மோதகம் என்றாலே உடனே நினைவுக்கு வருபவர் விநாயகர். விநாயகருக்கு ‘மோதகப்பிரியன்’ என்ற பெயரும் உண்டு. விநாயகர் சதுர்த்தி அன்று மோதகம் நைவேத்தியமாகப் படைக்கப்படுவது மரபு.
பிள்ளையார் மூலவராக அருள்பாலிக்கும் பிள்ளையார்பட்டியானது முற்காலத்தில் எருகாட்டூர், மருதங்குடி, திருவீங்கைகுடி, திருவீங்கைச்வரம், இராசநாராயணபுரம் என்ற பெயர்களால் வழங்கப்பட்டுள்ளது என்பதை கல்வெட்டுக்களின் மூலம் அறிய முடிகிறது. சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ள கற்பக விநாயகர் திருக்கோயில் விநாயகருக்கு அமைந்த பெரிய குடைவரைக் கோயிலாகும். இங்குள்ள சிறிய மலையின் அடிவாரத்தில் கோயில் குடையப்பெற்று உள்ளது.
இக்கோயிலின் பிரதான தெய்வமான அருள்மிகு கற்பக விநாயகர் சுமார் ஆறு அடி உயரத்தில் வடக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். குடைவரைக் கோயிலான பிள்ளையார்பட்டி கோயில் சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் உருவாக்கப்பட்டது என்பதை கல்வெட்டுக்களின் மூலம் அறிய முடிகிறது. கோயிலின் ஒரு பகுதி குடைவரையாகவும் மற்றொரு பகுதி கற்றளியாகவும் அமைந்துள்ளது.
கற்பக விநாயகர் சன்னிதியானது குடைவரையாக மலையைக் குடைந்து உருவாக்கப்பட்டுள்ளதால் சன்னிதியை வலம் வர முடியாது. விநாயகரின் திருவுருவம் வடக்கு நோக்கியும் தும்பிக்கை வலது புறமாகவும் சுழித்து அமைந்துள்ளது தனிச் சிறப்பாகும்.
கற்பக விநாயகர் என்றால் நாம் வேண்டுவதை உடனடியாக தரக்கூடியவர் என்று பொருள். இத்தலத்து விநாயகர் ஶ்ரீ கற்பக விநாயகர் என்று அழைக்கப்பட்டாலும் தேசி விநாயகப் பிள்ளையார், கற்பகப் பிள்ளையார், கற்பக மூர்த்தி, கற்பக விநாயகர், வரத கணபதி, கற்பகக் களிறு, கணேசன், கணேசபுரேசன், மருதங்கூர் அரசு, மருதங்கூர் ஈசன் என இவருக்குப் பல திருநாமங்கள் உண்டு.
கற்பக விநாயகா் கோயில் காரைக்குடிக்கும் புதுக்கோட்டைக்கும் நடுவே பிள்ளையார்பட்டி என்ற ஊரில் அமைந்துள்ளது. காரைக்குடியிலிருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கற்பக விநாயகர் கோயில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே அமைந்துள்ளது. பிள்ளையார்பட்டி திருப்பத்தூரில் இருந்து குன்றக்குடி செல்லும் வழியில் எட்டு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
ஆண்டுதோறும் இங்கு விநாயகர் சதுர்த்தி பெருவிழா பத்து நாட்கள் விமரிசையாக நடைபெறுகிறது. இக்கோயிலில் விநாயக சதுர்த்தி அன்று உச்சிக்கால பூஜையின்போது 18 படி முக்குருணி அரிசியில் செய்யப்பட்ட மிகப்பெரிய கொழுக்கட்டை நைவேத்தியம் செய்யப்படுகிறது. 18 படி முக்குருணி அரிசி, 2 படி எள், 6 படி கடலைப் பருப்பு, 50 தேங்காய், 1 படி பசு நெய், 100 கிராம் ஏலக்காய், 40 கிலோ வெல்லம் ஆகியவற்றைக் கொண்டு இந்த கொழுக்கட்டை செய்து விநாயகப்பெருமானுக்குப் படைக்கப்படுகிறது. இனி, மோதகத்தைச் செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம்.
மோதகம் செய்யத் தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1 கப், பாசிப் பருப்பு - கால் கப், வெல்லம் - 1 கப், தேங்காய்த் துருவல் - கால் கப், ஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை, நெய் - 3 டேபிள் ஸ்பூன்.
செய்முறை: அரிசியையும், பாசிப்பருப்பையும் ஒன்றாகச் சேர்த்து நன்றாகக் கழுவி ஒரு மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும். நீரை அகற்றி சுத்தமான துணியில் ஒரு மணி நேரம் உலர்த்தவும். இரண்டும் நீரின்றி உலர்ந்ததும் மிக்சியில் போட்டு குருணையாக உடைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை இட்டு நீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்கவிட்டு பாகை வடிகட்டி வைத்துக்கொள்ளவும். வாயகன்ற அடிகனமான பாத்திரத்தில் நெய் சேர்த்து காய்ந்ததும் உடைத்த அரிசி பருப்பை சேர்த்து வறுத்து எடுத்து தனியே வைத்துக் கொள்ளவும். அதே பாத்திரத்தில் இரண்டு கப் நீர் விட்டு கொதித்ததும் வறுத்த மாவைப் போட்டு இடைவிடாது கிளறவும்.
மாவு நன்றாக வெந்து கெட்டியானதும், வடிகட்டிய வெல்லப்பாகை சேர்த்துக் கிளறவும். நன்கு ஒன்று சேர்ந்ததும், ஏலக்காய், தேங்காய் துருவல் சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கவும். ஆறியதும் கையில் சிறிது நெய்யினைத் தடவிக் கொண்டு உருண்டைகளாக உருட்டி இட்லி பாத்திரத்தில் பத்து நிமிடங்கள் ஆவியில் வேக வைக்கவும். விநாயகப் பெருமானுக்குப் பிடித்த மோதகம் தயார்.