ராகு - கேது தோஷமா? வக்கிரமடைந்து வில்லங்கம் செய்யும் கிரகங்களால் தொல்லையா? கவலைய விடுங்க...இந்த கோவிலுக்கு போங்க

Rahu - Ketu dosha
Rahu - Ketu dosha
Published on

பொதுவாக, சிவாலயங்களில் ராஜ கோபுரம், கொடி மரம், நந்தி, மூலவ லிங்கம் அனைத்தும் நேர்கோட்டில் அமைக்கப்பட்டிருக்கும். அவ்வாறில்லாத ஓர் சிறப்புமிக்க சிவாலயம் இருக்கிறது அறிவீர்களா? இக்கட்டுரையில் அந்த சிவாலயத்தைப் பற்றித்தான் தெரிந்துகொள்ளப் போகிறோம்.

வக்கிராசுரன் என்ற அசுரனால் எழுப்பப்பட்ட இந்த சிவாலயம் தான் 'திருவக்கரை வக்கிரகாளியம்மன் திருக்கோவில்'. இந்தத் திருக்கோவில் வளாகத்தில் மொத்தமாக மூன்று கோவில்கள் உள்ளன.

வழக்கம்போல் சிவனிடம் வரம் பெற்று அட்டகாசம் செய்துவந்த அசுரன் தான் வக்கிராசுரன். கோபுரம், கொடிமரம், நந்தி, லிங்கம், என்று அனைத்தையும் தன் பெயருக்கேற்றால் போல வக்கிரமாகவே கட்டி வைத்து வழிபட்டு வந்தான். அவனோடு சேர்ந்து கர்பவதியான தங்கை துன்முகியும் அட்டகாசம் செய்துவந்த நிலையில், சிவன் இந்த வக்கிராசுரனை அழிக்கும் பொறுப்பினைப் பெருமாளிடம் ஒப்படைத்தார். துன்முகியை அழிக்கும்படி பார்வதி தேவியிடம் சொன்னார். அதன்படி பெருமாள் தன் சக்ராயுதம் கொண்டு வக்கிராசுரனை வதைத்து, நின்ற திருக்கோலத்தில் வரதராஜராக இக்கோவிலின் மூன்றாம்கட்டில் வரங்கள் அள்ளித்தந்து அருள்பாலிக்கிறார்.‌ இவரோடு‌ பெரிய திருவடியான பக்ஷிராஜனும் சிறிய திருவடியான வாயு மைந்தனும் அருள்செய்கிறார்கள்.

வக்கிராசுரனின் தங்கையான துன்முகி கருவுற்றிருந்தாள். ஆகையால் போர் தர்மப்படி கர்பிணிகளை வதைக்கக் கூடாது என்ற சிக்கல் பார்வதி தேவிக்கு எழுந்தது. அதனால் சப்த கன்னியர்களை ‌உதவிக்கழைத்தாள். அவர்களுள் சாமுண்டி வக்கிரகாளியாகி துன்முகி கருவில் இருந்த குழந்தையை முதலில் வெளியில் எடுத்துவிட்டுப் பிறகு அவளை வதைத்து அனைவரையும் காத்தாள். 

வக்கிராசுரன் மேல்திசை நோக்கி அமைத்த வக்கிர லிங்கம், வக்கிர நந்தி அமைந்துள்ள இப்பகுதியிலேயே சப்த மாதர்களும் வடதிசை நோக்கிக் கொலு அமர்ந்துவிட, அவர்களுள் ஒருத்தியான சாமுண்டி வக்கிரகாளி உருவிலேயே எட்டு கரங்களோடு அமர்ந்து அருள்பாலிக்கும் திருக்கோவிலாகியது இது. 

நிழல் கிரகங்களான ராகுவுக்கும் கேதுவுக்கும் அதிதேவதை வக்கிரகாளி அல்லவா! இந்த வக்கிரகாளியை 5 பிரதக்ஷிணமும் 4 அப்பிரதக்ஷிணமும் செய்து‌ வழிபட்டால் எப்பேர்பட்ட ராகு-கேது தோஷமும் நீங்கிவிடுமென்ற நம்பிக்கை ஆண்டாண்டு காலமாக உள்ளது.

இதையும் படியுங்கள்:
குருவாயூர் கோயில்கள்... 'மம்மியூர்'- பெயர் காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!
Rahu - Ketu dosha

கோவிலின் முதற்கட்டு வக்கிர லிங்கம், வக்கிர நந்தி, வக்கிர காளிக்கு. மூன்றாம்கட்டு வரதராஜருக்கு. நடுக்கட்டில் இருப்பவர் வடிவாம்பிகை உடனுறை சந்திர மௌலீஸ்வரர். வெறும் லிங்கத்திருமேனியாக இல்லாமல் சிவனின்‌ தத்புருஷம், வாமதேவம், அகோரம் ஆகிய மூன்று முகங்கள் தெரியும்படி மூலவ லிங்கம் அமைந்திருப்பது இக்கோவிலின்‌ முக்கியச் சிறப்பாகும். எதிரே நின்று வழிபடும் உங்களுக்கு நேராய்த் தெரிவது ஈசனின் தத்புருஷ முகம். உங்களின் இடக்கைப் பக்கம் தெரிவது வாமதேவ‌முகம். வலக்கைப்பக்கம் தெரிவது அகோர முகமாகும். பாலாபிஷேகத்தின் போது மட்டும் அகோர‌‌முகத்தின் கோரைப்பற்கள் தரிசிக்கக் கிடைக்கும்.‌ சந்திரமௌலீஸ்வரர் அருள் செய்யும் இந்த வளாகத்தில் 16 பட்டை லிங்கம், தக்ஷிணாமூர்த்தி, குண்டலினி மகரிஷி, பைரவர், இன்னொரு வக்கிரகாளி, வாதாபி கணபதி, ஆறுமுகர்‌, பிச்சாண்டவர், நாகராஜர் ஆகியோரும் உங்களின் தோஷங்களை ‌விலக்கி நல்வாழ்வு தந்தருள வீற்றிருக்கிறார்கள்.‌

சந்திரமௌலீஸ்வரருக்குப் பின்புறம் தான் வரதராஜர் இருக்கிறார். வெளிப்பிரகாரம் சுற்றி வந்தால் தென்திசை நோக்கும் காக வாகனத்தில் சனீஸ்வரர் இருக்கும் நவக்கிரக சந்நிதி,  தல விருட்சங்களான வில்வம், வன்னி மரங்கள், சகஸ்ரலிங்கம், வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் ஆகியோரை தரிசிக்கலாம். ‌வெளிவரும் பாதையில் இடப்புறம் தனிச்சந்நதியில் பெயருக்கேற்றாற்போன்ற வடிவழகில் அன்னை வடிவாம்பிகை அருளை அள்ளித்தருகிறாள்.

இதையும் படியுங்கள்:
‘திருநெல்வேலி’ என்று பெயர் வரக் காரணம் தெரியுமா?
Rahu - Ketu dosha

 பரிகாரங்களுக்குக் கட்டுப்படாத கிரக தோஷங்கள், என்னவென்றே தெரியாத முட்டுக்கட்டைகள், ஜாதகத்தில் வக்கிரமடைந்து வில்லங்கம் தந்துகொண்டிருக்கும் கிரகங்கள் ஆகிய இவற்றுக்கெல்லாம் இந்த திருவக்கரை வக்கிரகாளி – சந்திரமௌலீஸ்வரர் திருக்கோவில் சக்திவாய்ந்ததாக அறியப்படுகிறது. அமாவாசை நண்பகல் ஆரத்தியும், பௌர்ணமி நடுநிசி ஆரத்தியும் இங்கே விஸேஷம். பௌர்ணமி நடுநிசியில் வக்கிரகாளி‌மண்டபத்தின் மேலே 5கிலோ கற்பூரத்தால் ஜோதி தரிசனம் காண்பிக்கிறார்கள். தொடர்ந்து மூன்று பௌர்ணமிகள் இந்த ஜோதி தரிசனம் பார்த்தால் வக்கிர‌ கிரகங்கள் சாந்தப்படும் என்பது நம்பிக்கை.

இக்கோவிலை திண்டிவனத்திலிருந்தும் அணுகலாம்; புதுவையில் இருந்தும் அடையலாம். ஒருமுறை போய்வாருங்களேன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com