சாந்த ஸ்வரூபி இந்த அங்காள பரமேஸ்வரி!

அங்காள பரமேஸ்வரி
அங்காள பரமேஸ்வரி
Published on

பேரளம் காரைக்கால் சாலையின் ஒரு புறத்தில்  ஒரு அலங்கார வளைவில் அங்காளபரமேஸ்வரி கோவில் என்று எழுதப்பட்டிருக்கும். அதுதான் கோவிலை நோக்கிச் செல்லும் நுழைவு வாயில். அது  வழியே உள்ளே சென்றால் அழகிய கொட்டூர் கிராமம்.  சுற்றிலும் பச்சைப் பசேல் என்று வயல் வரப்பும்,  மரங்களும் சூழ்ந்தது.  அங்கே கொலுவிருந்து சுற்றிலும்  உள்ள நன்னிலத்தின் ( திருவாரூர் மாவட்டம்) பல்வேறு கிராமத்தைச் சார்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்களின் குலதெய்வமாக அருளாட்சி செய்கிறாள் அங்காளபரமேஸ்வரி.

அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் அம்பரன் என்ற அசுரனை கொன்ற செய்தியை அவள் தோழி 'கொடுகொட்டி' என்னும் வாத்தியத்தை முழக்கி இங்கே அறிவித்ததால் கொட்டூர் என்ற பெயர் வந்ததாகச் சொல்லப்படுகிறது.  

பொதுவாக உக்ர ரூபத்திலோ, அசுரன் தலை மீது கால் வைத்தோ இருப்பதுபோல் இல்லாமல், தாமரை மீது கால் பதித்தவாறு, அந்த மலரினும் மென்மையானவளாய் தன்னை நாடி வருபவர்களுக்கெல்லாம் அருளாசியை வாரி  வாரி வழங்குகிறாள் அன்னை. பீடத்திற்கு கீழே ஸ்ரீசக்கர யந்திரம். அபிஷேகம் அம்பாளுடன் ஸ்ரீசக்கிரத்திற்கும் சேர்த்துத்தான்.

பிரதானமாக அங்காளபரமேஸ்வரி . கர்ப்பக்கிரகத்திற்கு வெளியே ஒரு புறம் கணபதி, இன்னொருபுறம் சிவபெருமானே அகோர வீரபத்திரர் வடிவில். சமஸ்கிருதத்தில் கோர என்றால் உக்கிரகம் என்று பொருள். அகோர என்றால் சினம் கொள்ளாத அதாவது சாந்தமான என்று அர்த்தம்.  (தமிழில் அகோரம் என்பது வேறு பொருளில் பயன்படுத்தப்படுகிறது) இந்த மூன்று தெய்வங்களுக்கும் பரம்பரை சிவாச்சாரியார்கள் சிரத்தையோடு தினம் பூஜை செய்கிறார்கள். பரிவார தெய்வங்களான பாவாடைராயன்,  பெரியாண்டவர், பேச்சியம்மன், காட்டேரியம்மன், பெரியநாயகியம்மன் முதலியோருக்கு பூசாரி தினமும் பக்தியோடு அலங்காரம் செய்கிறார். அவர்களெல்லோருமும் சாந்தரூபிகளே.

இதையும் படியுங்கள்:
சுயஅன்பு என்பது சுயநலமா?
அங்காள பரமேஸ்வரி

இந்தக் கோவிலை குலதெய்வமாகக் கொண்டோர் பல வேறு ஊர்களில், நாடுகளில் பரவியுள்ளனர். (இயக்குனர் கே.பாலசந்தருக்கும், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் தாய்வழி உறவினருக்கும் குலதெய்வம்).

கிராமத்திற்குள்ளே இருந்தாலும் பெரும்பாலும் தினம் இங்கே அன்னதானம் நடக்கிறது. அதுவும் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு உபயதாரர் எங்கிருந்தெல்லாமோ தானே உவந்து ஏற்பது என்பது ஆச்சரியம் என்பதைவிட அன்னையின் அனுக்ரஹம் என்றுதான் சொல்ல வேண்டும். 

கோவிலின் உள்ளே அன்னையின் கருணை நிழல். வெளியே பளிங்கு போன்ற குளமும், குளக்கரையில் அரசமரம், வேப்பமரம், மற்ற தருக்களின் நிழல்.  உள்ளமும், உடலும் குளிர்ந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com