சக்தி மிக்க சாயா சோமேஸ்வரர் ஆலயம்!

சோமேஸ்வரர் கோவில்
சோமேஸ்வரர் கோவில்
Published on

தெலங்கானா மாநிலம் நல்கொண்டாவில் அமைத்திருக்கும் இந்த சாயா சோமேஸ்வரர் கோவில் சிவன், விஷ்ணு, சூரிய பகவான் ஆகிய மூவருக்கும் முக்கோண வடிவிலான ஆலயமாக அமைந்திருப்பது, பிரமீடு வடிவ கருங்கல் கருவறை கோபுரங்கள், கோவிலின் தூண்களில் ராமாயண மற்றும் மகாபாரத காட்சிகள் இடம்பெற்றிருப்பது என பல பெருமைகள் கொண்ட திருத்தலமாக இத்தலம் உள்ளது.

‘சாயா' என்றால் ‘நிழல்’ என்ற பொருள். குண்டூர் சோழர்கள் கி.பி. 1040 ஆம் ஆண்டு முதல் 1290 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்த காலத்தில், இங்கு எண்ணற்ற ஆலயங்கள் எழுப்பப்பட்டன. அதில் பனகலில் இரண்டு சிவாலயங்கள் கட்டப்பட்டதில் ஒன்று தான் இந்த சாயா சோமேஸ்வரர் திருக்கோவில். இந்த திருத்தலம் முக்கோண வடிவிலும், மூன்று கருவறை விமானங்கள், கருங்கற்களைக் கொண்டு மூன்று பிரமிடு வடிவிலும் அமைக்கப் பட்டுள்ளது.

களப்பிரர்கள் காலகட்டத்தில் தெலுங்கு தேசத்திற்கு  தமிழகத்தில் இருந்து சென்றவர்கள் சோடர்கள் என்கிற தெலுங்கு சோழர்கள். பொத்தப்பி, வெலநாண்டு, நெல்லூர் முதலிய இடங்களில் சிற்றரசர்களான இவர்கள் ஆட்சியும் செய்தனர்.

சோமேஸ்வரர்...
சோமேஸ்வரர்...

குண்டூர் மாவட்டத்தில் ஆட்சி செய்த மகாமண்டலீசுவர பல்லய சோட மகாராஜா தெலுங்கு சிற்றரசர்களான இவர்களில் ஒருவரே. இவர்களின்  வழிவந்தவர்கள் தான் குண்டூர் சோழர்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் நல்கொண்டா, மெகபூப் நகர் மற்றும் கம்பம் மாவட்டங்களில் பனகலைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்தனர்.அப்போது தான் இரண்டு கோவில்கள் பனகலில் எழுப்பப்பட்டது. அதாவது கலைநயம் கொண்ட சாயா சோமேஸ்வரர் மற்றும் பச்சலா சோமேஸ்வரர் திருக்கோவில்கள் எழுப்பப்பட்டன. அதேபோன்று, பிரமாண்ட ஏரியும் விவசாயத்திற்காக உதய சமுத்திரம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டது.

இந்தக்கோவிலுக்கான சாசனங்கள் தெலுங்கு மன்னர் பரம்பரையைச் சார்ந்த காக்கத்தியர்கள் கி.பி. 1290ல் ஆட்சிக்கு வந்த  காலத்தில் எழுதப்பட்டன. அப்போது கோவில் திருப்பணிகளும் நடைபெற்றது. குண்டூர் சோழர்கள் மற்றும் காக்கத்தியர்கள் கால கலைகள் ஆலயத்தில் இடம் பெற்றுள்ளன. இந்த ஆலயத்தின்  பெரும்பகுதி கலைச்சிற்பங்கள், டெல்லி சுல்தானின் காலத்தில் சிதைக்கப்பட்டுள்ளன.

பகல் நேரம் முழுதும் சிவலிங்கத்தின் மீது ஒரு தூணின் நிழல் விழுகின்றது. இதில், பெரிய ஆச்சரியம் என்னவென்றால் பகல் முழுதுமே இந்த தூணில் நிழல் ஒரே இடத்திலேயே இருப்பதுதான். மேலும் கோவில் பக்தர்கள் பௌர்ணமி  நேரத்திலும் நிழல் விழுவதாக கூறுகின்றனர். கருவறைக்கு முன்பாக மொத்தம் நான்கு பட்டை வடிவ தூண்கள் உள்ளது. ஆனாலும் தற்போது வரை கருவறைக்குள் விழும் நிழல் எந்த தூணுக்கானது என்பதை கண்டறிய முடியவில்லை.

இதையும் படியுங்கள்:
தொடர் முயற்சிகளால் திறக்கப்படும் இறைக் கதவுகள்!
சோமேஸ்வரர் கோவில்

சிற்பக்கலைகளின் சுரங்கமாக உள்ள சதுர வடிவ நான்கு தூண்கள் மூன்று கருவறைக்கும் மையமாக உள்ள பகுதியில் அமைந்துள்ளன. இந்த தூண்கள் சிறிய இடத்திற்குள் இராமாயணம், மகாபாரதத்தை நம் கண்முன்னே கொண்டு வந்து விடுகின்றன. குறிப்பாக மானாக உருவம் எடுத்த மாரீசனை ராமன் கொல்லும் காட்சி, மானின் தலை விழுந்ததும், மாரீசன் வெளிப்படுதல் போன்ற காட்சி அருமையாக வடிக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றுச்சூழல் அறிவியலில் நிபுணர்களாக நம்மவர்கள் இருந்துள்ளனர் என்பதற்கு உதாரணமாய் நீர்நிலைகளை தூய்மைப்படுத்தும் விலங்குகளை, ஒரே கட்டத்தில் செதுக்கியிருப்பது உறுதிசெய்யும் விதமாக உள்ளது.

7 நந்திகள் தலை வெட்டப்பட்ட நிலையிலும் கம்பீரமான தோற்றத்துடன் ஆலய வளாகத்தில்  காட்சி அளிக்கின்றன. அதில் இருக்கும் முதல் நந்தியின் கழுத்தை கைகளால் தடவிப் பார்த்தால், உயிருள்ள நந்தியைத் தழுவுவது போன்ற உணர்வு ஏற்படும். இது தான் நம் முன்னோர்களின் கலைத் திறமையை உணர்த்துவதாக அமைந்துள்ளது.

இப்படி வெளிநாட்டு விஞ்ஞானிகளும் வியந்து வேடிக்கை பார்க்கும் அளவிற்கு பல அதிசயங்களை கொண்ட கோவிலாக இக்கோவில் அமைந்துள்ளது. நேரம் கிடைத்தால் ஒரு முறை சென்று வாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com