நலம் தரும் சுந்தரகாண்ட நவரத்தின பாராயண ஸ்லோகங்கள்!

அனுமானின் இராம பக்தி...
அனுமானின் இராம பக்தி...

24000 ஸ்லோகங்களையும், ஆறு காண்டங்களையும் கொண்டது வால்மீகி இராமாயணம். 24 அட்சரங்களைக் கொண்ட காயத்ரி மந்திரத்தின் அட்சரத்திற்கு ஆயிரம் என்று 24000 ஸ்லோகங்கள். பாலகாண்டம், அயோத்யா காண்டம், ஆரண்யகாண்டம், கிஷ்கிந்தாகாண்டம், யுத்தகாண்டம் என்று ஐந்து காண்டங்களுக்கு, முக்கிய நிகழ்வுகள் அல்லது இடங்களைத் தொடர்புபடுத்தி தலைப்பைக் கொடுத்த மகரிஷி வால்மீகி, அனுமனை முன்னிலைப்படுத்தியுள்ள இந்தக் காண்டத்திற்கு சுந்தரகாண்டம் என்று பெயர் சூட்டியுள்ளார்.

அனுமானின் இராம பக்தி, துணிவு, தன்னடக்கம், ஆற்றல், சமயோசிதம், நினைத்ததை முடிக்கும் தன்மை ஆகியவை சுந்தரகாண்டத்தில் முழுமையாகக் காணப்படுகிறது.

ஆறு காண்டங்களையும் படிக்க இயலாதவர்கள், சுந்தரகாண்டம் மட்டுமாவது பாராயணம் செய்ய வேண்டும் என்பார்கள். அதுவும் முடியாதவர்கள், நவரத்தின ஸ்லோகங்கள் என்று சொல்லப்படுகின்ற ஒன்பது முக்கிய ஸ்லோகங்களை தினந்தோறும், மூன்று முறை சொல்வது சாலச் சிறந்தது. அந்த ஒன்பது ஸ்லோகங்கள், விளக்கத்துடன்.

 1. ததோ ராவணநீதாயா: ஸீதாயா: சத்ருகர்சன:! இயேஷ பதமன்

   வேஷ்டும் சாரணா சரிதே பதி!!

எதிரிகளை அழிக்கக்கூடிய ஆற்றல் பெற்றவர் அனுமன். இராவணன் சீதையை, சித்த சாராணர்கள் உலாவி வரும், ஆகாய மார்க்கமாய் அபகரித்துச் சென்றான். ஆகையால், அனுமான் சீதை இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க, அந்த வான வழியாகவே செல்ல விருப்பம் கொண்டார்.

சுந்தரகாண்டத்தின் முதல் ஸ்லோகமான இது சூரியனுக்குப் பிரியமான  மாணிக்கக் கல்லைப் போன்றது.

2. யஸ்ய த்வேதானி சத்வாரி வாநரேந்திர யதா தவ! த்ருதிர் –

  த்ருஷ்டிர்- மதிர்- தாக்ஷ்யம் ஸ கர்மஸூ ந ஸீததி!!

வானரத் தலைவனே, உன்னிடத்தில் உள்ளது போன்ற மனஉறுதி, முன்நோக்கு, புத்தி கூர்மை, செயல் திறமை ஆகிய நான்கு பண்புகள் உள்ளவன் எந்தச் செயலிலும் தாழ்ந்து போகமாட்டான்.

சந்திரனுக்கு உகந்த கடல் முத்துவுக்கு ஒப்பான ஸ்லோகம்.

3. அநிர்வேத: ச்ரியோ மூல – மநிர்வேத: பரம் ஸூகம்! அநிர்வதோ

  ஹி ஸததம் ஸர்வார்தேஷூ ப்ரவர்தக:

அனைத்திற்கும் மூலகாரணமான உற்சாகம்தான் செல்வங்கள். உற்சாகம்தான் பேரானந்தம். உற்சாகம்தான், எல்லா காரியங்களிலும், மக்களை ஈடுபடுத்தக் கூடியது.

‘அனுமத் கீதை’ என்று மதிக்கப்படுகிற இந்த ஸ்லோகம், அங்ககாரனுக்குப் ப்ரீதியான பவழத்திற்கு நிகரானது.

4. நமோஸ்து ராமாய ச லஷ்மணாய தேவ்யை ச தஸ்யை

ஜனகாத்மஜாயை! நமோஸ்து ருத்ரேந்த்ர – யமாநிலேப்யோ,

நமோஸ்து சந்த்ரார்க – மருத்கணேப்ய:!!

இராமனுக்கு நமஸ்காரம். லஷ்மணனுக்கு வந்தனம். அந்த ஜானகி தேவிக்கும் நமஸ்காரம். ருத்ரன், இந்திரன், அக்னி ஆகியோருக்கும் நமஸ்காரம். சந்திரன், சூரியன், மருத்கணங்கள் ஆகியோருக்கும் வந்தனங்கள்.

‘ராமதாரக மந்திரம்’ என்று போற்றப்படும் இந்த ஸ்லோகம், புதனுக்கு உகந்த மரகதப்பச்சைக்கு ஒப்பானது.

5. ப்ரியாந் நஸம்பவேத் துக்கம் அப்ரியாததிகம் பயம்! தாப்யாம் ஹி

  யே வியுஜ்யந்தே நமஸ்தேஷாம் மஹாத்மனாம்!!

விரும்பப்பட்டவற்றால் துக்கம் ஏற்படுவதில்லை. அதே சமயம், விரும்பப் படாதவற்றால் அதிகம் பயம் ஏற்படுகிறது. ஆனால், மகாத்மாக்களான ஞானிகள், பிரியமானது, பிரியமில்லாதது என்ற இரண்டு விஷயங்களிலிருந்தும் தொடர்பு நீங்கினவர்கள். அப்படிப்பட்ட ஞானியர்களுக்கு நமஸ்காரம்.

இந்த ஸ்லோகம், சீதா தேவி தனக்குத் தானே சொல்லிக்கொண்ட கீதோபதேசமாகக் கருதப்படுகிறது. குருவிற்குப் பிரியமான புஷ்பராக ரத்தினத்திற்கு ஈடானது.

6. ராம: கமலபத்ராக்ஷ:  ஸர்வஸத்த்வ-மனோஹர:! ரூபதாக்ஷிண்ய-

  ஸம்பந்ந: ப்ரஸீதோ ஜனகாத்மஜே!!

ஜனக மகாராஜாவின் தவப்புதல்வியே, இராமன் தாமரைத் தளிர் போன்ற அழகான கண்களைக் கொண்டவர். அனைத்து உயிரினங்களையும் ஈர்த்துக்கொள்ளும் கவர்ச்சியான வடிவம் கொண்டவர். அழகான உருவம், தயாளகுணம் போன்ற நற்பண்புகளுடன் பிறந்தவர்.

இராமன், சீதை, அனுமன் ஆகிய மூவருடனும் தொடர்புகொண்ட இந்த ஸ்லோகம், சுக்ரனுக்கு உகந்த வைரக்கல்லுக்கு ஒப்பானது.

7. ஜயத்யதிபலோ ராமோ லக்ஷ்மணச் ச மஹாபல:! ராஜா ஜயதி

  ஸூக்ரீவோ ராகவேணாபிபாலித:!!

  தாஸோஅஹம் கோஸலேந்த்ரயஸ்ய ராமஸ்யாக்லிஷ்ட கர்மண:!     

  ஹனுமாஞ்-சத்ருசைந்யாணாம் நிஹந்தா மாருதாத்மஜ:!!

மகாபலவான் இராமனுக்கு வெற்றி. மகாபலவான் லட்சுமணனுக்கு வெற்றி. ராமனால் பாதுகாக்கப்பட்ட சுக்ரீவ ராஜாவுக்கு வெற்றி. நன்மைகள் யாவற்றையும் நல்கும் கோசல நாட்டு மன்னன் ராமனின் தொண்டன் நான். என் பெயர் அனுமான். வாயுதேவனின் குமாரன். சத்ருக்களின் சேனைக்களை அழிப்பவன்.

சனிபகவானுக்குப் பிரியமான நீலக்கல்லுக்கு ஈடானது.

இதையும் படியுங்கள்:
காவடி பிறந்த வரலாறு தெரியுமா?
அனுமானின் இராம பக்தி...

8. யத்யஸ்தி பதி சுஸ்ரூஷா யத்யஸ்தி சரிதம் தப:! யதி

வாஸ்த்யேகபத்நீத்வம் சீதோ பவ ஹநூமத:!!

நான் எனது பர்த்தாவிற்கு பணிவிடைகள் செய்தது உண்மையானால், நான் தவம் நோற்றது உண்மையானால், நான் பதி விரதை என்பது உண்மையானால், அக்னி பகவானே, அனுமானுக்கு நீர் குளிர்ச்சியாக இரும்.

சீதை அக்னி பகவானை வேண்டிக்கொள்ளும் இந்த ஸ்லோகம், ராகு கிரகத்திற்கு உகந்த கோமேதகத்திற்கு இணையானது.

9.  நிவ்ருத்த-வனவாஸம் ச த்வயா ஸார்தமரிந்தமம்! அபிஷிக்த

   மயோத்யாயாம் க்ஷிப்ரம் த்ர க்ஷ்யஸி ராகவம்!!

வனவாசம் முடிந்து திரும்பிய ராமனை, சத்ருக்களை மாய்த்த, இரகுவம்ச திலக ராமனை, அயோத்தி மாநகரில் உம்முடன் கூடி பட்டாபிஷேகம் செய்யப்பட்ட ராமனை, சீக்கிரமே காணப்போகிறீர்கள்.

கேது கிரகத்திற்கு விருப்பமான வைடூரியத்திற்கு ஒப்பான ஸ்லோகம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com