பூரி ஜகன்னாதருக்கு ஜுரம்!

பூரி ஜகன்னாதருக்கு ஜுரம்!
Published on

கமே காத்துக்கொண்டிருக்கும் பூரி ஜகன்னாதரின் ரத யாத்திரை நாளை (ஜூன் 20) ஜோராக பூரி விதிகளில் வலம் வரவிருக்கிறது. ரத யாத்திரை நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, அதாவது ஜ்யேஷ்டா பெளர்ணமி என்று சொல்லப்படும், சாந்திர மாஸ கணக்கின்படி வரும் ஆனி மாத பெளர்ணமி நாளில், ஜகன்னாதருக்கும் பலராமருக்கும் சுபத்ராவுக்கும் 108 தங்கக் குடங்களால் கிணற்று ஜலம் கொண்டு அபிஷேகம் செய்யப்படும். இந்த வைபவத்தை, ‘ஸ்நான யாத்திரை’ என்று அழைப்பார்கள். வருடத்துக்கு ஒரே ஒரு முறை மட்டுமே கர்ப்பக்ருஹத்திலிருந்து, மூல மூர்த்திகள் வெளியில் வந்து ஸ்நான வேதியில் நீராடுவார்கள். ‘குளிர்ந்தேலோ ரெம்பாவாய்’ என்பாளே ஆண்டாள் நாச்சியார் தம் திருப்பாவையில், அப்படித் தம் உள்ளம் குளிர, காணும் பக்தர்களின் மனம் குளிர தண்ணீர் அபிஷேகம் கண்டருளப்பட்ட மூவருக்கும், ஜுரமும் ஜலதோஷமும் வந்து விடுவதாக பாவிக்கப்பட்டு, 14 நாட்கள் அவர்கள் தனி அறையில் வைக்கப்படுவார்கள்.

நவ வித பக்தி என்று சொல்லப்படும் ஒன்பது வித பக்தியில் முக்கியமான பக்தி, சக்ய பக்தி. அதாவது, இறைவனை நம் தோழனாக, தோழியாக பாவிப்பது. இறைவனை நாம் தோழமையோடு பார்க்கும்போது அவனிடம் நம் குறைகளை அந்த சினேக பாவத்தோடு நாம் பகிர்ந்து கொள்ளும்போது, நம் மன பாரங்கள் எல்லாம் தானாகவே நீங்கி விடுவதை பல முறை நாம் அனுபவித்திருப்போம். தோழமை எனும் பாவத்தோடு நாம் பகவானை நெருங்கும்போது, அங்கே பயம் என்கிற உணர்வு முற்றிலுமாக மாறிப்போய், அங்கே அளப்பரியா அன்பு என்பதுதானே மேலோங்கி இருக்கும்? அப்படித்தான் பூரி ஜகன்னாத பெருமாளை, தம் தோழனாகவோ அல்லது தங்கள் வீட்டு குழந்தையாகவோ பாவிக்கும் ஒரிசா மக்கள், 108 குட தண்ணீரில் குளித்தவர்களுக்கு கடுமையான ஜலதோஷமும், காய்ச்சலும்  வந்து விடுமே என்று எண்ணி அவர்களை 14 நாட்கள் தனி அறையில் இருக்கச்செய்து, அந்த 14 நாட்களுக்கும் பழச்சாறு, கஷாயம் போன்றவற்றைச் செய்து  தந்து, அவர்களுக்கு முழு ஓய்வு கொடுக்கிறார்கள்.

இந்த 14 நாட்கள் இப்படி ஜகன்னாதர் தம் சகோதர, சகோதரியுடன் தனி அறையில் ஓய்வெடுக்கும் காலத்தை, ‘அனாபஸார காலம்’ என்றும், ‘அனாவஸார காலம்’ என்றும் அழைப்பார்கள். இந்த 14 நாட்கள் பக்தர்கள் யாருமே ஜகன்னாதரை தரிசனம் செய்ய முடியாது. தனி அறையில் இருந்தபடி  ஜுரம், ஜலதோஷம் சரியாவதற்கான, மருந்து, கஷாயம் மற்றும் பழச்சாறுககளை மட்டும்தான் இம்மூவருமே உட்கொள்வார்கள். இந்த நாட்களில் இவர்களுக்கு இவை மட்டும்தான்  நெய்வேத்தியம் செய்யப்படும். பூரியில் இருக்கும் ஜகன்னாதருக்கு மட்டும் அல்லாமல், வேறு எங்கெல்லாம் அவர் கோயில் கொண்டிருக்கிறாரோ அங்கெல்லாமும் இந்த வழக்கம் கடைப்பிடிக்கப்படும். அது மட்டுமல்லாது, தங்களது இல்லங்களின் பூஜை அறையில் இருக்கும் ஜகன்னாதருக்கும், கடைகளில் இருக்கும் ஜகன்னாதரின் திரு உருவ சிலைகளுக்கும், படங்களுக்கும் கூட ஆங்காங்கே இருக்கும் பக்தர்கள், ஜகன்னாதரை ஒரு வெள்ளை துணி கொண்டு மூடி வைத்து விடுவார்கள். பூரியில் இருப்பவர்தான் இதோ எங்கள் இல்லத்தில், இந்தப் படத்தில் இருக்கிறார். அவருக்கும் அந்த 14 நாட்கள் ஓய்வு என்பது பொருந்தும் என்றபடி பகவானுக்கு முழு ஓய்வு கொடுப்பார்கள் ஜகன்னாதரின் பக்தர்கள்.

பதினான்கு நாட்கள் ஓய்வுக்குப் பின், நாளை புதுப் பொலிவுடன் ரதத்தின் மீது வந்தமர்ந்து நம்மை எல்லாம் காக்கப்போகும் ஜகன்னாதருக்காகவும், பலராமனுக்காகவும், சுபத்ராவுக்காகவும் நாமும் காத்திருப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com