

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் நரசிம்ம சாமி பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கருட சேவை 27-ம்தேதியும், ஜூலை 1-ம்தேதி தேரோட்டமும் நடக்கிறது.
சென்னையில் உள்ள திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி பெருமாள் கோவில், 108 வைணவ திவ்ய தேசங்களில், 60-வது திவ்ய தேசமாக போற்றப்படுகிறது. இந்த கோவிலில் கோபுரங்களும், மண்டபங்களும் தென்னிந்தியக் கோவில் கட்டிடக் கலைக்கே உரிய நுட்பமான சிற்பக் கலையால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்த ஆலயம், மகாபாரதப் போரில் அர்ச்சுனனுக்கு தேரோட்டிய கண்ணனின் நினைவாகப் போற்றப்படுகிறது. மூலவர் வேங்கட கிருஷ்ணர் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
பிரதான மூலஸ்தானத்தில் வேங்கட கிருஷ்ணர், முன்மண்டபத்தில் ரங்கநாதர் மற்றும் ராமபிரான், பிரகாரத்தில் கஜேந்திர வரதர் மற்றும் யோக நரசிம்மர் தனித்தனி சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனர். உற்சவரான பார்த்தசாரதி ஸ்வாமியின் திருமுகத்தில் மகாபாரத யுத்தத்தின்போது பட்ட அம்புகளின் வடுக்களை இன்றும் காணலாம்.
பெருமாள் தன் மனைவி மற்றும் சகோதரர் என குடும்பம் சகிதமாக இருக்கிறார். இக்கோவிலில் திருமாலின் அவதாரங்களில் ஐந்து அவதாரங்கள் உள்ளன. அவையாவன நரசிம்மர், ராமர், வரதராஜர், ரங்கநாதர் மற்றும் கிருஷ்ணர்.
அதனால் இத்தலம் ஐந்து மூலவர் ஸ்தலம் அல்லது பஞ்ச மூர்த்தி ஸ்தலம் என்று அழைக்கப்படுகிறது. 9 அடி உயர மூலவர், உலகில் வேறு எங்கும் இல்லாதவாறு சாரதிக்குரிய முறுக்கு மீசையோடு பெருமாள் காட்சி தருவது இத்தலத்தில் மட்டுமே என்பது தனிச்சிறப்பாகும்.
இக்கோவில் வைகானச ஆகமத்தினையும், தென்கலையையும் பின்பற்றுகிறது. இக்கோவிலின் கோபுரங்களிலும், மண்டபத் தூண்களிலும் கலைத்திறன் மிக்க சிற்ப வேலைப்பாடுகள் காணப்படுகின்றன.
இத்தலத்தின் யோக நரசிம்மர் மேற்கு நோக்கி அருள்பாலிப்பதால், இங்கு வழிபடுவது சகல தோஷங்களையும் நீக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
இத்தனை சிறப்பு வாய்ந்த பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு முக்கிய திருவிழாக்கள் மிகச்சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றன.
அதிலும் குறிப்பாக சித்திரை பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி, புரட்டாசி மாதம், பங்குனி உத்திரம், பவித்ரோற்சவம், ஸ்ரீராம நவமி, கிருஷ்ண ஜெயந்தி உள்ளிட்ட திருநட்சத்திர விழாக்களும் இக்கோவிலில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. வைகுண்ட ஏகாதசி, புரட்டாசி மாதம் மற்றும் சித்திரை திங்களின் போது இங்கு ஏராளமான பக்தர்கள் குவிகின்றனர்.
பார்த்தசாரதி கோவிலில் கருட சேவை, தேரோட்டம்:
அதுமட்டுமின்றி இந்த கோவிலில் ஆண்டுதோறும் பார்த்தசாரதிக்கு சித்திரை மாதமும் நரசிம்மர் (தெள்ளிய சிங்கர்) சுவாமிக்கு ஆனி மாதமும் பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடப்பது வழக்கம். அந்த வகையில் இன்று முதல் 10 நாட்கள் நடைபெறும் நரசிம்ம சாமி பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வுகள்:
முதல் நிகழ்ச்சியாக இந்தாண்டு 10 நாட்கள் நடைபெறும் நரசிம்ம சாமி பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்குகிறது.
விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை வேளையில் சிம்ம வாகனம், ஹனுமந்த வாகனம், கருட சேவை மற்றும் நாச்சியார் திருக்கோலம் என பல்வேறு வாகனங்களில் உற்சவர் வீதி உலா வருவார்.
இந்த விழாவின் 3-ம் நாளான 27-ம்தேதி (சனிக்கிழமை) காலை 5.30 மணிக்கு கருட சேவை நடைபெற உள்ளது.
28-ம்தேதி சூரிய பிரபை, சந்திர பிரபை புறப்பாடும், 29-ம்தேதி பல்லக்கு நாச்சியார் திருக்கோலமும் மாலையில் யோக நரசிம்மர் திருக்கோலமும் இரவு அனுமந்த வாகன புறப்பாடும் நடைபெற உள்ளது.
தொடர்ந்து பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் (திருத்தேர்) ஜூலை 1-ம்தேதி மாட வீதிகளில் கோலாகலமாக நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 5 மணிக்கு மேல் காலை 6 மணிக்குள் பெருமாள் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். அதனை தொடர்ந்து காலை 7 மணிக்கு பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுப்பார்கள். இந்த தேரோட்டத்தில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்ய வருவார்கள்.
அதனை தொடர்ந்து அன்றைய தினம் இரவு 9 மணிக்கு திருமஞ்சனம் நடக்கிறது.
கடைசியாக ஜூலை 4-ந்தேதி இரவு 9.30 மணிக்கு சப்தாவர்ணம் என்ற சிறிய திருத்தேர் நிகழ்வுடன் இந்த ஆண்டுக்கான நரசிம்ம சாமி பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.
இக்கட்டுரையை வாசிப்பதன் மூலம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நடைபெறும் நரசிம்மர் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய தேதிகள் மற்றும் வழிபாட்டு நேரங்களை நீங்கள் துல்லியமாக அறிந்துகொள்ளலாம். இதன் மூலம் எந்தெந்த நாட்களில் என்னென்ன வாகனச் சேவைகள் நடைபெறுகின்றன என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு, கூட்ட நெரிசலின்றி நரசிம்மரின் அருளையும் சகல தோஷ நிவர்த்தியையும் நேரடியாகப் பெற்று மகிழ முடியும்.