இவரே சீடன்; இவரே குரு... மந்திரமும் தந்திரமும்!

Ramanuja
Ramanuja
Published on

இவரே சீடன்; இவரே குரு! - வித்தியாசமான கற்பனை:

திருக்கோஷ்டியூரில் வாழ்ந்திருந்த திருக்கோஷ்டியூர் நம்பியிடம் திருமந்திர உபதேசம் பெற்றார், புரட்சித் துறவி ராமானுஜர். ஆனால், அவ்வளவு சுலபத்தில் மந்திரோபதேசம் கிடைத்துவிடவில்லை. ஸ்ரீரங்கத்திலிருந்து திருக்கோஷ்டியூருக்கு ராமானுஜரும் சளைக்காமல் பதினேழு முறை நடந்து, நடந்து சென்று முயற்சிக்கவும் தயங்கவில்லை. 

நம்பிகளும், ‘உன் கோபம், பொறாமை, அசூயை, சுயநலம், வெறுப்பு, அதீத பற்று முதலான உலகாயத குணங்களை விட்டுவிட்டு அதாவது முற்றிலும் சுயத்தை இழந்து சரணாகதி மனப்பக்குவத்துக்கு வா, என்று ஒவ்வொரு முறையும் சொல்லி, அவரை அலைக்கழித்தார். ஆனால், அப்படி 17 முறை நடந்து வந்ததில் ராமானுஜரைப் பொறுத்தவரை ஓர் அனுபவம் கிட்டியிருக்கும். வழியில் தன்னைக் காணும் மக்கள் பலர் கைக்கட்டி, வாய்பொத்தி, சற்று விலகிப்போய் அவருக்கு வழிவிட்டு ‘ஒதுங்கும்’ முறை கண்டு மனம் வெதும்பியிருப்பார். நம்மைப் போல இவர்களும் மனிதர்கள்தானே, இப்படி இவர்கள் தாங்களாக ஒதுங்கிப் போய், நம்மை ஏன் ஒதுக்குகிறார்கள் என்று குமுறியிருப்பார். இப்படி மரியாதை, தாழ்வு மனப்பான்மை அல்லது பயம் காரணமாக ஒதுங்கிச் செல்லும் மனிதர்கள் தன் நடைவழியில் மட்டுமல்லாமல், இந்த பாரத தேசமெங்கும் பரவியிருக்கவேண்டும் என்றே கருதியிருப்பார். ‘நாராயணன் படைப்பில் இப்படி ஒரு பேதமா, இது தவறாயிற்றே’ என்று கருதியிருப்பார். 

பதினெட்டாம் முயற்சியில் குருவின் திருவருள் கிட்டியது. ஆமாம், ‘அடியேன் ராமானுஜன் வந்திருக்கிறேன்,‘ என்று தெரிவித்த பிறகுதான் ஆசார்யனின் அருளாசி கிட்டியது. அப்போதும் நம்பிக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்க வேண்டும். ‘இத்தனை முயற்சித்து இவன் மந்திரோபதேசம் பெற வருகிறானென்றால், இதில் ஏதோ சுயநலம் இருக்க வேண்டும்,‘ என்று யோசித்தார். அதனாலேயே, உபதேசம் செய்த பிறகு, ‘‘இந்த உபதேசம் உனக்கே உனக்கு மட்டும்தான். வேறு யாருக்கும் நீ இதனை போதிக்கக் கூடாது. அவ்வாறு நீ துஷ்பிரயோகம் செய்தாயானால், உனக்கு மறுமையில் நரகவாசம்தான்,’’ என்று சொல்லி பயமுறுத்தி வைத்தார். 

இந்த பயமுறுத்தலுக்குப் பின்னாலும் ஒரு தந்திரம் இருந்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. வெறுமே மந்திரோபதேசம் மட்டும் பெறுவது ராமானுஜரின் நோக்கமாக இருக்காது; பதினேழு முறை புறக்கணிக்கப்பட்டாலும் மீண்டும் வந்து உபதேசம் அளிக்குமாறு இறைஞ்சும் இந்த மனோதிடம், வேறு எதையோ திட்டமிட்டிருக்கிறது என்று நம்பிகள் உணர்ந்திருப்பார். அதனாலேயே அந்தத் திட்டம் நிறைவேறட்டும் என்று கருதியே பயமுறுத்தியிருக்க வேண்டும். இந்த விஷயத்தில் குரு – சிஷ்யன் இருவரும் ஒருவருக்கொருவர் தனித்தனியே ரகசியம் பாராட்டினாலும், பொது நோக்கு ஒன்றாகவே இருந்திருக்கிறது. ஒற்றை மனிதராக ராமானுஜர் அந்த மந்திரோபதேசத்தைப் பெற்று, பிறகு தான் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவருக்கு, அவருக்கு, பிறகு அடுத்தவருக்கு என்று சராசரியாக ஒரு பரம்பரைக்கு ஒருவர் என்ற விகிதத்தில் அந்த உபதேசத்தை போதிப்பது என்ற வாழையடி வாழை கொள்கையை நம்பி கொண்டிருந்தார், நம்பிகள். ஆனால் ராமானுஜரோ மரம் ஒன்றானாலும், விழுதுகள் ஆயிரம் என்ற ஆலமரக் கொள்கையைப் பற்றியிருந்தார்.  

அதனால்தான் குரு அச்சுறுத்தியபோதும் ஒரு தனி மனிதரின் இழப்பால் பல்லாயிர மக்கள் நலம்பெற முடியுமானால், அப்படி இழப்பைச் சந்திக்கும் அந்த மனிதர் தானாகவே இருக்கட்டும் என்று உறுதி பூண்டிருந்தார் ராமானுஜர். நிதானமாக குருவின் உபதேசத்தை செவிமடுத்தார். மந்திரத்தையும் அதன் பொருளையும் உள்வாங்கிக் கொண்டார். இதயக் கோயிலில் திருமாலை இருத்தி, அந்த மந்திரத்தால் பல நூறுமுறை அர்ச்சித்தார். பிறகு திருக்கோஷ்டியூர் சௌம்ய நாராயணப் பெருமாள் கோயில் கோபுரத்தின் மீது ஏறினார். 

அங்கிருந்தபடியே ஊர் மக்களை எல்லாம் அழைத்தார். கோபுர உச்சியிலிருந்து ராமானுஜர் கூவி அழைப்பதை அறிந்த நூற்றுக்கணக்கான மக்கள் அங்கே உடனேயே கூடிவிட்டார்கள். ராமானுஜர் ஏதாவது விபரீதமாக செய்து கொண்டு விடுவாரோ என்ற பய கற்பனையுடன் அண்ணாந்து பார்த்த அவர்கள் மீது ‘‘ஓம் நமோ நாராயணாய’’ என்ற அஷ்டாக்ஷர மந்திரம் பூத்தூவலாக விழுந்தது. ஒரு துளி பட்டவுடன் சிலிர்ந்துக்கொண்ட அவர்கள், அதுவே மழையாகப் பொழிந்தபோது அப்படியே பரவசமாயினர். இருகரம் கூப்பி மேலே நின்றுகொண்டிருந்த ராமானுஜரைத் தொழுதார்கள். 

இதையும் படியுங்கள்:
நிக்ரஹம் செய்யத் தெரியாதவள்!
Ramanuja

எதிர்பார்த்ததுபோல நம்பிகள் போலியாக வெகுண்டார். ‘‘என் நம்பிக்கைக்கு துரோகம் இழைத்துவிட்டாய். உனக்கு நரகம்தான்’’ என்று சபிப்பது போல நடித்தார். இதன் மூலம், ராமானுஜருக்குத் தான் தனிச் சலுகை அளிக்கவில்லை என்று தன்னுடன் இருந்த பிற சீடர்களுக்கு ‘ஆறுதலும்’ அளித்தார். ஆனால் பின்னாளில் ஒரு கட்டத்தில் அவரே உணர்ச்சிவசப்பட்டவராக, ‘‘நீர்தான் எம்பெருமானாரோ!’’ என்று கூறி ராமானுஜரை ஆரத் தழுவிக்கொண்டார். அப்போதே மானசீகமாக அவர் நாராயணனிடம் வேண்டிக் கொண்டிருந்திருப்பார்: ‘பகவானே, இந்தப் பிள்ளைக்கு தீர்க்காயுசு கொடு.’

இதனால்தான் ‘நரகம்தான்’ என்று குரு சாபம் பெற்றாலும், ஒரு முழு மனித ஆயுளைப் - 120 ஆண்டுகள் – பூர்த்தி செய்து சமூகத்துக்கும் இறைவனுக்கும் ராமானுஜரால் சேவையாற்ற முடிந்திருக்கிறது. 

இந்தப் பெருமை ஸ்ரீராமானுஜருக்கு மட்டுமே உண்டு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com