அரும்பு (மலரின் தொடக்க நிலை), மொட்டு (அரும்பு வெளியில் தெரியும் நிலை), முகை (மொட்டு சிறிது விரியும் அதாவது முகிழ்க்கும் நிலை), மலர் (பூத்த மலர்), பொதும்பர் (பூக்கள் பலவாக குலுங்கும் நிலை)... என பல்வேறு பரிமாணங்களில் மலர்கள் கண்களுக்குள் மணம் வீசச் செய்யும் 'சமயபுரம் மாரியம்மன் பூச்சொரிதல் விழா'. திருச்சியிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் வடக்கு திசையில் மகாசக்தி பீடமாக திகழ்ந்து தன்னை நாடி வரும் பக்தர்களுக்கெல்லாம் அன்னையாய் அருள் பாலிக்கிறார் சமயபுரத்தாள்.
இங்கு தைப்பூசத் திருவிழா, பூச்சொரிதல், சித்திரைப் பெருந்திரு விழா, புரட்டாசியில் நவராத்திரி திருவிழா ஆகியவை முக்கியமான திருவிழாக்கள்.
தை மாதத்தில் 11 நாட்கள் தைப்பூசத் திருவிழா நடைபெறும். பெருமாளிடமும், ஈஸ்வரரிடமும் சீர்வரிசை பெறும் அம்மன் இவள் மட்டுமே!
கொள்ளிடம்தான் அண்ணன் ஸ்ரீரங்கநாதரையும், தங்கை சமயபுரத்தாளையும் பிரிக்கிறது. தைப்பூசத்தின் போது அம்மன், கொள்ளிடக் கரையின் தென் பகுதியில் நீராட வருவாள். அன்று ஸ்ரீரங்கம் பெருமாள் ஆலயத்திலிருந்து பட்டுப் புடவைகள், மாலைகள், தளிகைகள் ‘மகமாயி’க்கு சீராக அனுப்பி வைக்கும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. இதை தீர்த்தவாரி விழா என்பர்.
சித்திரை திருவிழா பத்தாம் நாளில் திருவானைக்காவல் ஆலயத்தில் அருள் புரியும் ஸ்ரீஜம்புகேஸ்வரர், மாரியம்மனுக்கு சீர்வரிசை அனுப்பி வைப்பார்.
பொதுவாக பக்தர்கள்தான் இறை சக்தியை நோக்கி விரதமிருப்பதும் தவமிருப்பதும் மேற்கொள்வார்கள். ஆனால், உலக மக்களின் நன்மைக்காக சமயபுரம் மாரியம்மனே 28 நாள் விரதம் இருந்து வழிபாடு செய்யக்கூடிய திருவிழாதான், இந்த சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம். உலக மக்களின் நன்மைக்காகவும், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தோய்கள், தீவினைகள் அணுகாது இருக்கவும், சகல சவுபாக்கியங்கள் கிடைக்கவும் இந்த பச்சைப்பட்டினி விரதம் இருப்பதாக ஐதீகம். இந்த விரதம் மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை துவங்கும். இந்த பச்சை பட்டினி விரதமானது பங்குனி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெறும். சமயபுரத்தில் வழக்கமாக அம்பாளுக்கு தினம் தோறும் 6 கால பூஜையில், 6 தளிகை நைவைத்தியமாக படைக்கப்படும். சமைத்த உணவுப் பொருட்களைதான் தளிகை என்று சொல்லுவார்கள். ஆனால் 2025 வருடம், மார்ச் 9ஆம் தேதி முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை இந்த 28 நாட்களும் அம்பாள் எதுவும் சாப்பிடாமல் பட்டினியாக, உலக மக்கள் நன்மைக்காக விரதம் இருக்கிறார். மேலும் மகிஷாசுரனை வதம் செய்த பாவம் தீரவும், தன் கோபம் அடங்கவும் தவம் செய்து, பச்சைப் பட்டினி விரதம் இருந்து சாந்த சொரூபியாக மாறிய மாரியம்மனுக்கான திருவிழாதான் இது.
இந்த 28 நாளும் அம்பாளுக்கு வெறும் இளநீர், பானகம், உப்பில்லாத நீர் மோர், துள்ளுமாவு, கரும்பு, பழ வகைகளைதான் நைவைத்தியமாக படைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 28 நாளில் வரக்கூடிய 5 ஞாயிற்றுக்கிழமை பூச்சொரிதல் திருவிழா வெகு விமர்சையாக நடக்கும். இந்த பூச்சொரிதல் விழாவில் மக்கள் விதவிதமான பூக்களை கூடை கூடையாக அந்தக் கண்ணபுரத்தாளுக்கு செலுத்தி அழகு பார்ப்பார்கள். அப்படி சூட்டும் போது, நல்லது நடக்கும் என்பது மக்களின் நீண்ட கால நம்பிக்கை. பட்டினி விரதம் இருக்கும் அந்த மகாளிபுரத்தில் அரசாட்சி செய்யும் அரசியை குளிர்விக்கும் வகையில் அனைத்து வண்ண மலர்களும் வாசனை மலர்களும் அபிஷேகம் செய்யப்படுகின்றன. மார்ச் மாதம் 9, 16, 23, 30, ஏப்ரல் 6, இந்த 5 தேதிகளில் வரும் எல்லா ஞாயிற்றுக்கிழமையிலும் பூச்சொரிதல் விழா நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விடயம்.
30-03-2025 ஞாயிற்றுக்கிழமை நான்காவது வார பூச்சொரிதல்.
சங்க கால குறிஞ்சிப்பாட்டில் அரும்பு, அதிரல், அவரை, அனிச்சம், ஆத்தி, ஆம்பல் என தொடங்கி வெட்சி, வேங்கை, வேரல், வேரி மலர் என 99 மலர் வகைகள் குறிப்பிடப்பட்டுள்ளது இதயத்தில் மணம் வீச -
சிலப்பதிகாரம் மணிமேகலை உள்ளிட்ட காப்பியங்களில் மலர்ந்துள்ள பூக்களில் வண்ணங்கள் கண்களை நிறைக்க -
விதவிதமான மலர் அலங்காரங்களுடன் என் தாய் சமயபுரத்தாளின் பூச்சொரிதல் விழா.
பாதையெல்லாம் ஆரோகணித்து வெவ்வேறு அலங்காரத்தில் பல்வேறு பரிமாணங்களில் அருள்பாலித்து வருவார் கண்ணபுரத்தாள். தெருவெங்கும் ஆதி இசையாம் பறையிசை உள்ளிட்ட பல்வேறு இசைக்கருவிகளின் ஒலி பாதைகளெல்லாம் அதிர்விக்க ஆடாத கால்களும் ஆட, எங்கிருந்தோ குருதி முழுதும் ஒரு உற்சாகம் தொற்றிக் கொள்ள, மகிழ்ச்சி கடலாய் பக்தி பெருக்காய் அந்த சாலைகளின் ஒவ்வொரு புழுதி மண்ணும் அன்னையின் ஆட்சிக்குள் மூழ்கும் ஆச்சரியத்தை நாம் அனைவரும் வாழ்வில் ஒரு முறையேனும் நேரில் பார்த்து விட வேண்டும்.
அக்னி சட்டி, பால்குடம், முளைப்பாரி ஏந்தியவர்களும் - இளம் தலைமுறையின் தனை மறந்த ஆட்டமும் - சாலை முழுவதும் ஒலி ஒளி வெள்ளமும் - கூடை கூடையாய் மலர்க் குவியலும் - அதிரும் ஆதி இசைச் சத்தமும் - குழந்தையும் குட்டிகளும் சூழ குடும்பங்களும் - விரதமிருந்து காப்பு கட்டிய பக்தர்களும் - தனியாய், குழுவாய், குடும்பமாய் என எத்துணை வகை மனிதர்கள் அவளின் கட்டுக்குள்…
ஒன்றே யென்னின் ஒன்றேயாம், பலவென்
றுரைக்கின்பலவேயாம்
அன்றே யென்னின்அன்றேயாம்,ஆமே
யென்னின் ஆமேயாம்,
(கம்பராமாயணம்)
அன்று
எனச் சொல்வோரையும் ஒன்றாய் பலவாய் திகழ்ந்து 'ஆம்' என உணர்த்தும் என் தாய் கண்ணனூர் தேவி தக்க சமயத்தில் உதவும் சமயபுரத்தாள்!