

ஒருவரது ஜாதகத்தில் ராகு கேது தோஷம், சர்ப்பதோஷம், கால சர்ப்ப தோஷம் எல்லாமே நாகங்களை முன்னிறுத்தி ஏற்படக்கூடிய தோஷங்கள் ஆகும். இந்த சர்ப்பதோஷம் இருந்தால் திருமணத்தடை, கணவன்-மனைவி இடையே பிரச்னை, பிரிவினை, புத்திர பாக்கியம் தாமதப்படுதல், குடும்பத்தில் நிம்மதி இல்லாத சூழ்நிலை ஆகியவை இருந்துகொண்டே இருக்கும். குடும்ப வளர்ச்சி மிகவும் சுமாராகவே இருக்கும்.
ராகு கேதுவை வைத்துதான் ஒருவரின் ஜாதகமே மாறுகிறது. ராகு-கேது இரண்டு கிரகங்களையும் பாம்பு என்று சொல்வார்கள். பாம்பின் தலையை ராகு என்றும், உடலை கேது என்றும் நம் முன்னோர்கள் வரையறுத்துள்ளனர். ஜாதகத்தில் மற்ற 7 கிரகங்களை விட ராகுவும், கேதுவும் சக்தி வாய்ந்தவர்கள். ஏனெனில் மற்ற 7 கிரகங்களும் ஏற்படுத்தும் அதிர்வுகள் அனைத்தையும் ராகு, கேது இரண்டும் தான் தங்களுக்குள் உள்வாங்கி அதை பூமிக்கு அனுப்பி வைப்பார்கள்.
எனவே ஒரு மனிதனுக்கு எந்த கிரகத்தின் மூலம் நன்மை ஏற்பட்டாலும் சரி, தீமை ஏற்பட்டாலும் சரி அவை ராகு- கேது வழியாகவே வந்து சேரும்.
ஒருவரின் ஜாதகத்தில் ராகு கேது மிகவும் நன்றாக இருந்தால்தான் எந்த ஒரு கிரகமும் ஆட்சியாகவோ அல்லது உச்சமாகவோ இல்லாமல் இருந்தாலும் அவர்கள் ஜாதகம் ராஜயோகம் பெறுகிறது. இதுதான் உண்மை. நவகிரகங்களில் ராகு கேதுதான் முதலில் பலம் வாய்ந்த கிரகம். அதிலும் முதலில் கேதுவும் அடுத்தபடியாக ராகுவும் உள்ளது. இந்த ராகு கேதுக்களுக்கு நாகதோஷம் என்ற பெயரும் உள்ளது. ராகு-கேது தோஷம் இருந்தால் கண்டிப்பாக திருமணத்தடை ஏற்படுவது நிச்சயம். அதற்கு முறையாக பரிகாரம் செய்தால் மட்டுமே திருமணத்தடை நீங்கும் என்பது ஐதீகம்.
ராகு- கேது தோஷங்கள் தீர்க்க ஏராளமான எளிய சர்ப்ப சாந்தி பரிகாரங்கள் உள்ளதாக ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த பரிகாரங்களில் உங்களால் முடிந்த பரிகாரங்களை தொடர்ந்து செய்து வந்தாலே போதுமானது.
* ராகு - கேது தோஷத்தால் திருமணம் தடைப்படுபவர்கள் கோவிலுக்கு சென்று நாகர் சிலைகளுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் நிச்சயம் பிரச்சனைகள் தீரும்.
* பொதுவாக சர்ப்பதோஷம் அல்லது நாகதோஷம் ஜாகத்தில் இருந்தால் இது அந்த ஜாதகக்காரருக்கு ஒரு விதமான தீமைகளை செய்யும். ஆகையால் நாகதோஷம் உள்ளவர்கள் சிவன் கோவிலுக்கு சென்று சர்ப்ப சாந்தி பரிகாரம் செய்து கொள்வது நல்ல பலன்களை தரும்.
* செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நாகாத்தம்மன், நாகம்மன் புற்றுக்கண் ஆலயங்களுக்குச் சென்று முறைப்படி பால், பழம் நெய்வேத்தியம் செய்து, நெய் தீபம் ஏற்றி 9 முறை வலம் வந்தால் பலன் கிடைக்கும்.
* கோவில்களில் உள்ள நாகப்பிரதிஷ்டைகளுக்கு வெள்ளிக்கிழமைகளில் பால் அபிஷேகங்கள் செய்து மஞ்சள் பூசி குங்கும திலகமிட்டு மலர்களால் அலங்காரம் செய்து பொங்கல், பாயாசம் போன்ற நெய்வேத்தியங்கள் செய்து நாகரை வழிபடலாம். இதன் மூலம் கால சர்ப்ப தோஷத்தில் இருந்து விடுபடலாம் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
* வசதி இருப்பவர்கள் நாகர் கற்சிலையை வேப்பமரமும், அரச மரமும் இணைந்து இருக்கும் பகுதியில் பிரதிஷ்டை செய்து தொடர்ந்து 48 நாட்கள் பால் அபிஷேகம், பூஜை செய்து வழிபட்டால் நிச்சயம் கைமேல் பலன் கிடைக்கும்.
* சங்கட சதுர்த்தி அன்று விரதம் இருந்து வெள்ளெருக்கு விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபட்டால் உடனடியாக ராகு- கேது தோஷத்தை நிவர்த்தி செய்யும் என்கிறார்கள்.
* ராகு காலத்தில் ராகு பகவானுக்கு உளுந்தால் செய்யப்பட்ட பலகாரத்தை நைவேத்தியம் செய்து வழிபட்ட பின்னர் அதை மற்றவர்களுக்கு தானம் கொடுக்க வேண்டும். அதேபோல் திங்கட்கிழமைகளில் கேதுவுக்கு பிரியமான கொள்ளு பயிறு படைத்து வழிபட்டு தானம் செய்வது நல்ல பலன் தரும். ஏழை- எளியவர்கள், மாற்று திறனாளிகளுக்கு தானங்கள் செய்வதன் மூலமாகவும் ராகு- கேது தோஷ நிவர்த்தி பண்ணலாம்.
இந்த எளிய பரிகாரங்களே நல்ல தீர்வை தரும் என்றாலும் ராகு - கேது தோஷம் கோவில்களுக்கு சென்று பரிகாரங்கள் செய்தே தீர வேண்டும் என்று என்று நினைப்பவர்களுக்கு தமிழ்நாட்டில் ஏராளமான ஆலயங்கள் உள்ளன. அவற்றை இங்கே பார்க்கலாம்.
ராகு- கேது என இந்த இரண்டு கிரகங்களும் நம்மை பயமுறுத்தும் கிரகங்கள் அல்ல. ஆலயங்களில் உரிய பரிகாரம் செய்தாலே இந்த 2 கிரகங்கள் மூலம் அபரிமிதமான பலன்களை பெற முடியும்.
* ராகு தலமாக சொல்லப்படும் திருநாகேஸ்வரத்திலும், கேது தலம் என்று சொல்லப்படும் கீழப் பெரும்பள்ளம் ஆலயத்திலும் பூஜைகள் செய்யலாம்.
* இரண்டு கிரகங்களுக்கும் ஒன்றாக சேர்த்து தோஷ நிவர்த்தி பூஜை செய்ய விரும்புபவர்கள் திருவாரூரில் உள்ள திருப்பாம்புரம் ஆலயத்துக்கு செல்வது மிகவும் நல்லது. இந்த ஆலயத்தில் தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் ராகு- கேது தோஷ நிவர்த்தி பூஜை செய்து கொள்கிறார்கள்.
* ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்று 3 நாட்கள் தங்கி இருந்து கடலில் நீராடி சுவாமி தரிசனம் செய்தாலே போதும் அதிக கஷ்டங்களை கொடுக்கும் ராகு-கேது தோஷங்கள் பறந்துபோய்விடும்.
* ராகு-கேது தோஷத்தால் நீண்ட நாட்களாக திருமணம் தடை ஏற்படுவதாக கருதுபவர்கள் வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கை அல்லது காளியை நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபடவும்.
இந்த பரிகாரங்களை செய்வதற்கு முன்பு அவரவர் ஜாதகப்படி ராகு கேது பரிகாரங்களை மேற்கொண்டால் நிச்சயம் நல்ல பலன் நடக்கும். ஜாதகத்தில் உள்ள ராகு மற்றும் கேது எந்த ஸ்தானத்தில் உள்ளன? எந்த நட்சத்திர சாரத்தில் உள்ளன? என்பன போன்ற சில விசயங்களை நன்கு ஆராய்ந்து அதற்கேற்ப சில பரிகாரங்களை செய்தால் தோஷ நிவர்த்தியாகி அவர்களுக்கு ஏற்பட்ட திருமணத் தடை, குழந்தை பாக்கியத் தடை மற்றும் காரியத் தடை நீங்கும்.