
குன்றைக் குடைந்து அமைக்கப்பட்ட குடைவரைக் கோயில்தான் பிள்ளையார்பட்டி. சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்ட கோயில் என்பதைக் கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது. பல்லவர்களுக்கு முன்பே குடைவரைக் கோயில்களை அமைத்த பெருமை முற்கால பாண்டியர்களுக்கு உண்டு. பெருபரணன் என்ற மன்னனின் பெயர் கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருக்கிறது.
ஆக, இந்த ஆய்வின்படி மகேந்திரவர்ம பல்லவன் காலத்துக்கும் முன்பு இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்தது இந்தக் குடைவரைக் கோயில் பிள்ளையார்பட்டி என்பது இன்றைய வழக்கில் இருக்கும் பெயர்தான். எருக்காட்டூர், மருதங்குடி, திருவீங்கைக்குடி, திருவீங்கைச்வரம், இராச நாராயணபுரம். மேலும், மருதங்கூர், தென்மருதூர், கணேசபுரம், கணேச மாநகரம், பிள்ளைநகர் என்ற பெயர்களும் உண்டு. கல்வெட்டுக்கள் மூலம் இத்தலத்தின் முற்காலப் பெயர்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது.
'கற்பக விநாயகர்' திரு உருவம் காலத்தால் பழைமை வாய்ந்த வடிவமாகும். வலது கையில் ஒரு சின்ன லிங்கமும் இடது கரத்தைத் தனது தொந்தியைச் சுற்றியுள்ள வயிற்றுக் கச்சையின் மீது வைத்துக் கொண்டும் அமர்ந்திருக்கிறார்.
தும்பிக்கை வலமாக சுழித்துக் கொண்டிருக்கும். வலம்புரியாக வளைந்த தும்பிக்கையும் தந்தங்களின் அமைப்பும் அழகாக அமைந்திருக்கிறது. மார்பில் முப்புரி நூல் இல்லாமல், வயிற்றை முப்பட்டையாலான உதரபந்தம் அலங்கரிக்க தலையில் மகுடம் சூடி வடக்கு நோக்கி அமர்ந்திருக்கும் இடமே பிள்ளையார்பட்டி.
விநாயகப் பெருமான் கயமுகாசுரனைக் கொன்று விடுகிறார். இந்த பழி விலக சிவபெருமானை நோக்கி தவம் இருக்கிறார் விநாயகப் பெருமான். சிவபெருமானை வடக்கு நோக்கி அமர்ந்து பூஜித்தற்கான ஐதீகத்தைக் கொண்டது இக்கோயில். புதிய கணக்கு தொடங்கல், வியாபாரம் ஆரம்பித்தல் போன்ற காரியங்களுக்கு இத்திருக்கோயில் மிக சிறப்பு வாய்ந்தது.
'கற்பகம்' என்று பெண்களுக்குத்தானே பெயர்? இந்த பிள்ளையார்பட்டியில் மட்டும் 'கற்பக விநாயகர்' என்ற பெயர் உள்ளதே! இதற்குக் காரணம் என்ன? 'கற்பக விநாயகர்' என்றால் பொருள் என்ன?
'கற்பகம்' என்றால் கேட்பதெல்லாம் கொடுப்பவர் என்று பொருளாமே. கல்+பக என்ற இரண்டு சொற்கள் சேர்ந்து உண்டான சொல்தான் 'கற்பக' என்ற சொல் உருவானது. 'கல்' என்றால் பாறை என்று பொருள். 'பக' என்றால் 'பகுத்தல்' (பிளத்தல்) என்றும் பொருள்.
கற்பக விநாயகர் என்றால் பிளவுபட்ட பாறையின் உள்ளே உள்ள பிள்ளையார் என்று பொருள். சுருங்கச் சொன்னால், "குடைவரைக் கோயிலில் உள்ள பிள்ளையார்" என்று பொருள்.
பிள்ளையார் பட்டியில் மட்டுமல்ல, குன்றக்குடியிலும் இதுபோன்றதொரு பிள்ளையார் உள்ளார். திருப்பரங்குன்றத்திலும் உள்ளார். ஏனைய குடைவரைக் கோயில் உள்ள இடங்களிலும் கற்பகவிநாயகர் இருப்பார்.