மயிலையே கயிலை கையிலையே மயிலை! மயிலாப்பூரில் அமைந்துள்ள சப்த சிவ ஸ்தலங்கள்... தரிசிப்போமா?

Saptha Shiva Sthalam
சப்த சிவ ஸ்தலங்கள்

காரணீஸ்வரர், தீர்த்தபாலீஸ்வரர், வெள்ளீஸ்வரர், விருபாக்ஷீசீஸ்வரர், வாலீஸ்வரர், மல்லீஸ்வரர், கபாலீஸ்வரர் - இவையே மயிலாப்பூரில் அமைந்துள்ள சப்த சிவ ஸ்தலங்களாகும். இவை ஒன்றுக்கொன்று அருகருகில் அமைந்துள்ளதால் ஒரே நாளில் 3 மணி நேரத்திற்குள் இந்த ஏழு கோவில்களையும் நம்மால் தரிசிக்க முடியும். இந்த ஏழு கோவில்களுமே கி.பி. 12ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை என்று வரலாறு கூறுகிறது.

மயிலையே கயிலை கையிலையே மயிலை எனப் போற்றப்படும் மயிலாப்பூரில் கபாலீஸ்வரர் கோவிலைச் சுற்றி மேலும் 6 கோவில்கள் அமைந்துள்ளன. இவற்றை சப்த சிவ ஸ்தலங்கள் என்று போற்றுவர். சப்த ரிஷிகளான அத்ரி, பிருகு, குத்சர், வசிஷ்டர், கௌதமர், காசியபர் மற்றும் அங்கிராசர் ஆகியோரால் வழிபடப்பட்ட சிவபெருமானுக்குரிய சப்தஸ்தான கோயில்கள் இங்கு அமைந்துள்ளன.

1. காரணீஸ்வரர்:

காரணீஸ்வரர்
காரணீஸ்வரர்Img Credit: Interesting places

வசிஷ்ட முனிவரால் வழிபடப்பட்ட ஆலயம் இது. பஜார் தெருவில் அமைந்துள்ள மிகவும் பழமையான 12ஆம் நூற்றாண்டு கோவில் இது. இங்குள்ள ஈசன் சதுர வடிவத்தில் காட்சி தருகிறார். இம்மாதிரி திருக்கடையூர் மற்றும் காளஹஸ்தியில் மட்டுமே காணப்படும். இவர் உலகில் உள்ள அனைத்திற்கும் காரணமானவர் என்பதால் காரணீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். சப்த சிவாலயங்களில் முதலாவதாக வழிபட வேண்டிய தலம் இது. சொர்ணாம்பிகை சமேத காரணீஸ்வரரை தரிசிக்க நோய் நொடிகள் நீங்கி வாழ்வில் வளம் பெறலாம் என்பது நம்பிக்கை.

2. தீர்த்தபாலீஸ்வரர்:

தீர்த்தபாலீஸ்வரர்
தீர்த்தபாலீஸ்வரர்Img Credit: veludharan temple visit

அத்ரி முனிவரால் வழிபடப்பட்ட ஆலயம் இது. சிட்டி சென்டருக்கு அருகில் டாக்டர் நடேசன் தெருவில் அமைந்துள்ளது. மாசி மாதத்தில் இங்கு நடைபெறும் தீர்த்தவாரி திருவிழாவின் பொழுது சப்தஸ்தான ஆலயத்தின் 7 உற்சவர்களும் கடலில் நீராடுவதற்கு முன்பு இந்தக் கோவிலில் உள்ள தீர்த்த குளங்களில் தான் தீர்த்தவாரி நடைபெறுவதும் சிறப்பு. அகஸ்தியர் வழிபட்ட தலம் இது. சப்த சிவாலயங்களில் இரண்டாவதாக வழிபட வேண்டிய தலம் இது. ஈசன் சற்று இடப்புறம் சாய்ந்தபடி, தோற்றத்தில் ஒரு வெள்ளரிப்பழம் போல காட்சி தருகிறார். ஸ்ரீதிரிபுரசுந்தரி சமேத ஸ்ரீதீர்த்தபாலீஸ்வரரை அகஸ்தியர் தனக்கு ஏற்பட்ட நோய் நீங்குவதற்காக வணங்கி அருள் பெற்ற தலம் இது.

3. வெள்ளீஸ்வரர்:

வெள்ளீஸ்வரர்
வெள்ளீஸ்வரர்Img Credit: exploring my life

அங்கீரச முனிவரால் வழிபடப்பட்ட கோவில் இது. கபாலீஸ்வரர் கோயிலுக்கு அருகில் தெற்கு மாட வீதியில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோவில் சப்த ஸ்தான சிவாலயங்களில் மூன்றாவதாக கருதப்படுகிறது. அசுர குரு சுக்ராச்சாரியார் வாமனரின் கைகளால் இழந்த பார்வையை மீண்டும் பெறுவதற்காக இங்கு ஈசனை தவம் செய்து வழிபட்டார். அவரது தவத்தைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான் சுக்ராச்சாரியாருக்கு கண் பார்வையை மீண்டும் வழங்கி அருள் புரிந்தார். இங்குள்ள ஏகபாத திருமூர்த்திக்கு ஒரு கால், ஓருடல் மற்றும் மூன்று தலைகளும் உள்ளன. பிரம்மா, விஷ்ணுவிற்கு இடையில் சிவனின் சிரசு காணப்படுகிறது. இங்குள்ள ஈசன் கண் தொடர்பான நோய்களை தீர்க்க வல்லவர் என்று நம்பப்படுகிறது. ஈசனின் சன்னதிக்கு வலப்புறத்தில் தெற்கு நோக்கி தனி சன்னதியில் காமாட்சி அம்மனும் எழுந்தருளியுள்ளார்.

4. விருபாக்ஷீஸ்வரர் கோவில்:

விருபாக்ஷீஸ்வரர் கோவில்
விருபாக்ஷீஸ்வரர் கோவில்Img Credit: Flickr

குட்ச முனிவரால் வழிபடப்பட்ட மிகவும் பழமையான கோவில் இது. காரணீஸ்வரர் கோவிலுக்கு மிக அருகில் அமைந்துள்ளது. விருபா என்றால் விசித்திரமான, இயற்கைக்கு முரணான என்று பொருள். அக்ஷம் என்றால் கண். அதாவது மூன்று கண்கள் கொண்ட சிவன். இயற்கைக்கு முரணாக மூன்று கண்களை கொண்டிருப்பதால் விருபாக்ஷீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். இங்குள்ள சப்த ஸ்தலங்களில் இந்த ஆலயத்தில் தான் சிவலிங்கம் மிகப்பெரியதாக காணப்படுகிறது. இங்குள்ள விசாலாட்சி அம்பாள் சன்னதிக்கு முன்பு உள்ள பலிபீடம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக போற்றப்படுகிறது. சப்த தலங்களில் நான்காவது ஆக வழிபட வேண்டிய ஆலயம் இது. இக்கோவிலை கட்டியவர் சிவனேசன் செட்டியார். இவருடைய சிற்பமும் இங்குள்ளது. செல்வந்த வணிகரான இந்த செட்டியாருக்கு பூம்பாவை என்ற மகள் இருந்தாள். அவள் இறந்த பொழுது திருஞானசம்பந்தர் தான் அவளை எரித்த சாம்பல் மற்றும் எலும்பிலிருந்து உயிர்ப்பித்தார் என்று கூறப்படுகிறது.

5. வாலீஸ்வரர்:

வாலீஸ்வரர்
வாலீஸ்வரர்

கௌதம முனிவரால் வழிபடப்பட்ட 2000 ஆண்டுகள் பழமையான கோவில் இது. கோலவிழி அம்மன் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ளது. சப்த தலங்களில் ஐந்தாவது வழிபட வேண்டிய தலம் இது. ஸ்ரீபெரியநாயகி அம்பாள் சமேத வாலீஸ்வரரை ராமாயண காலத்தில் வானவர்களின் அரசனான வாலி இத்தலத்தில் வந்து இறைவனை வழிபட்டு பல வரங்களை பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. இங்குள்ள பஞ்சலிங்க சன்னிதி மிகவும் சக்தி வாய்ந்ததாக கூறப்படுகிறது. காசிக்கு இணையாக இந்த பஞ்சலிங்கத்தை போற்றி புகழ்கின்றனர். ஸ்ரீ ராமரும் இங்கு வந்து வழிபட்டுச் சென்றதாக புராணங்கள் கூறுகின்றன. ஈசனை நோக்கி தவம் செய்த வாலி அனைத்து சக்திகளையும் பெற்றதாக கூறப்படுகிறது. வாலியின் சிலை இக்கோவிலில் அமைந்துள்ளது. பூமியிலிருந்து வெளிவந்த பஞ்சலிங்கங்கள் இங்கு தனி சன்னதியில் உள்ளது. இது ஒரு சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்குகிறது.

இதையும் படியுங்கள்:
வைடூரியத்தின் அற்புத சக்திகள்!
Saptha Shiva Sthalam

6. மல்லீஸ்வரர்:

மல்லீஸ்வரர்
மல்லீஸ்வரர்Img Credit: Justdial

பிருகு முனிவரால் வழிபடப்பட்ட கோவில் இது. பஜார் சாலையில் காரணீஸ்வரர் கோவிலுக்கு பின்புறத்தில் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் மல்லிகைக் காடாக இருந்ததால் ஈசனுக்கு மல்லீஸ்வரர் என பெயர் வழங்கப்படுகிறது. அம்பாள் மரகதவல்லி. ஈசனின் பெயர் மல்லீஸ்வரர். இவரை வழிபட குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. சப்த தலங்களில் ஆறாவதாக வழிபட வேண்டிய கோவில் இது. மாசி மாத வளர்பிறை நாளில் சூரியனுடைய கதிர்கள் சிவலிங்கத்தின் மேல் விழுவது சூரியன் ஈசனை வணங்குவதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
பிறந்தேன் வரதராஜபெருமாள் அருளில்!
Saptha Shiva Sthalam

7. கபாலீஸ்வரர்:

கபாலீஸ்வரர்
கபாலீஸ்வரர்Img Credit: Mr. Pilot

காஸ்யப முனிவரால் வழிபடப்பட்ட ஈசன் இவர். சப்தஸ்தான ஸ்தலங்களில் மிகவும் பிரபலமான கோவில் இது. ஈசன் மேற்கு நோக்கி அமர்ந்து காணப்படுகிறார். புன்னை மரத்தின் அடியில் எழுந்தருளி இருக்கும் இறைவனை அம்பிகை மயில் வடிவத்தில் பூஜித்த காரணத்தால் இந்த தலத்திற்கு மயிலாப்பூர் என பெயர் ஏற்பட்டது. பார்வதி தேவி ஈசனை மயில் வடிவில் வழிபடும் சன்னதியும் இக்கோவிலில் உள்ளது. திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல் பெற்ற தலம் இது.

இப்படி மயிலைப் பகுதியே சிவமயமாக திகழ்வதால் தான் மயிலையே கையிலை; கயிலையே மயிலை என்ற சிறப்பு பெற்று விளங்குகிறது.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: கடவுளே நீ இருக்கியா?
Saptha Shiva Sthalam

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com