ருருவின் ஆசை!

ஓவியம்; சேகர்
ஓவியம்; சேகர்

முத்திரத்தின் நடுவே அரண்மனை கட்டி, ஆர்ப்பாட்டமாய் வாழ்ந்த ருரு என்ற அசுரன் ஒருமுறை பிரம்மாவை நோக்கி கடும் தவமியற்றினான். பிரம்மா அங்கு தோன்றி, “என்ன வரம் வேண்டும்” எனக் கேட்க, “தாக்ஷாயணி எனக்கு மனைவியாக வேண்டும். அதுமட்டுமின்றி, சிவபிரான் என்னைக் கொல்லக் கூடாது. என் சிரம் கீழே விழுந்தாலும் நான் மீண்டும் உயிர் பெற வேண்டும். இறந்தாலும் என் தலை தரையில் விழக்கூடாது. என்னைப் பகைத்தவர்கள் பலகீனராக வேண்டும்” என்று கோரினான்.

பிரம்மா, “லோகமாதா பத்தினியாக வேண்டும் என்ற வேண்டுகோளைத் தவிர, எல்லாமும் தந்தேன். அவளைக் குறித்துத் தவம் செய்து அவ்வரத்தைப் பெற்றுக்கொள்” எனக்கூறி மறைந்தார்.

மூவுலகையும் வென்ற ருரு, தேவகன்னியரோடு கூடி மகிழ்ந்தான். பிறகு, சலிப்பேற்பட்டு தாக்ஷாயணியை யாசித்து, சிவனை நோக்கிக் காற்றையும் தவிர்த்துத் தவமிருந்தான். அதே வேளையில் இந்திராதி தேவர்கள் நீலகிரி மலையில் ருத்ராணியைக் குறித்துத் தவமிருந்தார்கள்.

சிவபிரான், “பிரியநாயகி, ருருவின் தவாக்கினியால் திரிலோகங்களும் தகிக்கிறது. நீ வடிவம் மாறி அவன் தவத்தை நிர்மூலம் செய்” என உத்தரவிட்டார்.

பொதியமலை சென்ற தேவி, யானைத்தோலைப் போர்த்துக் கொண்டாள். பசுவொன்றைக் கொல்ல யத்தனித்த சிங்கத்தைக் கொன்று, அதன் குருதியை வாரிக் கூந்தலில் பூசிக் கொண்டாள். அதன் தோலை உரித்து மேலாடையாய் அணிந்தாள். வயிற்றைப் பெருக்க வைத்து, பற்களை வெளியே வரச் செய்தாள். பத்து விரல்களிலும் நகங்கள் கூர்மையாய் நீண்டன. விழிகள் தெறித்துவிடும் போல் பிதுங்கித் தெரிந்தன. தாடை தொய்ந்தது. அட்டகாசமாய் சிரித்தபடி, குகையின் கதவை கை முஷ்டியால் உடைத்து “தாக்ஷாயணி வந்து விட்டேன் உன்னை ஆலிங்கணம் செய்து கொள்ள... தவத்தை விடு” எனக் கத்தினாள்.

அரைக்கண் திறந்து பார்த்த அசுரனின் உடல், தேவியின் குரூர வடிவம் கண்டு நடுங்கியது. பிறகு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, “நீ காளராத்திரி. நான் பார்த்த தாக்ஷாயணியல்ல. நீ உடனே இங்கிருந்து போகா விட்டால் உன்னை யமலோகம் அனுப்பி விடுவேன்” என்று சொல்லி, தேவியைக் கதாயுதத்தால் அடித்தான்.

அம்பிகை சினத்தோடு முஷ்டியால் அடிக்க, அவன் முகத்திலிருந்து உதிரம் கொட்டியது. ஒவ்வொரு துளி ரத்தத்திலிருந்தும் ஒவ்வொரு ருரு உண்டாகி தேவியுடன் போரிட்டனர். மரங்களைப் பறித்து வீசினர்.

தேவி அவற்றை ஒதுக்கியபடி சிரிக்க, ஒவ்வொரு சிரிப்பிலிருந்தும் அதிபயங்கர யோகினிகள் வெளிப்பட்டு ருருக்களை அழித்தனர்.

இதையும் படியுங்கள்:
கன்னியாகுமரி ஸ்பெஷல் முந்திரி கொத்து செய்யலாமா?
ஓவியம்; சேகர்

அசுரனின் உதிரம் கீழே விழாமல் பல சண்டிகைகள் வாயை அகலமாகத் திறந்து வைத்திருந்தனர். தேவிக்குப் பல கைகள் முளைக்க, பாதாளத்துக்கும், சொர்க்கத்துக்குமாக ஓடினான் ருரு. பிரளயகால சூரியன் போல் விசுவரூபமெடுத்தாள் ஈஸ்வரி.

தேவியின் மேல் பாய்ந்தான் மூடன். வஜ்ராயுதம் போல் கூர்மையான தன் நகங்களால் அவன் சிரசைக் கிள்ளி மாமிசத்தை அதிலிருந்து உதறி கபாலத்தைக் கரத்தில் தாங்கினாள். அப்படியே சிவபெருமானைக் காணச் சென்றாள். பார்வதி மனம் சாந்தமாகும்படி, அசுரன் தலையை திரிசூலத்தில் குத்தி வைத்து அவளுக்கு உபசார வார்த்தைகள் கூறினார் ஈசன். இந்திராதி தேவர்களும், பிரம்மனும், விஷ்ணுவும் ஸ்தோத்தரிக்க, தேவி கோர ரூபம் விடுத்து, அலங்கார ரூபிணியாய்க் காட்சியளித்தாள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com