புராணக் கதை: யார் கொடை வள்ளல்?

Purana Kathai: Yaar Kodai Vallal?
Purana Kathai: Yaar Kodai Vallal?https://sssbalvikas.in

காண்டவப் பிரஸ்தத்தில் தனி இராஜ்ஜியம் அமைத்துக்கொள்ள திருதராஷ்டிரன், பாண்டவர்களுக்கு அனுமதியளித்தார். பாண்டு வம்சத்தின் புராதன தலைநகரமாக இருந்த அந்த நகரம் சிதிலமடைந்து இருந்தது. அந்த நகரத்தை மயனைக் கொண்டு புதுப்பித்து, மாளிகைகளும், கோட்டைகளும் கட்டி, இந்திரப்பிரஸ்தம் என்று பெயரிட்டு, யுதிஷ்டிரன் தலைமையில் பாண்டவர்கள் இருபத்து மூன்று வருட காலம் சிறப்பாக ஆட்சி புரிந்து வந்தார்கள்.

யுதிஷ்டிரன் இராஜசூய யாகம் நடத்தி அரசர்க்கரசர் என்கிற பதவியைப் பெற வேண்டும் என்று அவரைச் சுற்றியிருந்தவர்கள் வற்புறுத்த, யுதிஷ்டிரர் யாகம் செய்தார். வந்தவர்களுக்கெல்லாம் வாரி வழங்கினார். யாசகம் வந்தவர்கள் வேண்டும் என்று கேட்டதெல்லாம் கொடுத்தார். மனம் மகிழ்ந்த மக்கள் பெயருக்கு ஏற்றார்போல நமது அரசர் உண்மையிலே தர்மராஜர் என்று புகழ்ந்தனர்.

“கேட்டாயா கிருஷ்ணா மக்கள் கூறுவதை? உலகம் இனி என் அண்ணனை கொடை வள்ளல் என்று போற்றும். கர்ணனை அல்ல” என்றான் அர்ஜுனன். அதற்கு கண்ணபிரானுடைய பதில் மந்தகாசப் புன்னகை மட்டுமே.

அடுத்த நாள் அரச சபைக்கு ஒரு ஏழை அந்தணர் யாசகம் கேட்டு வந்தார். “உங்களுக்குத் தேவையானதைக் கேளுங்கள், தயக்கம் வேண்டாம்” என்றார் மன்னர். “மன்னா, என்னுடைய தந்தை மரித்து விட்டார். அவர் உடலைத் தகனம் செய்ய எனக்கு சந்தனக் கட்டைகள் வேண்டும்” என்றார் அந்தணர். அந்தணருக்குத் தேவையான சந்தனக் கட்டைகளை அளிக்கும் படி அமைச்சருக்கு உத்தரவிட்டார் அரசர். ஊரெங்கும் சந்தனக் கட்டைகளைத் தேடிச் சென்ற பணியாட்கள், எங்கும் சந்தனக் கட்டைகள் கிடைக்கவில்லை என்று திரும்பி வந்தனர். அருகிலுள்ள காட்டிற்குச் சென்று சந்தன மரத்தை வெட்டி எடுத்து வருமாறு அரசர் ஆணை பிறப்பித்தார்.

காட்டிற்குச் சென்ற விறகு வெட்டிகள், சுற்றி வரையுள்ள காடுகள் எதிலும் சந்தன மரங்களே இல்லை என்ற செய்தியுடன் திரும்பி வந்தனர். செய்வதறியாது திகைத்து நின்ற தருமர், சந்தனக் கட்டைகள் கிடைக்காததால் வேண்டிய அளவு பொன்னும் பொருளும் அளிப்பதாகக் கூறினார். “அரசே, என் தந்தையின் உடலைச் சிதையிலிட, எனக்குத் தேவை சந்தனக் கட்டைகள், பொன்னும் பொருளும் எனக்கு எப்படி உதவும்? உங்களால் அதனை அளிக்க முடியவில்லை என்றால், நான் அங்க தேசத்து அரசர் கர்ண மகாராஜாவைத்தான் அணுக வேண்டும். அவர் எப்படியும் என்னுடைய விருப்பத்தை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது ” என்று சொல்லி விட்டு அங்க தேசம் புறப்பட்டார்.

“நாடு முழுவதும் மற்றும் காடுகளில் தேடியும், எங்கும் சந்தனக் கட்டைகள் கிடைக்கவில்லை என்றால், கர்ணனால் மட்டும் எங்கிருந்து சந்தனக் கட்டை கொடுக்க முடியும்” என்றான் அர்ச்சுனன் கண்ணனிடம்.

“எனக்கும் தெரியவில்லை. அங்க தேசத்தில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம் வா” என்றான் மாயக்கண்ணன்.

நடப்பது எல்லாம் கிருஷ்ணர் நடத்துகின்ற மாய விளையாட்டு என்பது அர்ஜுனனுக்குத் தெரியாது. அந்தணர் கண்ணன் அனுப்பிய மாய உருவம். சந்தன கட்டைகள், மரங்கள் கண்ணிற்குத் தெரியாமல் செய்ததும் அவரே. எதற்கு இந்த மாய விளையாட்டு?

அங்க தேசம் சென்ற அந்தணரை உபசரித்த கர்ணன், அவருக்கு எப்படி தான் உதவ முடியும் என்று பணிவாகக் கேட்டான். தந்தையின் உடலை எரியூட்ட சந்தனக் கட்டைகள் வேண்டுமென்ற அந்தணர், ‘தான் இந்திரப் பிரஸ்தம் சென்றதாகவும், மகாராஜா யுதிஷ்டிரர், எவ்வளவு முயற்சி செய்தும் சந்தனக் கட்டைகள் கிடைக்கவில்லை’ என்றும் கூறினார். கர்ணன் தன்னுடைய அமைச்சர் மற்றும் பணியாளர்களுக்குக் கட்டளையிட, நாடு முழுவதிலும் அருகிலிருந்த காடுகளிலும் பணியாட்கள் சந்தன கட்டைகள், சந்தன மரத்தைத் தேடியலைந்தனர். எங்கு தேடியும் சந்தனக் கட்டைகள் கிடைக்கவில்லை. காட்டில் ஒரு சந்தன மரம் கூட இல்லை. வெறும் கையுடன் திரும்பி வந்தனர் பணியாட்கள்.

கர்ணன் சற்றும் அசரவில்லை. அரச சபையைச் சுற்றி வந்த கர்ணன் தன்னுடைய அமைச்சரைக் கூப்பிட்டான். “அமைச்சரே, நம்முடைய அரண்மனையின் தூண்கள் எதனால் செய்யப்பட்டவை” என்று கேட்டான்.

இதையும் படியுங்கள்:
வேப்பம் பூவின் ஆரோக்கியம் + அழகு நன்மைகள்!
Purana Kathai: Yaar Kodai Vallal?

“அவை, சந்தனமரத் தூண்கள்” என்றார் அமைச்சர். அந்தணருக்கு எத்தனை சந்தனக் கட்டைகள் தேவையோ, அத்தனைத் தூண்களை இடித்து, அந்தணருக்கு சந்தனக் கட்டைகள் கொடுக்கும்படி ஆணையிட்டார்.

“மன்னா, தூண்களை இடித்தால், அரண்மணை இடிந்து விழுந்து விடும்” என்றார் அமைச்சர்.

“அரண்மனை இடிந்து விழுவதைப் பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால், யாசகம் என்று வந்தவரை, அவர் கேட்டதை தானம் செய்யாமல் திருப்பி அனுப்பினான் கர்ணன் என்ற பழிச் சொல்லுக்கு நான் ஆளாக மாட்டேன்” என்றான் கர்ணன்.

“கேட்டாயா பார்த்தா, கர்ணன் சொன்னதை. இந்திரப் பிரஸ்தம் அரண்மனைத் தூண்களும் சந்தன மரத் தூண்கள்தான். கண்ணெதிரே அந்தத் தூண்கள் இருந்தும், அவற்றை இடித்துக் கொடுக்கலாம் என்று தருமருக்குத் தோன்றவில்லை. கர்ணன் மனதில் நிறைந்திருப்பது கொடைத் தன்மை. அதனால், தூணை இடிப்பதால், அரண்மனை இடிந்து விழும் என்பதைப் பற்றி அவன் கவலைப்படவில்லை. இப்போது உனக்குப் புரிந்திருக்கும் யார் கொடை வள்ளல் என்று” என்று கூறினார் கிருஷ்ணர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com