ஈசனை பரீட்சிக்க நினைத்த பார்வதிக்கு ஈசன் புகட்டிய பாடம்!

Lord shiva and Parvati devi
Lord shiva and Parvati devi
Published on

இன்று (24-07-2024) சங்கடஹர சதுர்த்தி. விநாயகரை வழிபடும் நன்னாள். இந்நாளின் தாத்பரியமும் பின்னணி கதையும் என்ன என்பதை தெரிந்து கொள்ளவோமா?

இறை நம்பிக்கைக்கு இணையான பூஜையோ வழிபாடோ கிடையாது. முப்பது முக்கோடி தேவர்கள் முதல் ஓரறிவு கொண்ட உயிரினங்கள் வரை எல்லா ஜீவன்களுக்கும் படியளப்பவர் பரமேஸ்வரன். இதை அறியாதவளா பார்வதிதேவி? ஆனாலும் அவளுக்கு, ‘இந்தத் தொழிலை ஈசன் சரிவர கவனிக்கிறாரா?’ என்றொரு சந்தேகம். அதற்குத் தீர்வு காண முனைந்தாள்.

சிறு பாத்திரம் ஒன்றை எடுத்து வந்து அதற்குள் கறுப்பு எறும்புகள் சிலவற்றைப் பிடித்துப் போட்டு மூடி விட்டாள். ‘இந்த எறும்புகளுக்கு ஈசன் எப்படி உணவு அளிக்கிறார், பார்க்கலாம்!’ என்பது அவளது எண்ணம்.

இதையும் படியுங்கள்:
சிவனின் அருளை எளிதில் பெறுவதற்கான வழிகள்!
Lord shiva and Parvati devi

இதைத்தொடர்ந்து மறுநாள், "ஸ்வாமி, நேற்று எல்லா ஜீவராசிகளுக்கும் படியளந்தீர்களா?” என்று ஈசனிடம் கேட்டாள். உலகநாயகி தன்னோடு விளையாடுகிறாள் என்பது ஈசனுக்குப் புரிந்தது. ஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், ”இதிலென்ன சந்தேகம். பாத்திரத்தில் நீ சிறை வைத்த எறும்புகளைப் பார்த்திருந்தால், இந்தக் கேள்விக்கே இடம் இருந்திருக்காது!” என்றார்.

பார்வதிதேவி, ஓடோடிச் சென்று பாத்திரத்தைத் திறந்து பார்த்தாள்! சுறுசுறுப்புடன் சுற்றிக் கொண்டிருந்தன எறும்புகள். அத்துடன் சில அன்னப் பருக்கைகளும் கிடந்தன. ‘ச்சே… வீணாக ஸ்வாமியை சந்தேகப்பட்டு விட்டோமே!’ என வருந்தினாள் தேவி. 

"மகேஸ்வரி… உனது ஐயம் விலகியதா?”- குறும்பாகக் கேட்ட பரமேஸ்வரன், ”சரி, சரி… விநாயகன் உன்னைத் தேடிக் கொண்டிருந்தான். போய்ப் பார்!” என்றார். விநாயகரைச் சந்தித்த பார்வதிதேவி அதிர்ந்து போனாள். ஒட்டிய வயிறும் வாடிய முகத்துடனும் இருந்தார் கணபதி. ஏனம்மா அப்படிப் பார்க்கிறீர்கள்?எல்லாவற்றுக்கும் தாங்கள்தான் காரணம்." என்றார் விநாயகர்.

"என்ன சொல்கிறாய் கணேஷா?” படபடப்புடன் கேட்டாள் பார்வதிதேவி.

"அன்னையே… அகிலம் ஆளும் நாயகனின் நித்திய தர்ம பரிபாலனத்தில் சந்தேகம் கொண்டது தாங்கள் செய்த முதல் தவறு. அடுத்தது, அப்பாவி எறும்புகளை பட்டினி போடும் விதமாக சிறையிட்டது. தாயின் பழி தனயனைத் தானே சாரும். எனவே, எறும்புகளின் பசியை நான் ஏற்றுக் கொண்டு தாங்கள் எனக்களித்த அன்னத்தை, எறும்புகளுக்கு இட்டேன். பட்டினி கிடந்ததால், எனது வயிறு சிறுத்துப் போனது," என விளக்கி முடித்தார் விநாயகர்.

இதையும் படியுங்கள்:
முருகனுக்கு உரிய செவ்வாய்க்கிழமை விரதத்தின் மகிமை!
Lord shiva and Parvati devi

பார்வதிதேவி கண் கலங்கினாள். விநாயகரை அழைத்துக் கொண்டு சிவனாரிடம் சென்றவள், ”ஸ்வாமி, என்னை மன்னியுங்கள். நான் செய்த தவறுக்கு நம் மகனை வதைக்க வேண்டாம்!” என்று வேண்டினாள்.

”வருந்தாதே தேவி! பக்தர்கள் என்பால் வைக்கும் நம்பிக்கை, சற்றும் குறைவில்லாததாக இருக்க வேண்டும். அந்த ‘நம்பிக்கை’க்கு இணையான பூஜையோ வழிபாடோ கிடையாது. இதை, உலக மக்களுக்கு உணர்த்த நடந்த திருவிளையாடலே இது. அன்னபூரணியான நீ, உன் பிள்ளைக்கு அன்னம் அளித்தாய். அவன், அதை எறும்புகளுக்கு வழங்கினான். விநாயகனின் பெருமையைப் போற்றும் வகையில், அவை இனி பிள்ளையார் எறும்புகள் என்றே அழைக்கப்படட்டும்!” என்று அருளினார்.

பிறகு பார்வதியிடம், "எறும்பு உண்டது போக, மீதம் உள்ள அன்னப் பருக்கைகளை விநாயகனுக்குக் கொடு" என்றார். அப்படியே செய்தாள் பார்வதி. அந்த பருக்கைகளை உண்ட விநாயகரின் வயிறு பழைய நிலைக்குத் திரும்பியது. அவரது பசியும் தீர்ந்தது. இந்த அருளாடல் சம்பவம், தேய்பிறை சதுர்த்தி திதி நாளில் நிகழ்ந்தது. இதையே சங்கடஹர சதுர்த்தி நாளாக அனுஷ்டித்து விநாயகரை வழிபடுகிறோம்.                  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com