அனுமன் எழுதிய இராமாயணம்!

அனுமன்...
அனுமன்...

ராம காதையை எழுதி முடித்த வால்மீகி முனிவருக்கு மனம் நிறைந்து இருந்தது. இந்த உலகம் உள்ளளவும் இராம பிரானின் பெருமை நிலைத்திருக்கும். இராமபிரான் வாழ்க்கையை, மகா காவியத்தின் வாயிலாக எடுத்துரைத்த காரணத்தால் என்னுடைய பெயரும் நிலைத்திருக்கும் என்று பெருமிதம் அடைந்தார். இராமரை நினைப்பவர்கள் என்னையும் நிச்சயமாக நினைத்துப் பார்ப்பார்கள் என்று மகிழ்ச்சி அடைந்தார்.

வால்மீகி இராமாயணத்தை படித்து, அதனுடைய நிறை, குறைகளை தயக்கமில்லாமல் சுட்டிக் காட்டுவதற்கு மகரிஷி நாரதரால் மட்டுமே முடியும் என்று திரிலோக சஞ்சாரியைத் தேடி அலைந்தார். 24000 சுலோகங்களையும் படித்தார் நாரத மாமுனி. “நீங்கள் எழுதிய இராமாயணம் நன்றாக இருக்கிறது. ஆனாலும், இதைவிட அனுமான் எழுதிய இராம காவியம் மிகவும் அருமை” என்றார் நாரதர்.

வால்மீகிக்கு இந்த செய்தி அதிர்ச்சியாக இருந்தது. என்னுடைய இராமாயணத்திற்குப் போட்டியாக, மற்றொரு இராமாயணம் என்றால், இவை இரண்டில் எது சிறந்தது என்ற தர்க்கம் எழும், ஆகவே அனுமான் எழுதிய இராமாயணத்தைத் தேடிக் கண்டுபிடித்து, படிக்க வேண்டியது அவசியம் என்று அனுமான் இராமாயணத்தை தேடி அலைந்தார். ஒரு வாழைத் தோட்டத்தில், ஏழு பெரிய இலைகளில் அனுமான் எழுதியிருந்த இராமாயணத்தைப் பார்த்தார் வால்மீகி. இலக்கிய, இலக்கணப் பிழை எதுவுமில்லாமல், அழகான சந்தத்துடன் அமைந்திருந்த அனுமத் இராமாயணம் அவரைக் கவர்ந்தது. தன்னையறியாமல் அவருடைய கண்களிலிருந்து கண்ணீர் வந்தது.

“ஏன், பிழை எதுவும் இருக்கிறதா? எதற்காக கலக்கம் அடைகிறீர்கள்” என்று கேட்டார் அனுமன்.

“இல்லை, நீ எழுதி இருக்கிற இராமாயணம் மிக நன்றாக இருக்கிறது” என்றார் வால்மீகி.

“பின்னர், எதற்காக நீங்கள் கண் கலங்குகிறீர்கள்” என்று வினவினார் அனுமான்.

“நீ எழுதிய இராமாயணத்தைப் படித்தவர்கள்  எவரும், அதற்குப் பின்னால், நான் எழுதிய வால்மீகி இராமாயணத்தைச் சீண்ட மாட்டார்கள். அதனால் கண் கலங்கினேன்” என்றார் வால்மீகி. இதைக் கேட்டவுடன் அஞ்சனை மைந்தன் இராமயணம் எழுதியிருந்த ஏழு இலைகளையும் உருத்தெரியாமல் கிழித்து எறிந்தார், “இனி யாரும் என்னுடைய இராமாயணத்தை படிக்க முடியாது” என்றார்.

இதையும் படியுங்கள்:
கொரிய பெண்களின் அழகு ரகசியம் தெரியுமா?
அனுமன்...

வால்மீகி முனிவருக்கு இது அதிர்ச்சியை அளித்தது. அனுமானிடம் ஏன் இப்படிச் செய்தாய் என்று கேட்டார்.

“நான் இராமாயணம் எழுதியது, இராமரை என்னுடைய நெஞ்சில் நிலை நிறுத்திக் கொள்வதற்கு. ஆனால், நான் எழுதிய இராமாயணம் இல்லா விட்டாலும், என் ராமர் என்னை விட்டு அகல மாட்டார். இராம நாம ஜெபம் என்றும் என்னுடன் இருக்கும். நீங்கள்  இராமாயணம் எழுதியது உலகில் உங்கள் பெயர் என்றென்றும் இருக்க வேண்டும் என்ற ஆசையில். அதற்கு உங்களுடைய இராமாயணம் நிலைத்து நிற்க வேண்டும். அதனால், நான் எழுதிய இராமாயணம் அழிந்தால் யாருக்கும் பாதகமில்லை” என்றார் சொல்லின் செல்வர்.

சிறந்த கவிநடையில், பலன் எதுவும் எதிர்பாராமல், இராமபக்தியில் எழுதியதால், அனுமத் ராமாயணம்  சிறந்து விளங்குகிறது என்பதைப் புரிந்து கொண்டார் வால்மீகி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com