
கோயம்புத்தூரில் இருந்து மேற்கு திசையில் ஆறாவது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பேரூர் என்னும் பாடல் பெற்ற திருத்தலம். நால்வரால் பாடல் பெற்ற இக்கோயில் மேலசிதம்பரம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு நடராஜ பெருமான் ஆனந்தத் தாண்டவம் ஆடியபோது அவரது காலில் அணிந்து இருந்த சிலம்பு தெறித்து சிதம்பரத்தில் விழுந்ததாக செவிவழி செய்தி உண்டு.
இந்தக் கோயிலில் ஐந்து அதிசயங்கள் உள்ளன. அவை இறவாத பனை, பிறவாத புளி, புழுக்காத சாணம், கல்லாகும் எலும்பு, வலது காது மேல் நோக்கிய நிலையில் இறப்பது ஆகியவை ஆகும்.
இறவாத பனை: பல ஆண்டு காலமாக இன்றும் பசுமை மாறாமல் இளமையாகவே ஒரு பனைமரம் நின்று கொண்டிருக்கிறது. இந்த மரத்திற்கு இறப்பு என்பது எப்போதுமே கிடையாதாம். இந்தப் பனை மரத்தின் பட்டையை எடுத்து கஷாயம் போட்டு குடித்தால் தீராத வியாதியெல்லாம் தீரும் என்கிறார்கள்.
பிறவாத புளி: பிறவாத புளி் என்று போற்றப்படும் புளியமரம் இத்தலத்தில் இருக்கிறது. இந்தப் புளிய மரத்தின் கொட்டைகள் மீண்டும் முளைப்பதே இல்லையாம். புளியம்பழத்தின் கொட்டைகளை மீண்டும் முளைக்க வைப்பதற்காக வெளிநாட்டில் இருந்து வந்த விஞ்ஞானிகள் பலர் எவ்வளவோ முயற்சி செய்தும் முளைக்கவே இல்லை. இந்த புளியமரம் இந்த பிறவி மட்டுமே என்று வரம் வாங்கி வந்துள்ளது. அதனால் பிறவாத புளி் என்றழைக்கிறார்கள்.
புழுக்காத சாணம்: இக்கோயில் இருக்கிற பேரூர் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆடு, மாடு போன்ற கால்நடைகளின் சாணம் மண்ணில் கிடந்தால் எத்தனை நாட்கள் ஆனாலும் அவற்றிலிருந்து புழுக்கள் உண்டாவதே இல்லையாம்.
மனித எலும்புகள் கல்லாவது: இத்தலத்தில் யாரேனும் இறந்துவிட்டால் அந்த உடலை எரித்த பிறகு மிச்சமாகும் எலும்புகளை இந்த ஆத்மா புண்ணியம் பெற வேண்டும் என்பதற்காக இங்குள்ள நொய்யல் ஆற்றில் விடுவார்களாம். அப்படி ஆற்றில் விடப்படுகிற எலும்புகள் சிறிது காலத்தில் கற்களாக மாறி கண்டெடுக்கப்படுகிறதாம். அதுதான் பட்டீஸ்வரரின் திருவருள்.
வலது காது மேல் நோக்கிய நிலையில் இறப்பது: பேரூரில் மரணமடையும் மனிதன் முதல் அனைத்து ஜீவராசிகளும் இறக்கும் தருவாயில் தமது வலது காதை மேல் நோக்கி வைத்தபடிதான் மரணம் அடைகின்ற அதிசயமும் இங்கு இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த ஊரில் இறந்து போகின்றவர்கள் அனைவரும் மறுபிறப்பில்லா முக்தி அடைவார்களாம். ஏனென்றால், இறந்துபோகிற அவர்களின் காதில் சிவபெருமானே நேரடியாக வந்து ‘நமச்சிவாய’ என்று சொல்லி மறுபிறப்பில்லா முக்தியை வழங்குகிறார்.
இந்த அதிசயங்களை நடத்திக் கொண்டிருக்கின்ற பட்டீஸ்வரர் அமைதியாகத்தான் காட்சி தருகிறார். ஆனால், இவரின் வரலாறு ஆச்சரியத்தை தருகின்றது. முன்பு இந்தக் கோவில் இருந்த இடம் அரச மரங்கள் நிறைந்த காடாக இருந்ததாம். அப்போது பல பசுக்கள் இங்கு வந்து மேய்ந்து கொண்டிருக்கும். அதில் ஒரு மாடு மட்டும் அருகில் உள்ள பாம்பு புற்றின் மீது பாலை சொறியுமாம். இதைப் பார்த்த ஒருவன் மற்றவர்களிடம் சொல்ல, அவர்கள் அந்த இடத்தை தோண்டும்போது கிடைத்தவர்தான் இக்கோயில் பட்டீஸ்வரர்.
இவரது சிரசில் ஐந்து தலை நாகம், மார்பில் நாகப் பூணூல், தலையில் அழகழகாய் சடை கொத்துகள் காணப்பட்டன. அதேபோல், கங்கை மற்றும் அன்னமும், பன்றியுமாய், பிரம்மா விஷ்ணு அடிமுடி தேடிய அடையாளங்ககளோடு பட்டீஸ்வரர் தலையில் பசுவின் கால் குளம்புகள் மூன்றும் கொம்பு முட்டிய தழும்பும் காணப்படுகின்றன. மூலவருக்குப் பின்புறம் பன்னீர் மரங்கள் பூக்களை சொறிந்து கொண்டிருக்கின்றன.
ஒரு சமயம் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்திரத்தன்று கோயிலுக்கு திடீரென்று வந்திருக்கின்றான் மன்னன் திப்பு சுல்தான். இக்கோயில் அதிசயங்களை பார்க்க வந்தவனுக்கு மீண்டும் ஒரு அதிசயத்தையும் இறைவன் காண்பித்தான். இக்கோயில் சிவலிங்கம் அடிக்கடி அசையும் என்று கூறியதை நம்பாமல் சிவலிங்கத்தின் மீது கை வைத்து பார்த்திருக்கிறான் மன்னன் திப்பு சுல்தான். அப்போது அவன் உடலில் அதிர்வுகள் தோன்றி இருக்கின்றன. நெருப்பின் மீது கை வைப்பது போல் உணர்ந்து துடித்திருக்கிறான். கண்கள் இருண்டு கீழே விழுந்தவன் சிறிது நேரத்திற்கு பின் சுயநினைவு அடைந்து தனது செயலுக்கு வருந்தி கண்ணீர் மல்க கை தொழுது பட்டீஸ்வரர் தன்னை மன்னிக்குமாறு வேண்டி இருக்கின்றான். அதோடு, கோயிலுக்கு நிலங்களையும் மானியமாக தந்திருக்கிறான். இந்த அரசனை போன்று ஹைதர் அலியும் நிலங்களை மானியங்களாக தந்து இருப்பதாக கல்வெட்டு செய்திகள் காணப்படுகின்றன.
இக்கோயிலின் தல விருட்சம் அரச மரமாகும். இங்குள்ள அம்மனின் பெயர் பச்சைநாயாகியாகும். பச்சை நிறமாகிய மரகதக் கல்லில் அன்னை எழில் ஓவியமாக எழுந்தருளியிருக்கிறாள். வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் தரும் கற்பக விருட்சமாகக் காட்சி தருகின்றாள். இவளின் சன்னிதி முன்பு சிங்கமொன்று சிலை வடிவில் காட்சி தருகின்றது. அதன் வாயினுள் உருண்டை கல்லொன்று உருளுகின்றது. கல் வெளியில் வராதவாறு சிங்கத்தின் பற்கள் இருக்கின்றன. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சுழல் தாமரை, நான்கு புறமும் தொங்கும் கல்லால் ஆன சங்கிலிகள் போன்ற ஏராளமான சிற்பங்கள் இந்த ஆலயத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, இக்கோயிலின் வடபக்கம் உள்ள பெரிய மண்டபம் 94 அடி நீளமும் 38 அடி அகலமும் கொண்டது. இந்த மண்டபத்தை 16 அடி உயரமுள்ள 36 பெரிய கல் தூண்கள் தாங்கி நிற்கின்றன. கோயிலின் வடமேற்கில் பிரம்ம குண்ட விபூதி எனப்படும் திருநீறு மேடை இன்றும் காணப்படுகிறது. முருகன் பழனியில் உள்ளதைப் போன்றே மேற்கு நோக்கி தண்டபாணி தெய்வமாய் பக்தர்களுக்குக் காட்சி தருகின்றான்.
சுந்தரர் எந்த ஊர் சென்றாலும் செலவுக்கு இத்தல இறைவனிடம் காசு கேட்பார். இறைவனும் இவர் சொல்லைத் தட்டாது பணம் கொடுப்பாராம். செல்வச் செழிப்போடு இருந்த ஈசனுக்கே ஒரு சமயம் பணத் தட்டுபாடாம். சுந்தரர் வந்தால் பணம் கேட்பானே என்ன செய்வது என்று யோசித்த பட்டீஸ்வரர், நிலத்தில் நாற்று நடும் கூலி தொழிலாளியாய் பச்சையம்மனுடன் சேர்ந்து நாற்று நடும்போது சுந்தரர் பார்த்து விடுகிறார்.
அவரை அழைத்து வந்து ஆட வைக்கிறாராம். சுந்தரருக்காக அம்பலத்தில் ஆடினான் இறைவன். அதைக் கண்டு மகிழ்ந்து பாடினார் சுந்தரர். பேரூரில் இறைவனும் இறைவியும் நடவு நட்ட வரலாற்றை இன்றும் மக்கள் ஆனி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரத்தன்று உற்சாகமாய் கொண்டாடி மகிழ்கின்றார்கள். பேரூர் பட்டீஸ்வரர் அதிக ஆற்றல் கொண்டவராக அந்த ஊரில் உள்ள எல்லோருக்கும் பாரபட்சமே இன்றி மறுபிறப்பில்லாத முக்தியை வழங்குகிறாராம்.