சீர்காழியிலுள்ள திரிவிக்கிரமன் பெருமாள் கோயிலில் உத்ஸவர் தாடாளன்யனை ‘தவிட்டுப்பானை தாடாளன்’ என்பர். இவரை வைகுண்ட ஏகாதசியன்று ஒரு நாள் மட்டுமே தரிசிக்க முடியும். அதேபோல் அன்றைய தினம் மட்டுமே மூலவரின் வலது பாதத்தையும் தரிசிக்க முடியும். இந்த தரிசனம் கண்டவர்களுக்கு மறுபிறவி கிடையாதென்பது ஐதீகம்.
தஞ்சாவூர் மாவட்டம், கோவிலடி (திருப்பேர் நகர்) அப்பக்குடத்தான் கோயில், திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 6வது திவ்ய தேசம் ஆகும். பஞ்சரங்கத் தலத்தில் இதுவும்ஒன்று. 108 திருப்பதிகளுள் இத்தல பெருமாளுக்குத்தான் தினமும் இரவில் அப்பம் செய்து படைக்கப்படுகிறது. அப்பக்குடத்தான் பெருமாள் தனது சுண்டு விரலில் மெட்டி அணிந்து மணக்கோலத்தில் தலை அருகே அப்பக்குடத்துடன் காட்சியளிக்கிறார். வைகுண்ட ஏகாதசி அன்று இந்த குடம் முழுவதும் அப்பம் வைத்து விஷேச பூஜை செய்வார்கள்.
பெரும்பாலான பெருமாள் கோயில்களில் வெள்ளி அல்லது தங்க முலாம் பூசிய எடை குறைந்த ஜடாரிகளைக் கொண்டே பெருமாளின் திருவடி ஆசி வழங்கப்படும். ஆனால், மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் ஒரு கிலோ எடையுள்ள தங்க ஜடாரி உள்ளது. வைகுண்ட ஏகாதசி அன்று மட்டுமே இந்த ஜடாரியைக் கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கப்படுகிறது. பெரியாழ்வார் ‘திருப்பல்லாண்டு’ பாடிய இத்தலத்தில் அவருக்குக் காட்சி தந்த மகாவிஷ்ணு. ஐஸ்வர்யம் தரும் தனது பாத தரிசனத்தை காட்டி அருளினார். அதன் நினைவாக இங்கு ஜடாரி சேவை சாதிக்கிறார்கள்.
புதுக்கோட்டையிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது திருமயம். இங்குள்ள சத்தியமூர்த்தி பெருமாள் கோயில் ஒரு குடைவரை கோயிலாகும்.108 திவ்ய தேசங்களில் ஒன்றான இங்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மூலவர் சத்தியமூர்த்திக்கு தைலக் காப்பு செய்யப்படுகிறது.கோயிலில் ஏகாதசி திதியை ஒட்டி வரும் பரணி நட்சத்திரத்தன்றுதான் சொர்க்கவாசல் திறப்பது வழக்கம். இங்குள்ள உஜ்ஜுவனத் தாயாரை வழிபட்டால் திருமண யோகம், குழந்தை பேறு கிட்டும் என்பது நம்பிக்கை. குழந்தை பேறு வேண்டுபவர்கள் தாயாருக்கு மண்ணாலான விளையாட்டு பொம்மைகளை காணிக்கையாக அளிக்கின்றனர்.
பெங்களூரு, ராஜாஜி நகர் வெஸ்ட் ஆப் கார்டு சாலையில் உள்ள இஸ்கான் பலராமர் ஆலயத்தில் பலராமர் கண்ணாடி மாளிகையில் அருள்பாலிக்கிறார். இங்கு வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இந்த சொர்க்கவாசல் மிகவும் அற்புதமாக தங்கத் தகடுகளால் உருவாக்கப்பட்டடுள்ளது.
பொதுவாக, பெருமாள் கோயில்களில் அதிகாலை, மாலை நேரங்களில் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்படும். ஆனால், திருப்பத்தூர் அருகிலுள்ள திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயிலில் மட்டுமே நள்ளிரவில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. பெருமாள் கோயிலில் பரமபத சொர்க்க வாசல் வைகுண்ட ஏகாதசியன்று அன்று திறந்து அன்று மட்டுமே பக்தர்கள் அந்த வாசல் வழியாக செல்லுவார்கள். ஆனால், இங்கு வைகுண்ட பரமபத அமைப்பு வழியாக தினமும் பக்தர்கள் சென்று வழிபடலாம்.
திவ்ய தேசங்களில் பெரும்பாலும் சொர்க்கவாசல் இருக்கும். ஆனால், திவ்ய தேசங்களில் ஒன்றான தஞ்சை மாவட்டம், கும்பகோணம் சாரங்கபாணி ஆலயத்தில் சொர்க்கவாசல் கிடையாது. இதற்குக் காரணம் இத்தல பெருமாள் வைகுண்டத்தில் இருந்து நேரடியாக வந்ததால் அதனால் இத்தலத்தில் இறைவனை வணங்கினாலே பரமபத பிராப்தம் கிடைக்கும் என்பதால் இங்கு சொர்க்கவாசல் கிடையாதாம்.
திருநெல்வேலியிலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது ஸ்ரீவைகுண்டம். இங்குள்ள கள்ளபிரான் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியன்று உத்ஸவர் கள்ளபிரானுக்கு இரண்டாம் கால பூஜை முடிந்த பிறகு அர்த்த மண்டபத்திற்குள் கொண்டு செல்லப்பட்டு நடை சாத்தப்படுகிறது. பின்னர் சில நிமிடங்களில் நடை திறந்து அவருக்கு தீபாராதனை காட்டுகின்றனர். இதை ‘நிமிட தரிசனம்’ என்கிறார்கள். வைகுண்ட ஏகாதசியை அடுத்த 10 நாட்கள் மட்டுமே இந்த தரிசனம் கிடைக்கும். இந்த நேரத்தில் சுவாமியை வழிபட்டால் பிறப்பில்லா நிலையை அடையலாம் என்பது ஐதீகம்.
திருவள்ளூர் அருகே காக்களூரில் உள்ள பூங்கா நகரில் ஜலநாராயணப் பெருமாள் கோயில் உள்ளது. இங்கு ஒரு பெரிய செவ்வக தொட்டியில் உள்ள நீரில் ஆதிசேஷன் மீது துயில் கொண்ட கோலத்தில் பெருமாள் அருள்பாலிக்கிறார். இவரது வலது கையில் அட்சய பாத்திரமும், இடது கையில் சங்கும் ஏந்தியவராய் காட்சியளிக்கிறார். இந்தத் தொட்டியில் உள்ள தண்ணீரை வைகுண்ட ஏகாதசியன்று மாற்றி விடுவார்கள். இவருக்கு பன்னீர் மற்றும் வாசனை திரவியங்களாலும் அபிஷேகம் நடைபெறுகின்றது.
திண்டுக்கல், அபிராமி அம்மன் கோயிலில் வரதராஜ பெருமாள் வைகுண்ட ஏகாதசி அன்று கருட வாகனத்தில் சொர்க்கவாசல் கடப்பார். ஆனால், மற்ற கோயில்களைப் போல் தனியே சொர்க்கவாசல் வழியே கடக்காமல் அபிராமிக்கான பிரதான வாசலை சொர்க்கவாசலாகக் கருதி கடப்பார். தனது தங்கை வாசல் வழியாக அண்ணன் காடப்பதாக இது ஐதீகம்.