

கோவையில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் பேரூர் என்ற ஊரில் இந்த சிவத்தலம் (Perur Pateeswarar Temple) அமைந்துள்ளது. இது ஒரு சைவ சமய கோயில்.
திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற தலமாகும். இந்த கோவில் நொய்யல் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. கரிகால் சோழனால் இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மிகவும் பழமையான கோயில் ஆகும்.
சுமார் 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில். அருணகிரிநாதர் பாடல் பெற்ற ஸ்தலமாகும். இங்குள்ள சிவன் பட்டீஸ்வரர்; அம்மன் பச்சை நாயகி என்ற பெயருடன் அருள்பாலிக்கிறார்கள்.
இங்குள்ள சிவன் சுயம்பு லிங்கமாக தோன்றியதாக வரலாறு கூறுகிறது. சிற்ப கலைக்கும் கட்டடக்கலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இங்குள்ள சிற்பங்களை புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை. இங்குள்ள தலவிருட்சம் பிறவாப்புளி மற்றும் இறவா பனை ஆகும். வடமொழியில் இக்கோவிலின் பெயர் பிப்பலா ரன்னியம்.
இந்த இடம் முக்தி ஸ்தலமாகும். மிகவும் தொன்மையும் பழமையும் வாய்ந்த கோவிலாக உள்ளது. ஆறாம் நூற்றாண்டில் அப்பர் பெருமான் இந்த கோவிலை பற்றி புகழ்ந்து பாடி உள்ளார். எட்டாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் இங்கு ஒரு வைணவ ஆலயத்தை நிறுவினான்.
இந்தக் கோவிலில் புகழ்பற்ற கனகசபை உள்ளது. இங்குள்ள தெப்பக்குளம் மிகவும் அழகாக இருக்கும். 16 வளைவுகளை கொண்டுள்ளது. பல தேவர்களும் அரசர்களும் இக்கோவிலுக்கு வருகை தந்து இறைவனை வழிபட்டுள்ளனர்.
ஐம்பெரும் தேவர்களுக்கு இடமாகிய ஐந்து மலைகள் இந்தக் கோவிலை சுற்றி உள்ளன. வெள்ளிமலை, அய்யாசாமி மலை, பிரம்மன் மலை, விஷ்ணு மலை, மருதமலை இவைகளால் சூழப்பட்டுள்ளது இந்த கோவில். இந்த இடத்தில் ஐந்து அதிசயங்கள் நடைபெற்றதாக புராணங்கள் கூறுகின்றன.
இறவா பனை: இதன் ஆண்டுகளை கணக்கிட முடியாது. எனவே இங்குள்ள பனை இறைவா பனை என்று அழைக்கப்படுகிறது. இந்த பனைஇறவா தன்மை கொண்டது.
பிறவா புளி: இந்த புளியமரம் கோவிலின் எதிர்புறம் உள்ளது. இந்த மரத்தில் கனிகள் விதைகள் முளைப்பதில்லை.
இவை இரண்டும் கோவிலின் புராண நம்பிக்கையின்படி இறப்பு, பிறப்பு இல்லாத அதிசய மரங்கள்.
புழுக்கா சாணம்: இந்தக் கோவிலை சுற்றி உள்ள மாடுகள் சாணம் போட்டால் அவை எத்தனை நாட்கள் ஆனாலும் புழுக்கள் தோன்றுவதில்லை அதுபோல எங்களுடைய சிவனை வழிபட்டவர்களுக்கு மேலும் பிறப்பில்லை என்பதை குறிக்கிறது.
உயிர் பிரியும்போது செவி மேலாக இருத்தல்: இந்த இடத்தில் இறப்பவர்களின் வலது காது மேல் பக்கமாக திரும்பி நிற்கும். இன்றும் இப்படித்தான் இறக்கிறார்கள். அவர்களின் உயிர் பிரியும்போது இறைவன் அவர்களது வலது காதில் உபதேசம் செய்வதாக ஐதீகம்.
செம்பு பொன்னாகுதல்: இங்கு பிரம்ம தீர்த்தம், குண்டிகை தீர்த்தம் என இரண்டு கிணறுகள் உள்ளன. இந்தக் கிணற்றில் குளிப்பவர்களுக்கு பைத்தியம் மற்றும் தீராத வியாதிகள் குணமடைந்ததாக ஐதீகம். இங்க குளிக்க வருபவர்கள் ஒரு செப்பு காசை கிணற்றில் போடுவார்கள். அந்த காசுகள் தங்கம் போன்றும் மின்னும். 1918 ஆம் ஆண்டு இந்த கிணறுகளை தூர் வாரும்போது அதில் இருந்த செப்புகாசுகள் பொன்னாக மாறி இருந்தது.
இந்த இடம் முக்தி ஸ்தலமாக விளங்குகிறது . முக்தி ஸ்தலமாக இருப்பதால் இங்கு உள்ள பைரவருக்கு நாய் வாகனம் கிடையாது. அம்மன் சன்னதிக்கு வெளியே வரதராஜ பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்கள். திருவாதிரை மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சிதம்பரத்திற்கு அடுத்தபடியாக இருப்பதால் இது மேல சிதம்பரம் என அழைக்கப்படுகிறது. இங்குள்ள சிவனுக்கு ஆண்டுக்கு பத்து முறை அபிஷேகம் நடைபெறும்.
இந்தக் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. அண்ணன் விஷ்ணுவின் தங்கையாக அம்பாள் உள்ளே நுழைவதாக ஐதீகம். சுந்தரமூர்த்திக்கு நடராஜர் நடனமாடி காட்டிய இடமாக உள்ளது.
காலை 6 மணி முதல் ஒரு மணி வரை மாலை 4 மணி முதல் 8:30 மணி வரை நடை திறந்து இருக்கும். இங்கு தை அமாவாசை ஆடி அமாவாசை மற்றும் பிற அம்மாவாசைகளில் திதி கொடுப்பது சிறப்பானதாக கருதப்படுகிறது. எனவே அந்த சமயங்களில் இக்கோவிலில் கூட்டம் அதிகமாக காணப்படும்.