திருக்குடந்தை என்ற கும்பகோணம் திருத்தலத்தில் வில்லேந்திய கோலத்தில் உற்சவர் பெருமாள் திகழ்கிறார். அதனாலேயே இவர் சார்ங்கபாணி எனப்படுகிறார். சிலர் இவரை வாய்க்கு சுலபமாக 'சாரங்கபாணி' என்று அழைக்கிறார்கள். ஆனால், சாரங்கம் என்றால் மான் என்று பொருள். சாரங்கத்தைக் கையிலேந்தியவர் சிவபெருமான். அதனால் அவர்தான் சாரங்கபாணி. ஆகவே சார்ங்கம் என்ற வில்லேந்திய பெருமாள் சார்ங்கபாணிதான். கோயில் முகப்பில் 'சார்ங்கபாணிப் பெருமாள் கோயில்' என்றே பலகையில் எழுதி வைத்திருக்கிறார்கள்.
இந்த சார்ங்கபாணிப் பெருமாளிடம் ஆழ்ந்த பக்தி கொண்ட பக்தன், லட்சுமி நாராயணன். அர்ச்சாவதாரமாக, அழகுமிகுத்து சயனித்திருக்கும் இந்தப் பெருமாள் கோயிலுக்கு ஒரு ராஜகோபுரம் இல்லையே என்ற ஏக்கம் அவனைப் பெரிதும் வாட்டியது. தானே தனியனாக அந்த முயற்சியை மேற்கொண்டான். பிரம்மச்சாரியான அவன், தன் வாழ்நாள் முழுவதும் இந்தப் பணிக்காகவே அர்ப்பணித்துக் கொண்டான். குடும்ப வாழ்க்கையைப் பற்றி அவன் சிந்திக்கவேயில்லை. அவனுடைய நண்பர்களும் உறவினர்களும் "இப்படி கல்யாண சிந்தனையின்றி காலம் பூராவும் இந்த கருட வாகனனுக்காக செலவிடுகிறாயே! உன் இறப்புக்குப் பிறகு உனக்கு ஈமக்கடன் செய்ய உனக்கு ஒரு வாரிசு வேண்டாமா? அதற்காகவாவது திருமணம் செய்துகொள்" என்று அவனை வற்புறுத்தினார்கள்.
அவனோ, "எல்லாம் பெருமாள் பார்த்துக் கொள்வார், எனக்கென்ன கவலை?" என்று அவர்களிடம் அலட்சியமாகவும் ஆழ்மனதில் பெருமாள் பக்தியுடனும் உறுதியாகச் சொன்னான். அது மட்டுமல்லாமல், தன் காலத்திலேயே மிகுந்த சிரமத்துடன், சிறிது சிறிதாகப் பொருள் ஈட்டி, பலரிடம் யாசகமும் பெற்று அந்த ராஜகோபுரத்தை முழுமையாகக் கட்டி முடித்து அந்த நிறைவிலேயே மோட்சமும் அடைந்தான்.
இப்போது ஊரார் கையைப் பிசைந்து கொண்டு நின்றார்கள். 'இவனுக்கு இறுதிச் சடங்குகளை யார் செய்வது? ஒரே வீம்பாக திருமணமே செய்து கொள்ளாதிருந்து விட்டானே! வாரிசு இல்லாதவனாகி விட்டானே!' என்றெல்லாம் யோசித்து மறுகினார்கள்.
அன்றிரவு ஆலய அர்ச்சகரின் கனவில் சார்ங்கபாணிப் பெருமாள் தோன்றினார். "என் கையில் தர்ப்பையை வைத்து, பிறகு அதை எடுத்துச் சென்று என் பக்தனான லட்சுமி நாராயணனுக்கு ஈமக்கடன் செய்யுங்கள்" என்றார்.
பெரிதும் அதிசயித்தபடி ஊராரிடம் தன் கனவைச் சொன்னார் அர்ச்சகர். யாராலும் நம்பவே முடியவில்லை. அதெப்படி பெருமாள் இப்படி ஒரு 'காரியம்' செய்வார் என்று அதிசயித்தார்கள். மறுநாள் அர்ச்சகர் தர்ப்பைப் புல்லை எடுத்துக் கொண்டு சந்தேக பக்தர்களுடன் பெருமாளின் கருவறைக்குள் போனபோது, அங்கே பெருமாள் ஈர உடையுடன், பூணூலை இடமாக அணிந்து காட்சி கொடுத்ததைப் பார்த்ததும் அனைவருக்கும் வெலவெலத்து விட்டது! என்ன அதிசயம் இது! பெருமாளே காரியம் பண்ண முன்வந்திருக்கிறார் என்றால், லட்சுமி நாராயணன்தான் எத்தனை கொடுத்து வைத்தவன்! அனைவரின் கண்களிலும் நீர் வெள்ளமாகப் பெருகியது. பகவான் சொன்னபடியே அவர் திருக்கரத்தில் தர்ப்பையை வைத்த அர்ச்சகர், பிறகு அதை எடுத்துச் சென்று பெருமாள் சார்பாக லட்சுமி நாராயணனுக்கான இறுதிச் சடங்கை முறைப்படி நிறைவேற்றி வைத்தார்.
இந்த சம்பவம் நிகழ்ந்தது ஒரு தீபாவளி தினத்தன்று. இப்போதும் இந்தத் திருத்தலத்தில் பக்தன் லட்சுமி நாராயணனுக்கு தீபாவளி அமாவாசையன்று சிராத்தத்தை இந்த ஆராவமுதப் பெருமாள் (சார்ங்கபாணி பெருமாள்) நடத்தி வைக்கிறார்.
இதில் நெகிழ்ச்சியான இன்னொரு விஷயம் என்னவென்றால், அன்றைய தினம், பெருமாளுக்கு நிவேதனம் செய்வது அன்றைய சிராத்தத்துக்காகத் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளைத்தான்; வழக்கமான பிரசாதங்களை அல்ல! தன் மீது பக்தி கொண்ட பரம பக்தன் ஒருவனுக்கு பெருமாள் இவ்வளவு கீழிறங்கி வந்து அவன் நற்கதி அடைய, காரியம் செய்துவைக்கிறார் என்றால் இந்தக் கருணையை புகழ வார்த்தைகள்தான் ஏது?