மதுரையில் அமைந்துள்ள பஞ்ச பூத ஸ்தலங்கள்!

Pancha Bhoota Sthalams
Pancha Bhoota Sthalams
Published on

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஈசனுக்கு பஞ்ச பூத ஸ்தலங்கள் அமைந்துள்ளது அனைவரும் அறிந்த ஒன்றாகும். திருவானைக்காவல் நீர் ஸ்தலம், சிதம்பரம் ஆகாய ஸ்தலம், காஞ்சிபுரம் நில ஸ்தலம், திருவண்ணாமலை நெருப்பு ஸ்தலம், காளஹஸ்தி காற்று ஸ்தலம் ஆகும். ஆனால், அதுபோலவே மதுரையிலேயே பஞ்ச பூத ஸ்தலங்கள் அமைந்துள்ளன என்பது பலரும் அறாயத ஒன்றாகும். 

இந்த பதிவில் நாம் மதுரை பஞ்ச பூத ஸ்தலங்களைப் பற்றி அறிந்து கொள்ளுவோம்.

1. திருவாப்புடையார் கோயில் 'நீர் ஸ்தலம்'

திருவாப்புடையார் கோவில் மதுரையின் பஞ்ச பூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாகும். திருஆப்பனூர் ஆப்புடையார் கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற ஸ்தலம். இத்தலத்தில் அர்ச்சகர் உலையிலிட்ட ஆற்று மணலை இறைவன் அன்னமாக மாற்றினார் என்பது நம்பிக்கை.

இந்தக் கோவிலில் மூலவரான ஆப்புடையார் சுயம்புலிங்கமாகக் கிழக்கு நோக்கிப் பார்த்த நிலையிலும், அம்மனான சுகந்த குந்தளாம்பிகை தெற்கு நோக்கிப் பார்த்த நிலையிலும் இருக்கின்றனர். 

இத்தலம் மதுரைக்கு அருகில் செல்லூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது. மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து தடம் எண் 17, 17A, 17C பேருந்துகளில் ஏறி திருவாப்புடையார் கோவிலை அடையலாம்.

2. பழைய சொக்கநாதர் கோயில் 'ஆகாய ஸ்தலம்'

மதுரையில் உள்ள பஞ்சபூதத் தலங்களில் ஆகாய ஸ்தலம் பழைய சொக்கநாதர் கோயில். இந்த கோயிலுக்கு ஆதிசொக்கநாதர், பழைய சொக்கநாதர், வடதிருவாலவாய் கோயில் முதலான பல பெயர்கள் வழங்கப்படுகின்றன. நவகிரகங்களில் புதன் பகவான் இத்தலத்து சொக்கநாதரை வழிபட்டதால் இந்த கோயில் புதன் தோஷம் நீங்க வழிபட வேண்டிய வேண்டிய புதன் ஷேத்திரமாகும்.  இந்த கோயில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அருகிலேயே அரை கிலோ மீட்டர் தூரத்தில் சிம்மக்கல் பேருந்து நிறுத்தம் அருகில் அமைந்துள்ளது.

3. இம்மையில் நன்மை தருவார் கோயில் 'நில ஸ்தலம்'

மதுரையிலுள்ள பஞ்சபூத தலங்களில்  இக்கோயில் நில ஸ்தலம் என்பதால் புது கட்டடம் கட்டத் துவங்குபவர்கள் பிடி மண்ணை எடுத்து வந்து வழிபட்டு அம்மண்ணைக் கொண்டு கட்டிடத்தை எழுப்புகிறார்கள். கிழக்கு பார்த்த நிலையில் அமைந்த லிங்கத்தின் கீழ்ப்புறத்தில் சிவனும் பார்வதியும் லிங்கத்திற்கு பூஜை செய்யுமாறு மேற்கு நோக்கி காட்சியளிக்கின்றனர். இத்தலம் பூலோக கைலாயம் என வழங்கப்படுகிறது. இக்கோவிலின் மூலவர் பெயர் சொக்கநாதர். அம்பாள் பெயர் மத்தியபுரி நாயகி. உற்சவ மூர்த்தி சோமாஸ்கந்தர் ஆவார். தல விருட்சம் வில்வம் மரம் ஆகும்.  இக்கோயில் மதுரை நகரின் மையப் பகுதியில் தெற்கு மாசி வீதி மேலமாசி வீதி சந்திப்பில் அமைந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
ஜடாமுடியுடன் காட்சித்தரும் முருகன் கோவில் எங்கிருக்கிறது தெரியுமா?
Pancha Bhoota Sthalams

4. தென் திருவாலவாயர் கோயில் 'நெருப்பு ஸ்தலம்'

மூலவர் பெயர் சொக்கநாதர். அம்பாள் பெயர் மீனாட்சி. இக்கோயிலில் உள்ள சிவன் அளவில் பெரியவர். இது தெற்கு திசைக்குத் தலைவனாகிய எமன் வழிபட்ட கோவில். இந்த கோவில் மதுரையில் உள்ள பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகும். திருவிளையாடற் புராணக் கதைகளில் ஒன்றான மதுரைக்கு எல்லை கட்டிய படலம் நிகழப்பெற்ற கோயில் இது. மேலும் திருநீற்றுப்பதிகம் பாடப்பெற்ற ஸ்தலம் என பல பெருமைகள் உடையது இக்கோயில்.  மதுரை தெற்கு மாசி வீதியில் இக்கோயில் அமைந்துள்ளது.

5. முக்தீஸ்வரர் கோயில் 'காற்று ஸ்தலம்' 

சிவன் ஶ்ரீமுக்தீஸ்வரராகவும் அம்பாள் ஶ்ரீமரகதவல்லியாகவும் காட்சியளிக்கும் காற்று ஸ்தலமான முக்தீஸ்வரர் கோவிலில் ஈசனையும் அம்பாளையும் ஒரே இடத்தில் நின்று தரிசிக்கலாம். கர்மவினைகளை அகற்றும் சக்தி வாய்ந்தது இத்தலம். மதுரை நகரில் வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தின் மேற்கு பகுதியில் அமைந்திருக்கிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com