பச்சைப் பட்டினி விரதம் இருப்பவள் யார்? எங்கே? ஏன்?

சமயபுரம் மாரியம்மன்
சமயபுரம் மாரியம்மன்
Published on

மிழ்நாட்டின் சக்தி திருத்தலங்களில் மிகவும் முக்கியமான தலங்களில் ஒன்று, சமயபுரம். தமிழ்நாட்டில் திருச்சி அருகே அமைந்துள்ளது. அங்கு வீற்றிருக்கும் மகா மாரியம்மன் சர்வ சக்தி பொருந்தியவளாக வீற்றிருந்து பக்தர்களுக்கு நல்லருள் பாலித்துக் கொண்டிருக்கிறாள். மிக மிக அதிக அளவிலான  பெண்கள் கூடும் சக்தி திருத்தலங்களில் ஒன்று சமயபுரம். “ஆதி கண்ணபுரம் சாதித்தாள் சமயபுரம்” என்கிற ஆதிச்சொல் வழக்கும் உண்டு. அது என்ன ஆதி கண்ணபுரம்?

பரமசிவன் தாட்சாயினியைத் தூக்கிச் சுற்றியபடி அதி ருத்ர தாண்டவம் ஆடுகிறார். அப்போது அவளது கண்கள் கழன்று விழுந்த மண் தான், ஆதி கண்ணபுரம். அந்த மண்ணிலே ஆதி சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்காக இன்னமும் தொடர்ந்து சாதித்து வருபவள் தான் சமயபுரம் மாரியம்மன். விக்கிர சிம்மாசனம் இட்டு தங்கத் திருமுடி சூட்டி ஆயிரம் கோடி சூரிய பிரகாசத்துடன் குங்குமச் செந்நிறத் திருமேனி கொண்டு, கனிவு நிறைந்தவளாகக் காட்சியருளிக் கொண்டு இருக்கிறாள் இந்தக் கண்ணபுரத்தாள்.

ஆண்டுதோறும் சமயபுரம் மாரியம்மனுக்கு மாசி மாதம் கடைசி ஞாயிறு தொடங்கி, பங்குனி மாதம் கடைசி ஞாயிறு வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை தோறும் பூச்சொரிதல் விழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு முதல் பூச்சொரிதல் 10.03.2024 ஞாயிறு அன்று தொடங்கியது. 17.03.2024 ஞாயிறு இரண்டாவது பூச்சொரிதல், 24.03.2024 ஞாயிறு  மூன்றாவது பூச்சொரிதல், 31.03.2024  ஞாயிறு நான்காவது பூச்சொரிதல், 07.04.2024 ஞாயிறு (பங்குனி மாதம் 25) அன்று கடைசி பூச்சொரிதல் என அருள் அள்ளி அள்ளித் தருகின்ற சமயபுரம் மாரியம்மனுக்குப் பூச்சொரிதல் விழா நடைபெறும்.

பூச்சொரிதல் விழா
பூச்சொரிதல் விழா

ஆயிரம் ஆயிரம் கிலோ வண்ண வண்ணப் பூக்களின் குளிர்ச்சியினால், கோடை வெப்பம் தணிந்து மாரியம்மன் குளிர்ந்ததொரு அம்மனாக மாறிப் போயிருப்பாள். அது சரி. இதற்கெல்லாம் கைம்மாறாக இந்த பக்தர்களுக்கு அம்மனும் ஏதாவது செய்தாக வேண்டுமே? செய்யாமல் இருப்பாளா இந்த சமயபுரத்தாள்?

சுவாமிக்கும் அம்பாளுக்கும் வேண்டிக் கொண்டு பக்தர்களும் பக்தைகளும் விரதம் இருந்து வழிபடுவார்கள். இது வழக்கம். இங்கே சமயபுரம் மாரியம்மனோ அந்த பக்தர்களுக்காகவும் பக்தைகளுக்காகவும், தானே விரதம் மேற்கொள்கிறாள். தனது பக்தர்களுக்கு நோய் நொடி மற்றும் தீவினைகள் அண்டாதிருக்க வேண்டி, அம்மனே விரும்பி வேண்டி விரதம் மேற்கொள்கிறாள். அதுவும் ஒரு நாள், இரண்டு நாள் மட்டும் என்றல்ல. தொடர்ந்து இருபத்தியெட்டு நாட்கள் விரதமாக மேற்கொள்கிறாள் சமயபுரத்தாள். பச்சைப் பட்டினி விரதமாக கடும் விரதம் பூணுகிறாள்.

மாசி மாதம் கடைசி ஞாயிறு (10.03.2024)  தொடங்கி, பங்குனி மாதம் கடைசி ஞாயிறு (07.04.2024)  வரைக்குமாகத் தொடர்ந்து இருபத்தியெட்டு நாட்கள் தனது பக்தர்களின் நலன் காத்திட வேண்டி பச்சைப் பட்டினி விரதம் கடைபிடிக்கிறாள் இந்தக் கண்ணபுரத்தாள்.

பூச்சொரிதல் விழா
பூச்சொரிதல் விழா

அது என்ன பச்சைப் பட்டினி விரதம்? அந்த இருபத்தியெட்டு நாட்களிலும் சமயபுரம் மாரியம்மனுக்கு அமுது படையல் படைப்பதில்லை. அந்த இருபத்தியெட்டு நாட்களுக்கும் அம்மனுக்கு நீர்மோர், பானகம், இளநீர், கரும்புச்சாறு போன்ற திரவ வடிவிலானவைகள் தான் அருந்திட சமர்ப்பிக்கப்படும்.

இதையும் படியுங்கள்:
கடினமான மனிதர்களையும் நேசிப்பது எப்படி?
சமயபுரம் மாரியம்மன்

பச்சைப்பட்டினி விரதம் நிறைவு பெரும் நாளில், சித்திரைப் பெருந்தேர் திருவிழாவுக்காகக் கொடியேற்றம் நிகழும். சித்திரை மாதம் பிறந்து வருகின்ற முதல் செவ்வாய்க்கிழமை (16.04.2024  சித்திரை 3) அன்றைக்கு சமயபுரம் மாரியம்மனுக்கு திருத்தேர் நடைபெற உள்ளது.

பக்தர்களுக்காகவே பச்சைப்பட்டினி விரதம் பூண்டிருக்கும் சமயபுரம் மாரியம்மனை, பக்தர்கள் தரிசிக்க வருவது மிகவும் உகந்தது. அம்மனும் திருவுள்ளம் பூரித்து பக்தர்களுக்குத் திருவருளை வாரி வாரி வழங்கிடக் காத்திருக்கிறாள். சமயபுரத்தாளை தரிசிக்க வாருங்கள்; ஆத்தாளின் அருள் பெருங்கள்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com