
பேச்சியம்மன் என்ற பெயர் பேய் என்ற சொல்லில் இருந்து தோன்றியது. பேச்சி என்பவள் வன தேவதை, உக்ர தேவதை. பே என்றால் பெரிய; மற்றும் பேய் என்றால் ஆற்றல் மிகுந்த, அச்சம் தரத்தக்க (குறள் 565) என்ற பொருளில் வழங்கப்படும். மதுரையில் பேச்சியம்மன் கோயில் உண்டு.
பேச்சியம்மன் தனிப்பெண் தெய்வம் ஆவாள். சூனியம் வைத்தவர்களை வனப்பேச்சியம்மன் கருவறுப்பாள். அழிக்க நினைப்பவர்களை அழித்து விடுவாள். பிற்காலத்தில் இவளது கோயில்களில் காவல் தெய்வமாக கருப்பசாமி, சுடலை மாடன் போன்றோர் இடம்பெற்றனர். ஆனால் பேச்சியம்மன் எந்த ஆண் தெய்வத்திற்கும் மனைவியோ, மகளோ கிடையாது.
வனப்பேச்சி
பொதிகை மலையில் கொட்டுதளம் என்ற இடத்தில் வனப்பேச்சி அம்மன் கோவில் உள்ளது. அங்கு அணை கட்டப்பட்டபோது அவளைக் கீழே அடிவாரத்தில் கொண்டு வந்து கோவில் கட்டிவணங்கினர். மேல் அணையில் இருந்து தீர்த்தம் கொண்டு வந்து சித்திரை மாதக்கடைசி செவ்வாய் அன்று இக்கோவிலில் அபிஷேக ஆராதனைகள் நடத்துவார்கள். இங்கு இசக்கி அம்மனும் சேர்ந்திருப்பது ஒரு புதுமையாகும்.
நீலகண்டப் பேச்சி
வனப்பேச்சி கோவிலின் பலாமரத்தடியில் நீலகண்டப் பேச்சி எனப்படும் பேச்சி அம்மன் நாகர் வடிவில் உள்ளாள். நீலகண்டம் என்பது கழுத்தில் (அறிவியல்படி பல்லில்) விஷத்தை வைத்திருக்கும் பாம்பைக் குறிக்கின்றது. ஆதியில் மனித குலத்திற்கு நாக தெய்வமே முதல் குல தெய்வம் ஆகும். நாக தெய்வம் நாகர்களின் (குமரிக் கண்டத்தினரின்) குல முதுவர் ஆகும். தொல் தமிழ்த் தெய்வமான நீலகண்டப் பேச்சி பாம்பு ரூபத்தில் வழிபடப் படுகின்றாள். இவள் தாய் என்பதால் பக்தைகளுக்கு சுகப்பிரசவம் அருள்வாள்.
பேய்ச்சியின் மகன் சுடலை
இங்குள்ள சுடலை மாடன், பேச்சி அம்மனின் மகனாவார். பக்தி இயக்க காலத்தில் தான் கணவன் உறவு சாமி கதைகள் வந்தன. அதுவரை மூத்தவள் தாய், இளைஞன் மகன் என்ற சாமிகளே இருந்தன. தென் மாவட்டங்களின் வில்லுப்பாட்டு கதைகளில் இவ் உறவும் சிவனும் சேர்க்கப்பட்டுள்ளனர். தாயிடம் உத்தரவு பெற்று சுடலைமாடன் வேட்டைக்குப் போவார்.
ஒரே கதை
தூத்துக்குடி அருகே காயாமொழி அருகே புகழ்பெற்ற பேச்சி அம்மன் கோவில் உள்ளது. பெரியாச்சி அம்மனுக்குச் சொல்லப்படும் கதை இந்த பேச்சி அம்மனுக்கும் சொல்லப்படுகிறது.
பெரியாச்சி கதை
கொடுங்கோலனாகிய வல்லாளன் என்ற ஒரு மன்னன் மனைவி கருவுற்றிருந்தாள். அவள் வயிற்றில் இருக்கும் குழந்தை தரையில் விழுந்தவுடன் அந்த நாடு அழிந்து விடும் என்று ஒரு சாபம் இருந்தது. எனவே மன்னனின் மனைவி மகாராணி குழந்தை பிறக்க விடாமல் வயிற்றிலேயே இறந்து போக வேண்டும் என்று திட்டமிட்டாள். ஆனால் முறைப்படி அவளுக்குப் பிரசவ வலி வந்தது. அவளுக்குப் பிரசவம் பார்க்க யாரும் முன் வரவில்லை.
ஒரு மூதாட்டி தானே வந்து ராணிக்குப் பிரசவம் பார்த்து குழந்தை பூமியில் விழாதபடி கையில் ஏந்தி கொண்டாள். இதனால் அந்த நாடும் மன்னனும் அழிவிலிருந்து தப்பித்தனர். இந்த மூதாட்டி பெரிய ஆச்சியம்மன் ஆவார். அவள் தன்னைக் காளியின் அவதாரம் என்றாள்.
உருவமும் வழிபாடும்
பேச்சியம்மனைக் காளிக்கு நிகராக உருண்டைக் கண்களும் நீண்ட நாக்கும் விரித்த சடையும் தலையில் அக்கினி கிரிடமும் வைத்து சிலை செய்துள்ளனர். திரிசூலம், கத்தி, வாள், பிள்ளை மண்டையோடு சாட்டை போன்ற ஆயுதங்களை இப்பேச்சி வைத்திருக்கிறாள். சில ஊர்களில் பேச்சி அம்மனை வயதான மூதாட்டி உருவத்திலும் சிலை செய்து வணங்குகின்றனர்.
வனதுர்காவுக்குரிய காயத்ரி மந்திரத்தை வனப்பேச்சிக்கும் சொல்லி சிலர் வணங்குகின்றனர்.
ஓம் உத்திஷ்ட புருஷ்யை வித்மஹே
மகா சக்த்யை தீமஹி
தன்னோ வன துர்கா ப்ரசோத்தயாத்.