புராணக் கதை: லக்ஷ்மணன் ஏன் அழுதான்?

ராமன், லட்சுமணன். பரதன். சத்ருகணனுடன் தசரதர்
ராமன், லட்சுமணன். பரதன். சத்ருகணனுடன் தசரதர்

பால ராமனும், பாலகன் பரதனும் நன்கு விளையாடிக் கொண்டும் பால் அருந்திக் கொண்டும் இருக்க, குழந்தை லக்ஷ்மணனும், குழந்தை சத்ருக்கணனும் பாலருந்தாமல் கால், கைகளை உதைத்து விளையாடமல் ஓயாது அழுது கொண்டிருந்தார்கள். குழந்தைகளின் தாய் சுமித்திரைக்கு பிள்ளைகளின் அழுகைக்கான காரணத்தை அறிய முடியவில்லை. குழந்தையை பரிசோதித்த அரண்மணை மருத்துவர்கள், குழந்தைகள் இரண்டும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், நோய்க்கான அறிகுறிகள் எதுவுமில்லை என்றும் சொன்னார்கள்.

மனித சக்திக்கும் அப்பாற்பட்ட காரணம் ஏதாவது இருக்குமென்று அஞ்சிய சுமித்ரை, குல குருவான வசிஷ்டர் உதவியை நாடினாள். சற்றுக் கண் மூடி தியானத்தில் ஆழ்ந்த வசிஷ்டர் சுமித்திரையிடம் சொன்னார், “தேவி, உன்னுடைய மாளிகையில் உறங்கும் லக்ஷ்மணனை, கௌசல்யா தேவியின் மாளிகையில்,  ராமன் உறங்கும் தொட்டிலின் பக்கத்தில் தொட்டிலிட்டு உறங்க வை” என்றார். என்ன ஆச்சரியம், ராமனின் பக்கத்தில் தொட்டிலில் இட்டவுடன், லக்ஷ்மணன் சிரித்து விளையாட ஆரம்பித்தான்.

இந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட சுமித்திரையிடம் வசிஷ்டர் சொன்னார், “சத்ருக்கணனை, கைகேயியின் மாளிகையில் பரதனின் தொட்டிலருகில், தொட்டிலமைத்து படுக்க வை” என்றார். குல குருவின் அறிவுரைப்படி செய்தவுடன், சத்ருக்கணனும் சிரித்து விளையாடி, பாலருந்த ஆரம்பித்தான். சுமித்திரைக்கு இது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தாலும், இதற்கான காரணம் அவளுக்கு விளங்கவில்லை.

வசிஷ்டர் சொன்னார், “உனக்கு இதிலிருந்து ஒரு உண்மை புரிந்திருக்கும் சுமித்திரா தேவி. லக்ஷ்மணன் எப்போதும் ராமனுடன் இருக்க விரும்புகிறான். அதைப்போலவே, சத்ருக்கணனும், பரதனுடன் இருக்கவே ஆசைப்படுகிறான். இந்த நான்கு குழந்தைகளும் தெய்வக் குழந்தைகள். புத்திர காமேஷ்டி யாகத்திற்குப் பின், தேவர்கள் ஆசீர்வதித்து அளித்த தெய்வப் பாயசத்தால் பிறந்தவர்கள். அந்தப் பாயசத்தை தேவியர் மூவருக்கும் பகிர்ந்து அளித்த பின்னால், என்ன நடந்தது என்பதை நீதான் சொல்ல வேண்டும்” என்றார்.

“நீங்கள் சொல்வது உண்மைதான். உங்கள் ஞான திருஷ்டியால் அன்று நடந்தது என்ன என்று நீங்கள் அறிந்திருப்பீர்கள். இருந்தாலும், நடந்த விவரங்களை நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றாள் சுமத்திரை குல குருவிடம்.

“பாயசம் எங்கள் மூவருக்கும் மூன்று வெள்ளிக் கிண்ணத்தில் பகிர்ந்து அளிக்கப்பட்டது. தேவி கௌசல்யாவும், தேவி கைகேயியும் புனித நீராடி, பூஜை முடித்துப் பின்னர் பாயசம் அருந்தப்போவதாகச் சொல்லிச் சென்றார்கள். என்னுடைய மனதில் தேவையில்லாத சந்தேகம் ஒன்று தோன்றியது.

இதையும் படியுங்கள்:
BMW காரை விட விலை உயர்வான மான் கொம்பு வண்டு!
ராமன், லட்சுமணன். பரதன். சத்ருகணனுடன் தசரதர்

தசரத சக்கரவர்த்திக்குப் பிறகு கௌசல்யாவின் திருமகன் முடிசூட்டிக் கொள்வான். கைகேயியின் மகன் இளையராஜா பட்டம் பெறுவான். ஆனால், எனது வயிற்றில் பிறக்கப்போகும் குழந்தையின் நிலை? அவனுக்கு என்ன முக்கியத்துவம் இருக்கும்? அப்படி முக்கியத்துவம் இல்லாதபோது, நான் எதற்கு இந்தப் பாயசத்தைக் குடிக்க வேண்டும்? குழந்தை இல்லாமல் இருப்பதே நல்லது அல்லவா என்று பல வகையான கேள்விகள் என்னுடைய மனதில் எழுந்தது. அந்த சஞ்சலத்தில் இருந்தபோது, எங்கிருந்தோ வந்த பறவை ஒன்று, வெள்ளிக் கிண்ணத்துடன் பாயசத்தை எடுத்துச் சென்று விட்டது.

திடுக்கிட்டு விழித்த நான், என்னுடைய சுய நினைவிற்கு வந்தேன். ஞானிகள் மற்றும் பெரியவர்கள் பூஜை செய்து அருளிய பாயசத்தை தேவையற்ற குழப்பத்தினால் தவற விட்டது என்னுடைய மனதை உறுத்தியது. இதை, மகாராஜாவிடமும், மற்றவர்களிடமும் எப்படிச் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. ஆகவே, நடந்தது அத்தனையும் கௌசல்யா தேவியிடமும், கைகேயி தேவியிடமும் சொன்னேன். இது மற்றவர்களுக்குத் தெரிய வேண்டிய அவசியமில்லை என்று சொல்லி, தேவி கௌசல்யா தன்னுடைய கிண்ணத்திலிருந்த பாயசத்திலிருந்து மூன்றில் ஒரு பங்கை எனக்கு அளித்தாள். அதைப் போலவே, தேவி கைகேயியும் மூன்றில் ஒரு பங்கை எனக்களித்து குடிக்கச் சொன்னாள். இப்போது எனக்குப் புரிகிறது. ஏன், லக்ஷ்மணன் மற்றும் சத்ருக்கணன், ராமன் மற்றும் பரதன் அருகாமையில் இருக்க விரும்புகிறார்கள் என்பது” என்று கூறி முடித்தாள்.

உடனே வசிஷ்டர், “வருத்தப்பட வேண்டாம் தேவி. பாயசத்தை பறவை எடுத்துச் சென்றதும், கௌசல்யா, கைகேயி தங்களுக்கு அளித்த பாயசத்தை உன்னுடன் பகிர்ந்து கொண்டதும் தெய்வச் செயல். ராமனின் நிழலாக லக்ஷ்மணனும், பரதனின் நிழலாக சத்ருக்கணனும் விளங்கி நற்பெயர் பெறுவது திண்ணம்” என்றார் குலகுரு வசிஷ்டர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com