
பொட்டல் புதூர் பள்ளிவாசல் திருநெல்வேலி மையப்பகுதியில் அமைந்துள்ளது. அம்பாசமுத்திரம் தென்காசி செல்லும் சாலையில் கடையம் அருகே உள்ளது. அக்காலத்தில் முஹைதீன் ஆண்டவர் கி.பி. 1148இல் இங்கு வந்து தனது கால் தடத்தை பத்தித்து விட்டு சென்றுள்ளார். அவரின் கால் தடத்தை இன்றளவும் பேணி பாதுகாத்து வருகிறார்கள். இந்த பள்ளிவாசல் சூபி ஹஸ்ரத் செய்து முகமது ஷாவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆலயமாகும். கடந்த காலமும் நிகழ்காலமும் பின்னி பிணைந்த அற்புதமான இடமாகும். இது பல நூற்றாண்டுகளை கடந்த பழமையான தர்ஹா.
சூபி ஹஸ்ரத் செய்யது முகமது அன்பு, இரக்கம், ஒற்றுமை இவற்றை பரப்புவதற்கு யேமனில் இருந்து பொட்டல் புதூர் வந்தார். அவரது போதனைகள் மக்களுக்கு நம்பிக்கையையும் ஆறுதலையும் அளித்தது. இது மதநல்லிணக்கத்திற்கு அடையாளமாக உள்ளது. இங்கு முஸ்லிம்கள் தவிர இந்துக்கள், கிறிஸ்தவர்கள் பெருமளவில் வந்து பிரார்த்தனை செய்து வழிபடுகின்றனர்.
சூபி இறந்த நாளில் இந்த இடம் ஆயிரக்கணக்கான பக்தர்களை இழுக்கிறது. இந்த பள்ளிவாசல் நம்பிக்கையின் அடையாளமாக திகழ்கிறது. சூபி துறவி மறைவுக்கு பின் 1674ஆம் ஆண்டு சூபிக்கு கல்லறை எழுப்பினார்கள். அதுதான் இன்றைய மசூதியாக கருதப்படுகிறது. கட்டிட கலைக்கு பெயர் பெற்ற இடமாகும்.
இங்கு வரும் பக்தர்களுக்கு நெய், புளி பட்டை, நேர்ச்சை மலர்களால் செய்யப்பட்ட புனித சாம்பல் வழங்கப்படுகிறது. இங்கு நடைபெறும் கந்தூரி விழா மிகவும் பிரபலம். கந்தூரி மறுநாள் இந்துக்கள் பள்ளிவாசல் முழுக்க தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். அப்போது இந்த பள்ளிவாசல் ஜெக ஜோதியாக ஜொலிக்கும். பார்க்க கண் கொள்ளா காட்சியாக இருக்கும். இங்கு பல சமுதாய மக்களும் வழிபட்டு தங்கள் கோரிக்கை நிறைவேறியதும் நேர்ச்சை கடன் செலுத்துகின்றனர்.
இந்த பள்ளி வாசல் எட்டு ஏக்கர் பரப்பளவில் இரண்டு பெரிய மினாக்களுடன் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. கந்தூரி விழாவின் போது அருகில் உள்ள ரவன சமுத்திரம் ஊரில் இருந்து சந்தன கூடு ஊர்வலம் புறப்பட்டு வெகுவிமர்சையாக நடைபெறும். ஆடல், பாடல், மேள தாளத்துடன் சிலம்பாட்டம், பல்வேறு கலைநிகழ்ச்சியுடன் நடைபெறும்.
இன்றுவரை இந்த பள்ளிவாசல் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இந்த பள்ளிவாசலை இனாம்தார் எம்.பி.ஷா. அவர்கள் தலைமையில் நிர்வாகம் செய்து வருகின்றனர். வாழ்வில் ஒருமுறையேனும் இந்த பள்ளிவாசல் சென்று வழிபட்டு வந்தால் மனதுக்கு நிம்மதி கிடைக்கும்.