புருஷாமிருகமும் பீமனும்!

Purushamirugam and Bhima!
Purushamirugam and Bhima!

பாண்டவர்கள் அரசாண்ட சமயத்தில் ராஜசூய யாகம் ஒன்றை நடத்தினார்கள். அதற்கு ஏராளமான செல்வங்களும், பொருட்களும் தேவையாயிருந்ததால், தருமர் தமது சகோதரர்கள் நால்வரை, நான்கு திசைகளிலும் சென்று பொருட்செல்வத்தைத் திரட்டி வருமாறு கூறினார். பீமன் குபேரன் வாழும் வடக்கு திசை சென்றான். யாகம் நடத்த பொருள் தந்து உதவுமாறு வேண்ட, குபேரனும் தாராளமாகக் கொடுத்தான். ஆனால் பீமனிடம், “நீ என்னுடைய எல்லையைத் தாண்டி செல்ல, எனது காவல் தெய்வம் புருஷாமிருகத்தின் அனுமதியைப் பெற்றே வெளியேற வேண்டும்” என்றான்.

பீமனும் புருஷாமிருகத்தை சந்தித்து, அனுமதி பெற்ற பின்பு, அவரையும் ராஜசூய யாகத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தான். புருஷாமிருகமும் தாம் வருவதாக ஒப்புக்கொண்டு, “நீ எனக்கு முன்பாகச் சென்று வழிகாட்ட வேண்டும். அதனால் நீ ஓடிக்கொண்டே இரு. நான் உன்னைத் தொடர்ந்து வருகிறேன். ஆனால், உன்னை நான் நெருங்கிவிட்டால் உன்னைச் சாப்பிட்டு விடுவேன். இதற்கு சம்மதமென்றால் நீ அனைத்தையும் எடுத்துச் செல்லலாம்” என்றது.

பீமனுக்கு குழப்பமாக இருந்தது. கிருஷ்ணனை பிரார்த்தனை செய்தான். கிருஷ்ணன், பீமன் முன் தோன்றி, “இந்த சவாலை நீ ஒப்புக்கொள். புருஷாமிருகம் ஒரு சிறந்த சிவ பக்தன். எல்லா சமயங்களிலும் அவன் மனதில், சிவனைத் தவிர்த்து வேறு எந்த எண்ணமும் தோன்றாது. அதனால், உன்னிடம் நான் மூன்று சிவலிங்கங்களைக் கொடுக்கிறேன். நீ அவற்றை எடுத்துக்கொண்டு வேகமாக ஓடு. அவன் உன்னை நெருங்கும் சமயம் ஒரு லிங்கத்தை கீழே போட்டுவிடு. அவன் லிங்கத்தைப் பார்த்தவுடன் அருகில் இருக்கும் நீரோடையில் ஸ்நானம் செய்து பூஜித்த பிறகுதான் மீண்டும் ஓட்டத்தைத் தொடருவான். அதற்குள் நீ சிறிது தூரம் சென்றுவிடலாம். அவன் எல்லையைத் தாண்டுவதற்குள் இந்த மூன்று லிங்கங்களை உபயோகித்து எல்லையை தாண்டி விடு” என்றார்.

பீமனும் அவற்றைப் பெற்றுக்கொண்டு ஓட ஆரம்பித்தான். புருஷாமிருகம் அவனைத் துரத்தியது. புருஷாமிருகம் அருகில் வரும்சமயம் பீமன் ஒரு லிங்கத்தைக் கீழே போட்டான். அதைக் கண்டவுடன் புருஷாமிருகம் அருகில் இருந்த நீரோடைக்குச் சென்று ஸ்நானம் செய்து, பூஜை முடித்து மறுபடியும் பீமனைத் துரத்தியது. இதுபோன்று மூன்று லிங்கங்களையும் கீழே போட்டு அச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு வேகமாக முன்னேறினான் பீமன். ஆனாலும், புருஷாமிருகம் எப்படியாவது பீமனை பிடித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் தனது வேகத்தை அதிகரித்து நெருங்கியது. பீமனும் அதிவேகமாக எல்லையை நெருங்கி, ஒரு காலை அந்தப் பக்கம் வைத்துவிட்டான். மறுகாலை வைக்கும் முன்பாக புருஷாமிருகம் அவனது மற்றொரு காலைப் பிடித்துவிட்டது.

“எல்லையை தாண்டாததால் நீ எனக்கு உடைமையாகி விட்டாய். இனியும் உன்னை நான் கொல்லாமல் விடமாட்டேன்” என்றது. பீமனோ, தான் எல்லையைத் தாண்டிவிட்டேன் என்று சமாதானம் கூறினான். இவர்களுக்குள் ஏற்பட்ட விவாதம் வேறு ஒருவர் தீர்ப்புக்கு விடவேண்டும் என்று கிருஷ்ணனை பிரார்த்தனை செய்துகொண்டார்கள்.

Purushamirugam and Bhima!
Purushamirugam and Bhima!

கிருஷ்ணனோ, “இந்த விஷயத்தில் நான் தலையிட மாட்டேன். வேண்டுமானால் தருமர் தீர்ப்பு கூறட்டும்” என்று சொல்லிவிட்டார். தருமர் அங்கு தோன்றி இரு பக்க நியாயங்களைக் கேட்டறிந்து, முடிவாக அவரின் தீர்ப்பைக் கூறினார். பீமன் உடம்பின் ஒரு பாதி எல்லையின் உள்ளேயும், மறுபாதி வெளியேயும் இருந்ததால், புருஷாமிருகம் தன் எல்லையில் இருக்கும் உடம்பை மட்டும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், மற்றொரு உடற்பகுதிக்கு எவ்வித சேதமும் நேரக்கூடாது” என்று தீர்ப்பு கூறினார். பீமன் உடலின் ஒரு பகுதி சேதம் அடையாமல், மற்றொரு பகுதியை மட்டும் தாம் சுவீகாரம் செய்துகொள்ள முடியாது என்பதை உணர்ந்த புருஷாமிருகம், தன்னுடைய சகோதரன் என்றும் பாராமல் நியாமான தீர்ப்பு அளித்த தருமரை பாராட்டி, பீமன் அனைத்துவிதமான செல்வங்களையும் எடுத்துச் செல்லலாம் என்று கூறியது.

இதையும் படியுங்கள்:
அதென்ன BRAIN DUMPING வழிமுறை? 
Purushamirugam and Bhima!

இந்த சம்பவம் மகாபாரதத்தில் இருந்தாலும், மிக சிலருக்கே தெரிந்திருக்கிறது. இக்கதையை விளக்கும் சிற்பங்களை விஜயநகர அரசர்கள் கட்டியிருக்கும் கோயில்களில் பார்க்கமுடியும். நீதி பரிபாலன தர்மத்தின் அடிப்படையில் தங்கள் ஆட்சி அமைந்துள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்தச் சிற்பங்களை அவர்கள் கோயில்களில் அமைத்தார்கள்.

ஷேக்ஸ்பியர் வடிவமைத்த ‘மெர்சண்ட் ஆப் வெனிஸ்’ என்ற நாடகத்திலும் இது மாதிரியான ஒரு தீர்ப்பைக் கூறுவார்கள். ‘ஒரு பவுண்டு சதையைத்தான் ஒப்பந்தப்படி ஷய்லக் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், ஒரு துளி ரத்தம் கூட சிதறக் கூடாது’ என்று கூறுவாள். ஷேக்ஸ்பியர் மகாபாரதத்தை படித்துவிட்டுத்தான் இந்த நாடகத்தை எழுதி இருப்பாரோ என்று தோன்றுகிறது.

-எஸ்.வி. கிருஷ்ணன், சென்னை

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com