
ஶ்ரீ சத்யசாயி பாபா தனது அருளுரைகளில் அவ்வப்பொழுது குட்டிக் கதைகளைக் கூறி அதன் மூலம் ஒரு உபதேசத்தையும் அருளுவது வழக்கம்.
அவர் கூறிய கதை இது:
மூடருடன் சேராதே!
வேட்டைக்காரன் ஒருவன் ஒரு சமயம் வேட்டையாடும் போது ஒரு குட்டிக் கரடியைப் பிடித்தான். அதைக் கொல்லாமல் மிக்க அன்புடன் அதை அவன் வளர்க்க ஆரம்பித்தான். குட்டிக் கரடியும் அவன் பால் அன்பு செலுத்தியது. நல்ல நண்பனாக அது விளங்கியது. பல வருடங்கள் ஓடின. ஒரு நாள் ஒரு காட்டின் வழியே போய்க் கொண்டிருந்த போது அவன் மிகவும் களைப்புடன் இருந்தான். தூங்க ஆரம்பித்தான். அப்போது அவன் கரடியிடம் தன்னை யாரும் தொந்தரவு செய்யாமால் பார்த்துக் கொள்ளுமாறு கூறினான். இப்போது கரடி மிகப் பெரியதாக காட்டு மிருகமாக வளர்ந்திருந்தது.
அது வேடன் அருகில் இருந்து அவனைக் காக்க ஆரம்பித்தது.
அப்போது ஒரு ஈயானது வேடனின் மூக்கில் வந்து உட்கார்ந்தது. வேடன் சற்று அசைந்தான். இதைப் பார்த்த கரடி அந்த ஈயை விரட்டியது. ஆனால் ஈயோ சுற்றிச் சுற்றி வந்து வேடனின் முக்கில் உட்காரந்தது.
ஈ மிகச் சிறியது; கரடியின் கைகளோ பெரியது. எத்தனை முறை அசைத்தாலும் அதனால் ஈயைப் பிடிக்க முடியவில்லை. கரடிக்கு பொறுமை போனது; கோபம் வந்தது. ஈ அடுத்த முறை வேடனின் மூக்கில் உட்கார்ந்த போது அது தன் கைகளால் வேடனின் மூக்கின் மீது ஓங்கி அடித்தது. அந்த ஒரே அடியில் வேடன் இறந்து போனான்.
இது தான் மூடருடனும் கட்டுப்பாடற்றவர்களுடனும் கொண்ட பழக்கத்தால் ஏற்படும் விளைவாகும். எவ்வளவு அன்பு செலுத்தினாலும் அவர்களது முட்டாள்தனம் உங்களுக்கு ஆபத்தையே விளைவிக்கும்.
ஆகவே மூடருடன் ஒருபோதும் பழகாதீர்கள்.
*********************************************************
பார்ஸி குரு செய்த உபதேசம். பார்ஸிகளிடம் குரு ஒருவர் பற்றிய கதை உண்டு.
ஒரு குருவிடம் சீடன் ஒருவன் தனக்கு ஏதேனுமொரு உபதேசம் செய்யுமாறு வேண்டினான். குரு சற்று நேரம் மௌனமாக இருந்தார். பின்னர் சீடனிடம், “நீ போய் அந்த விளக்கை ஏற்று” என்றார்.
சீடன் எவ்வளவோ முயன்றும் விளக்கை அவனால் ஏற்ற முடியவில்லை.
விளக்கு முழுவதும் நீரால் நிரம்பி இருந்தது.
குரு அவனிடம் நீர் அனைத்தையும் கீழே கொட்டச் சொன்னார். விளக்கை நன்கு துடைக்கச் சொன்னார். அதில் எண்ணெயை ஊற்றச் சொன்னார். திரியை நல்ல சூரிய வெளிச்சத்தில் காய வைக்கச் சொன்னார். பிறகு திரியிட்டு விளக்கை எரிய விடுமாறு சொன்னார்.
சீடனும் அப்படியே செய்தான். இப்போது விளக்கு பிரகாசமாக எரிந்தது.
“நீர் தான் ஆசை. திரியைக் காய வைத்த சூரிய வெளிச்சமே துறவு மனப்பான்மை. விளக்கில் எரியும் சுடரே ஞானம்.
இதோ இந்த உபதேசம் உனக்கு இப்போது போதும். நீ போகலாம். கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும்” என்றார் குரு.
********************************************************
கீதை காட்டும் பாதை!
துக்கம் என்பது சந்தோஷம் தற்காலிகமாக மறைவது தான். சந்தோஷம் என்பது துக்கம் தற்காலிகமாக மறைவது தான். இரண்டுமே எப்போதும் இருப்பதல்ல. எப்போதும் இருக்கும் சந்தோஷமானது ஆன்மீக சாதனைகளால் மட்டுமே அடைய முடியும்.
இதை எப்படி அடைவது? கீதை இதை அடையும் விதத்தைக் கூறுகிறது.
கீதையின் முதல் வார்த்தை ‘தர்ம’ என்பது. கீதையின் கடைசி வார்த்தை ‘மம’ என்பதாகும். இதை இணைத்தால் வருவது : ‘மம தர்ம’ – அதாவது எனது கடமை.
அது என்ன கடமை? அது தான் யோகா. அதை எப்படி அடைவது. இறைவனிடம் சரணாகதி அடைவதன் மூலமாக!
ஒவ்வொரு வார்த்தையையும், எண்ணத்தையும்,செயலையும் இறைவனுக்கு அர்ப்பிப்பதன் மூலமாக அதை அடையலாம். தனது இச்சையை விட்டு விட்டு இறைவனின் இச்சையை ஏற்றுக் கொள்ளல் வேண்டும்.
இதுவே கீதை கூறும் செய்தி.