தான். அங்கே ஒரு தீவிர சிவபக்தரான மேதாவி என்கிற பெருமுனிவர் தவத்தில் ஆழ்ந்திருந்தார். அவரது தவத்தை கலைக்க 'மஞ்சுகோஸா' என்னும் அப்சரஸ் எண்ணம் கொண்டு அவருடைய ஆசிரமத்திற்கு அருகில் ஒரு குடில் அமைத்து தங்கினாள். அங்கு வீணை இசைத்து இனிமையான பாடல்களை பாடத் துவங்கினாள்.
மேதாவி முனிவர் தவத்தில் இருப்பதையும், மஞ்சுகோஸா அவரைக் கவர முயற்சி செய்வதையும் கவனித்துக் கொண்டிருந்த மன்மதன், முன்னொரு காலத்தில் தன்னை சிவபெருமான் எரித்து சாம்பலாக்கிய சம்பவத்தை மனதில் கொண்டு அதற்கு பழி தீர்க்க முடிவு செய்து, மேதாவி முனிவரின் தவத்தைக் கெடுக்க எண்ணி அவர் உடலுக்குள் புகுந்தான்.
காமன் தன் உடலில் புகுந்ததால் காம இச்சையால் தூண்டப்பட்ட மேதாவி முனிவர் மஞ்சுகோஸாவுடன் சிற்றின்ப போகத்தில் வெகு காலம் திளைத்தார். சிறிது காலம் கழித்து தன் லோகமாகிய தேவலோகத்திற்கு திரும்பிச் செல்ல முடிவு செய்த மஞ்சுகோஸா தான் வீடு திரும்ப மேதாவி முனிவரிடம் அனுமதி வேண்டுகிறாள். கால பேதங்களைக் கடந்து அவள் அழகில் மயங்கிக் கிடந்த முனிவரோ, "அழகியே! நீ மாலையில் தானே வந்தாய். இந்த இரவு நேரத்தில் ஏன் திரும்ப நினைக்கிறாய்? காலையில் விடிந்ததும் செல்லலாமே?" என்றார். அவள் அதிர்ச்சியடைந்தாலும் முனிவரின் பேச்சை மீற முடியாமல் மேலும் சில காலம் அவருடனே வாழ்ந்தாள். திரும்பவும் அவள் முனிவரிடம் விடை பெற முயல, "இப்போது தானே விடிந்துள்ளது. சற்றே பொறு. நான் காலைக் கடன்களை முடித்து விட்டு வந்ததும் கிளம்பலாம்!" என்றார்.
அப்போது மஞ்சுகோஸா சிரிப்பை அடக்க முடியாமல், "இதுவரை ஐம்பத்து ஏழு வருடங்களுக்கும் மேல் உங்களுடன் வாழ்ந்து விட்டேன். இப்போது காலைக் கடன்களை முடிக்க தங்களுக்கு எவ்வளவு காலம் ஆகும்?" என்று கேட்கிறாள்.
இதைக் கேட்டதும் தன் சுய உணர்வுக்கு வந்த முனிவர் தான் இத்தனை காலம் இந்தப் பெண்ணோடு சிற்றின்பத்தில் வீழ்ந்ததால் தன் தவ வலிமையே போய்விட்டதே என்று வருந்துகிறார். உடனே கோபத்தில் மஞ்சுகோஸாவிற்கு "நீ மாயாவியாக அலையக்கடவாய்!" என்று சாபம் கொடுக்கிறார்.
இதனால் மனம் கலங்கிய மஞ்சுகோஸா தன் மேல் கருணை காட்டும்படியும் சாப விமோசனத்திற்கு வழி காட்டும்படியும் அவரிடம் கெஞ்சுகிறாள். உடனே மேதாவி முனிவர், "பங்குனி மாதத் தேய்பிறையில் வரும் பாபமோசனி ஏகாதசியன்று நீ சிரத்தையாக விரதம் அனுஷ்டித்தால் உன் சாபம் நீங்கும்" என்று கூறுகிறார்.
தன் ஆசிரமத்திற்குத் திரும்பிய மேதாவி முனிவர் தன் தந்தையிடம் தன் தவ வலிமை அத்தனையும் இழந்து விட்டதை கூறி வருந்தினார். அவரது தந்தை அவரையும் பாபமோசனி ஏகாதசி விரதத்தை அனுஷ்டிக்க செய்கிறார்.
மேதாவி முனிவரும் பாபமோசனி விரதத்தை அனுஷ்டித்து பாவங்களிலிருந்து விடுபடுகிறார். அதேபோல மஞ்சுகோஸாவும் இதே விரததத்தை அனுஷ்டித்து தனது மாயாவி சாபம் விலகி மீண்டும் அழகிய அப்சரஸ் தோற்றத்தைப் பெறுகிறாள் என்று கதை முடிகிறது.
பொதுவாகவே ஏகாதசி விரத நாளில் அதிகாலையில் எழுந்து, குளித்து, வீட்டின் பூஜை அறையில் பெருமாள் மற்றும் லட்சுமி படத்திற்கு வாசமிகு மலர்களை சூட்டி, பெருமாள் லட்சுமி அஷ்டோத்திர மந்திரங்களை உச்சரித்து அர்ச்சனை செய்து, கற்கண்டு அல்லது ஏதேனும் இனிப்பு செய்து நைவேத்தியம் செய்து வழிபடவேண்டும்.
ஏகாதசி விரத நாளன்று காலை முதல் மாலை வரை உணவு ஏதும் சாப்பிடாமல் இருப்பது மிகுந்த பலன்களை தரும். அப்படி முழு பட்டினி கிடக்க முடியாதவர்கள் பால் பழங்களை சாப்பிட்டு விரதம் இருக்கலாம். மாலை நேரத்தில் அருகிலுள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபடலாம். 'பாபமோசனி' ஏகாதசியான இன்று (25-03-2025) திருவோண நட்சத்திரமும் சேர்ந்து வருவதால், இத்தினத்தில் செய்யும் பெருமாள் வழிபாடு அளவற்ற நற்பலன்களை தரும்.