
1. கைலாஷ் ஆலயம் -எல்லோரா மகாராஷ்டிரா
மகாராஷ்டிராவின் சாம்பாஜி நகர் மாவட்டத்தில் உள்ள எல்லோரா குகையில் உள்ள பாறையில் செதுக்கப்பட்ட இந்து ஆலயமாகும். கைலாச கோவில் 16 குகைகள் கொண்ட எல்லோரா குகைகள் என்றழைக்கப்படுகிறது.
'நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!' என்று போற்றி வணங்கும் சிவபெருமான் சிலையை ஒரு பாறையில் செதுக்கி வைத்துள்ளனர். மிகவும் சக்தி வாய்ந்த ஆலயமாக பக்தர்களால் கருதப்படுகிறது.
2. நடராஜர் ஆலயம் சிதம்பரம்
இந்த ஆலயம் தமிழ்நாட்டில் சிதம்பரத்தில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் நிர்வாகம் தீட்சிதர்களால் நடத்த பெறுகிறது. ஆகாய தத்துவத்தின் அடையாளமாக திகழும் இந்த ஆலயம் ஆடற்கலையின் வல்லவரான தில்லை நடராஜன் திகழ்கிறார். இந்த ஆலயம் அருகே தில்லைக் காளி கோவில் அமைந்துள்ளது.
ஆலய தத்துவம் என்னவென்றால், இந்த பிரபஞ்சத்தின் அசைவுகளை நடராஜர் என உருவகப்படுத்தி, பிரபஞ்சத்தின் இயக்கம் நடராஜர் இயக்கமும் ஒன்று என்று விளக்கப்பட்டுள்ளது.
நடன போட்டியில் சக்தியின் கர்வத்தை அகற்ற சிவன் ஊர்த்துவ நடனமாடுகிறார். ஊர்த்துவ தாண்டவம் என்பது ஒரு காலை வானை நோக்கி தூக்கி ஆடுதல் ஆகும்.
சக்தி ஒரு பெண் என்பதால் அவரின் அந்த நடன போட்டியில் தோல்வியை ஒப்புக் கொள்கிறார். இருந்தாலும் சிவன் மீது கோபம் கொண்ட சக்தி காளி உருவமாக மாறி தில்லையின் எல்லையில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
3. காசி விஸ்வநாதர் ஆலயம் வாரணாசி உத்திரபிரதேசம்
'காஞ்சியில் பிறந்தால் முக்தி காசியில் இறந்தால் முக்தி' என்பார்கள். இந்த ஆலயத்திற்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும், அயல் நாட்டில் இருந்தும் வருகிறார்கள்.
கங்கையில் புனித நீராடி காசி விஸ்வநாதர், அன்னபூரணி தாயாரையும் தரிசித்தல் பெரும் பேறு என பக்தர்கள் கருதுகிறார்கள். மேலும் மாலையில் கங்கைக் கரையில் நடைபெறும் ஆரத்தி மிகவும் புகழ் பெற்றதாகும்.
இந்த ஆலயத்திற்கு செல்வோர் கங்கை கரையில் உள்ள துறவிகள் சந்நியாசிகள் மற்றும் அகோரிகள் ஆகியோரைக் கண்டு மிரட்சி அடைவதும் உண்டு. இங்கு வந்து இறந்து விட்டால், கங்கை கரையில் அரிச்சந்திரா காட் அருகே எரித்து விடும் சடங்குகள் நடைபெறுகிறது.
இந்த ஆலயத்தின் மற்றொரு சிறப்பு கால பைரவர் ஆலயம் ஆகும். விஸ்வநாதர், அன்னபூரணி தாயார் தரிசனத்திற்கு பின் கால பைரவர் தரிசனம் கட்டாயம் செய்ய வேண்டும் என்று முன்னோர்கள் கூறி உள்ளனர்.
காசியின் தெருக்கள் மிக மிக குறுகலானவை. மக்கள் நடமாட்டம், கடைகளில் பக்தர்கள் கூட்டம் நம்மை மூச்சு முட்ட வைத்து விடும். இருந்தாலும், காசி தரிசனம் கோடி புண்ணியம் ஆகும்.
4. லிங்கராஜ் ஆலயம் புவனேஸ்வர் ஒடிசா
இந்த ஆலயம் இந்துக்களின் புனித ஆலயமாக கருதப்படுகிறது. வேண்டிய வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே நிலவுகிறது.
இந்த ஆலயத்தில் வீசும் காற்றுக்கு அதீத சக்தி உள்ளது நம்ப படுகிறது. ஆலயத்தின் அருகே ஒரு பழைய மரத்தின் கீழ் அமர்ந்து சற்று நேரம் தியானத்தில் இருந்து வைக்கும் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேறும்.
5. தாரகேஸ்வரர் ஆலயம் மேற்கு வங்காளம்
மேற்கு வங்காளத்தில் உள்ள இந்த ஆலயம் மிக்க சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த ஆலயத்தில் சிவனை வழிபட்டால் மனக் குழப்பம் மற்றும் தீராத வியாதிகள் விலகும் என்று பக்தர்களால் நம்பப் படுகிறது. ஒரு முறை இந்த சிவனை தரிசித்தாலே அற்புதங்கள் நிகழும் என்கிறார்கள்.
6. கிரிஸ்னேஸ்வரர் ஆலயம் மகாராஷ்டிரா
இந்த ஆலயம் சிறியது என்றாலும் சிறப்பான ஆலயம் என்று பக்தர்கள் கருதுகிறார்கள். 'மூர்த்தி சிறிது என்றாலும் கீர்த்தி பெரிது' என்ற அடைமொழி கேற்ப அமைந்துள்ள ஆலயமாகும். இந்த ஆலயத்தில் எந்த விதமான வணிக ஆர்ப்பாட்டங்களும் அதிக ஆடம்பரம் இல்லாத அமைதியான ஆலயமாகும். சிறிதளவே சுற்றுலா பயணிகள் வருவதால், சிவபெருமானை தரிசித்த பின்னர் அமைதியாக தியானத்தில் அமர்ந்து அவனருள் பெறும் ஆலயமாக உள்ளது.
7. முருடீஸ்வரர் ஆலயம் கர்நாடகா
கர்நாடகா சுற்றுலா செல்பவர்கள் கட்டாயம் இந்த ஆலயத்திற்கு சென்று தான் திரும்புவார்கள். மிகவும் பிரம்மாண்டமான சிவன் சிலை கடற்கரை அருகில் அமைக்கப்பட்டது. அவரை தரிசிக்க அருகில் ஒரு உயர் கோபுரம் ஒன்றும் பக்தர்களின் வசதிக்காக நிறுவப்பட்டுள்ளது. இயற்கையான காற்று, கடல் அலைகள் வருகை பக்தர்கள் கால்களை மட்டும் நனைப்பதில்லை. இதயத்தையும் நனைக்கின்ற ஒரு ஆலயமாகும்.
தென்னாடுடைய சிவனே போற்றி... எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!