
கோவில் அர்ச்சகர் அர்ச்சனைத் தட்டிலிருந்து துளஸியை எடுத்து வெங்கடேசன் கையில் கொடுத்தார்.
கோபத்துடன் அதை வாங்கிக் கொண்ட வெங்கடேசன், “கடவுளே நீ இருக்கியான்னு கேட்கத்தான் வந்திருக்கேன்,” என்றான்.
அர்ச்சகருக்குத் தூக்கி வாரிப் போட்டது.
“என்ன இது இப்படிச் சொல்லலாமா? சூரியன் தவறினாலும் நீங்க தவற மாட்டேள். கரெக்டா வந்து ஸ்வாமி தரிசனம் செய்யாம இருந்த நாள் உண்டா? ஏன் லேட்டுன்னு கேட்க வந்தேன்... கடவுளே நீ இருக்கியான்னு கேக்கலாமா?”
“ஸ்வாமி இத்தனை நேரம் ரொம்ப தூரம் போயிருப்பேன். ஹைதராபாத்திலே நாளைக்கு இண்டர்வியூ. நல்ல வேலை. இரட்டிப்பு சம்பளம். பெர்க்ஸ் நிறைய - காரு, வீடுன்னு.. டிராபிக் ஜாம்லே மாட்டிகிட்டதனாலே ரயில் கிளம்பிடுச்சு. ‘ஈசன் வானவர்க்கு என்பன் ஆகில் தேசம் உண்டாமோ திருவேங்கடத்தானே’ என்று சரியாத் தான் ஆழ்வாரே கேட்டிருக்கார். நீ தேவர்களுக்கு மட்டும் தான் தெய்வமா? மனிசனுக்கு நீ தெய்வம் இல்லையான்னு கேட்டுட்டுப் போக வந்தேன்.”
“ஒண்ணும் கவலைப்பட வேண்டாம். இதுல ஏதோ சூட்சுமம் இருக்கு. இதை விட நல்ல வேலையா அமையுமோ என்னவோ”
“ஹூம்” என்று உறுமிவிட்டு வெங்கடேசன் கிளம்பினான் சந்நிதியை விட்டு.
அடுத்த நாள். தலையை குனிந்து கொண்டு வந்த வெங்கடேசனைக் அர்ச்சகர் பிரமிப்புடன் பார்த்தார்.
“என்ன நடந்திருக்குன்னு பேப்பர்ல பார்த்தேன்.”
குரல் தழுதழுக்க வெங்கடேசன் சொல்ல ஆரம்பித்தான்: “ஆமாம், ஸ்வாமி ட்ரெயின் டீ ரெயில் ஆகி ஒரு கம்பார்ட்மெண்ட் கவிழ்ந்து மூன்று பேர் பலி. ஒண்ணு தெரியுமா? அது நான் போக வேண்டிய அதே ஏ கம்பார்ட்மெண்ட் தான்!”
அர்ச்சகர் பெருமாளைப் பார்த்துக் கும்பிட்டார்.
“இன்னும் ஒண்ணு உங்ககிட்ட சொல்லணும். கம்பெனிலேர்ந்து போன் வந்தது. அந்த இண்டர்வியூ நடக்கவே இல்லையாம். அதை நடத்தறவரும் அந்த ரயில்லே தான் வந்தாராம். நல்ல வேளை அவர் தப்பிச்சார். வெளியூர்லேர்ந்து வர எல்லோருக்கும் கம்பெனியே ஃப்ளைட் டிக்கட் அனுப்பி இருக்கு. நாளைக்குத் தான் இண்டர்வியூ.”
“ஆஹா!” என்ற அர்ச்சகர் துளஸியைக் கொடுக்க தட்டில் நூறு ரூபாய் நோட்டைப் போட்டு விட்டுக் கிளம்பினான் வெங்கடேசன்.
அடுத்த நாளுக்கு அடுத்த நாள். வழக்கமான நேரம்.
மலர்ச்சியுடன் வந்த வெங்கடேசனை புன்னைகையுடன் வரவேற்றார் அர்ச்சகர்.
“என்ன ஜயமா?” என்ற கேள்விக்கு பதிலாக ‘வெற்றியோ வெற்றி’ என்ற வெங்கடேசன் “வேலை கிடைச்சதுமட்டுமில்ல, அதில ஒரு அதிசயம் வேற இருக்கு.” என்றான்.
“என்ன?” என்ற பாணியில் வியப்புடன் அவனை நோக்கினார் அர்ச்சகர்.
“இங்கே சென்னைலே ஆள் இல்லையாம். அதனாலே எனக்கு போஸ்டிங் இங்க தான்!”
“அட, பெருமாள் விட மாட்டேங்கறாரோ!” என்றார் அர்ச்சகர்.
“நீங்க சூட்சுமம் இருக்குன்னு சொன்னதிலே ஒரு சூட்சுமம் இருக்கு. பெருமாள் தேவர்களுக்கு மட்டும் தானா என்று நம்மாழ்வார் பாடியதைச் சொன்னேன். அவரே ‘பல பல மாய மயக்குகளால் இன்புறும் இவ்விளையாட்டுடையானைப் பெற்று ஏதும் அல்லல் இலனே” என்று பாடி இருக்காரே! இனி எனக்கு என்ன ப்ராப்ளம்” என்று சொன்ன வெங்கடேசன் தட்டில் ஒரு ஐநூறு ரூபாய் நோட்டை வைத்தான்.
“என்ன உண்டியல்ல போடணுமா?’ என்ற அர்ச்சரகரை வேகவேகமாக மறுத்த வெங்கடேசன், ‘இது உங்களுக்கு! இதோ இது தான் உண்டியலுக்கு’ என்று இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுகளை அவர் கையில் தந்தான்.
பெருமாளைக் கும்பிட்டுத் திரும்பப் போன அவனை அழைத்த அர்ச்சகர், 'ஒரு விஷயம் எனக்குத் தெரியவந்தது. அந்த ஏ கம்பார்ட்மெண்ட்ல மூணு பேர் பலி என்று அன்னிக்கி சொன்னது ஞாபகம் இருக்கா? அதுலே ஒருத்தன் பக்கா கொலைகாரனாம். அவன் ஜெயில்லேர்ந்து தப்பிச்சு இரண்டு மாசம் ஆயிருக்கு. அவனைத் தேடிண்டு இருந்த போலீஸ் அவனையும் அவன் ரெண்டு கூட்டாளிகளையும் ஐடென்டிஃபை பண்ணி இருக்கு..” என்றவர் மேலும் தொடர்ந்தார்.
“இது எப்படி எனக்குத் தெரியும்னு கேட்க வேணாம். நம்ப பெருமாள் பக்தர், தினமும் வருவாரே போலீஸ் இன்ஸ்பெக்டர் அவர் தான் சொன்னார்.” என்று முடித்தார்.
“ஆஹா! 'அடியார் தமக்கு அல்லல் நில்லாவே'” என்று பரவசமாகச் சொல்லிவிட்டுக் கிளம்பினான் வெங்கடேசன்.