‘பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பல கோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள்
மணிவண்ணா உன் செவ்வடி செவ்விதிருக்காப்பு’
என்று திருப்பல்லாண்டு பாடி திருமாலுக்கே காப்பிட்டவர் (திருஷ்டி கழித்தவர்) பெரியாழ்வார்தான். இன்று பெரியாழ்வாரின் திரு நட்சத்திரம். ஆஷாட ஏகாதசி நன்னாளும் கூடிய இன்று திருமால் மீது தீராத பரிவு காட்டி, அதனால் பெரிய பரிசு பெற்ற ஆழ்வாரான பெரியாழ்வாரை பற்றி அறிந்து கொள்வது எவ்வளவு பொருத்தம்!
ஒரு சமயம், மதுரையை ஆண்டு வந்த வல்லப தேவ பாண்டியனின் சந்தேகத்தை தீர்த்து வைத்து, சமய வாதத்தில் வென்று, அரசனால் அளிக்கப்பட்ட பட்டத்து யானை மீதமர்ந்து வந்தார் பெரியாழ்வார். அப்பொழுது திருமால் திருமகளோடு வானத்தில் தோன்றி, கருட வாகனத்தில் எழுந்தருளி இருப்பதைக் கண்டு திருமாலின் அழகில் மயங்கி, எங்கே பகவானுக்கு கண் திருஷ்டி ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சி, பரிந்து அருளியதே திருப்பல்லாண்டு.
ஸ்ரீ வில்லிபுத்தூரில் வடபத்ரசாயிக்கு சூட்டவென்றே அழகாய் ஒரு நந்தவனம் அமைத்து, அந்த நந்தவன பூக்களைக் கொண்டு பகவானுக்கு மாலைகளை தொடுத்து வழங்கி வந்தார் பெரியாழ்வார். பூமாலைகள் தொடுத்து தம்மை வழிபட்டவருக்கு பாமாலைகள் கொண்டு தம்மை தொழுது வணங்க ஒரு அழகான பாவையான ஆண்டாளையே அதே நந்தவனத்தில் துளசி மாட த்தின் கீழ் பெரியாழ்வாரின் பெண் குழந்தையாக பரிசளித்து மகிழ்ந்தார் பெருமாள். பரிவோடு மாலைகள் சூட்டியவருக்குப் பரிசாக பூ மாலைகளோடு பாமலைகளையும் சூட்டும் கோதையை மட்டுமா தந்தார் திருமால்? தந்தையும் மகளும் மாறி மாறி செய்யும் பக்தியை மெச்சி பெரியாழ்வாரை தம் மாமனாராகவே அல்லவா ஏற்றுக்கொண்டார்! இந்தப் பேறு யாருக்குக் கிடைக்கும்?
தன்னை யசோதையாக பாவித்துக் கொண்டு ஒரு தாயின் பரிவோடு பெரியாழ்வார் கண்ணனை தாலாட்டி, பூச்சூட்டி, நீராட்டி அழைக்கும் பாசுரங்கள் அத்தனையும் கண்ணில் நீர் ததும்ப வைக்கும் பிரபந்த பாசுரங்கள். ‘மண்ணில் விளையாடி உடம்பெல்லாம் மண் ஒட்ட நிற்கிறாயே கண்ணா, நீராட வாராய்’ என்பார் ஒரு பாசுரத்தில். இன்னொரு பாசுரத்தில், ‘உனக்கு பசிக்குமே பாலும், தேனும், அப்பமும் வைத்திருக்கிறேன் சாப்பிட வாராய்’ என்பார். இப்படி ஒவ்வொரு பாசுரத்திலும் தாயின் பரிவோடு கண்ணனை நம் கண் முன்னே நிறுத்தியவர் பெரியாழ்வார்தான்.
இந்த நன்னாளில் பெரியாழ்வாரின் திருவடிகளை மனதில் நினைத்துப் பூரிப்போம். அவரைப் போல இறைவன் மீது நமக்கு பக்தியும், பரிவும் ஏற்பட பெரியாழ்வாரையே பிரார்த்திப்போம்.