சகல நலம் தரும் சங்காபிஷேகம்!

வழிபாடு
சங்காபிஷேகம்...
சங்காபிஷேகம்...

-மீ. சீனிவாசன்

திருக்கோயில்களில் நடைபெறும் விழாக்கள் பலவற்றுள் சங்காபிஷேக விழாவும் ஒன்று! 108 அல்லது 1008 சங்குகளில், புனித தீர்த்தத்தால் இறைவனுக்கும் செய்யும் அபிஷேகமே சங்காபிஷேகம்!

இந்து சமயம் சங்கினை மிகப் புனிதமாகப் போற்றுகிறது! காற்றினால் இசைக்கப்பெறும் துளைக் கருவிகளில் சங்கு, முதன்மையும் தொன்மையும் வாய்ந்தது. எனவே, கோயில் திருவிழாக்களிலும், திருமண நிகழ்ச்சிகளிலும் சங்குகள் முழங்குவதைக் கேட்கலாம்.

'செங்கல் பொடிக் கூறை வெண்பல் தவத்தவர்

தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்!"

என்பது திருப்பாவை. மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரையில் பல வகைகளில் தொடர்புடையது சங்கு. சங்குகளை வளையலாகவும், மோதிரமாகவும் செய்து பெண்கள் தம் கைகளிலும், விரல்களிலும் அணிந்து கொண்டமையை அகநானூறு விவரிக்கிறது.

உடலில் ஏற்படும் கட்டி மற்றும் அழற்சி நோய்களுக்கு மருந்தாகவும், குழந்தைகளுக்குப் பாலூட்டவும் சங்குகள் பயன்படுகின்றன! வாழ்க்கைச் சடங்குகள் பலவற்றிலும் சங்கு சிறப்பிடம் பெறுகிறது.

நற்குடிப் பிறப்புக்கு கவிஞர்கள் சங்கினையே உவமையாகக் குறிப்பிடுவர். 'சங்குடைந் தனைய வெண்தாமரைமலர் தடங்கள் போலும் நம்குடி!! என்பது, சீவக சிந்தாமணி' வரிகள்! ஆண்களின் கையில் சங்கு ரேகை இருப்பது சிறப்புடையது என்பதை, 'வலம்புரி பொறித்த வண்கை மாவலி" எனவும் சிந்தாமணி கூறுகிறது.

சங்குகள் முறையே இடம்புரி, வலம்புரி, சலஞ்சலம், பாஞ்சஜன்யம் என நான்கு வகைப்படும். இப்பி (Oyester shell fish) ஆயிரம் சூழ்ந்தது இடம்புரி; இடம்புரி ஆயிரம் சூழ்ந்தது வலம்புரி; வலம்புரி ஆயிரம் சூழ்ந்தது சலஞ்சலம், ஆயிரம் சலஞ்சலம் சூழ்ந்தது பாஞ்சஜன்யம்.

மகாபாரதத்தில் பாண்டவர்களும், கண்ணபிரானும் தத்தமக்கென ஒரு சங்கு வைத்துக்கொண்டிருந்தனர்! தருமரின் சங்கு அனந்த விஜயம், பீமனின் சங்கு பவுண்டரம், அர்ச்சுனனின் சங்கு தேவதத்தம், நகுலனின் சங்கு சுகோஷம், சகாதேவனின் சங்கு புவ்பகம், கண்ணனின் சங்கு பாஞ்சஜன்யம்!

திருக்குற்றாலத்தில் உள்ள குற்றாலநாதர் கோயிலின் வடிவம் சங்கு போலவும், அதனைச் சுற்றியுள்ள வீதிகள் சங்கின் முறுக்குகள் போலவும் வளைந்து அழகுற விளங்குவதாகத் திருக்குற்றாலத் தலபுராணம் கூறுகிறது.

தொண்டை நாட்டுச் சிவத் தலங்களுள் ஒன்றாகிய திருக்கழுகுன்றத்தில் உள்ள திருக்குளம், 'சங்கு தீர்த்தம்' என அழைக்கப்படுகிறது. இக்குளத்தில் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கு தோன்றுகிறது. இவ்வாறு தோன்றிய சங்குகள் அக் கோயிலில் தொகுத்து வைக்கப்பெற்று சங்காபிஷேகம் நிகழ்த்துப் பெறுகிறது.

சங்கின் அமைப்பு ஓங்கார வடிவமாக உள்ளது. 'ஓம்' எனும் ஒலியே உலகங்களைத் தோற்றுவித்தும், நிலைப்பித்தும், அழித்தும் இயக்கி வருகின்றன. சங்கின் அமைப்புக்கும் நம் உடல் அமைப்புக்கும் ஒரு வேறுபாடு உள்ளது. நம்முடலில் தசை மேலேயும், எலும்பு உள்ளேயும் இருக்கும். சங்கில் எலும்பாகிய ஓடு மேலேயும், உள்ளே தசையும் இருக்கும். உள்ளே உள்ள ஊன் எனும் தசை கழிந்தபிறகே சங்கு தூய்மை உடையதாக மதிக்கப் பெறுகிறது. தசை கழிந்த சங்கு புனிதப் பொருள் ஆவது போல, மல மாசுகள் கழிந்த நமது மனமும் புனிதமடைந்து இறைவன் வாழும் இனிய கோயில் ஆகிறது.

இதையும் படியுங்கள்:
கல்லீரல் பிரச்னைக்கு கைகண்ட நிவாரணம் தரும் சீந்தில்!
சங்காபிஷேகம்...

சங்காபிஷேகம் பற்றிய ஒரு வரலாறு திருக்கடவூர் தல புராணத்தில் கூறப்படுகிறது. முசுகுந்த சோழன் ஒரு சமயம் திருக்கடவூருக்கு வருகை தந்தான். அப்போது, இத்தலத்துக்கு அருகில் உள்ள திருமெய்ஞ்ஞானம் (திருக்கடவூர் மயானம்) என்னும் தலத்தில் உள்ள தீர்த்தம் இறைவனுக்கு மட்டுமே உரியது என்பதை அறியாது, அதில் நீராடினான்!

அதனால், அவனைக் கொடிய தோல் நோய் பற்றியது. அதற்குப் பிராயச்சித்தமாக, 1008 சங்குகள் கொண்டு, எண் வகை மலர்கள் மற்றும் பச்சிலைகள்,
ஏழுவகை மருந்துப் பொருள்கள், ஐந்து வகை உலோகங்கள், நவமணிகள், பத்துக் காய் மற்றும் கனிகள், எழுவகை நறுமணப் பொருள்கள், ஒன்பது வகை பாஷாணங்கள், ஏழு நதித் தீர்த்தங்கள் ஆகியவற்றை ஆகம முறைப்படி சேர்த்துக் கலக்கப் பெற்ற புனித நீரால் கார்த்திகை மாதம் சோம வாரத்தில் இறைவனுக்கு அபிஷேகம் செய்து பிணி நீங்கப் பெற்றான். எனவே, சகல பிணிகள் போக்கவல்லதும், செல்வப் பேற்றை அளிக்க வல்லதுமாகிய சங்காபிஷேகத்தைத் தரிசித்து நல்லருள் பெறுவோம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com