சிறுகதை - இயல்புக்கு மாறான இயற்பகை நாயனார்!

இயற்பகை நாயனார்
இயற்பகை நாயனார்saisundaram.org

காவிரி சங்கமம் என்னும் புனித தீர்த்தத்தினால் சிறப்பு பெற்ற காவிரிப்பூம்பட்டினம் என்னும் பூம்புகார் சோழ நாட்டில் அமைந்துள்ளது. அந்த ஊரில் பிறந்தவர் இயற்பகையார். அவர் இயற்கை விதிக்கு மாறாக நம்முடையதென்று எதுவுமில்லை,  தன்னிடம் உள்ள அனைத்தும் அடியார்களுக்கே சொந்தம் என்ற கொள்கை கொண்டு வாழ்ந்தவர். இக்காரணத்தால் இயற்பகையார் என்ற திருநாமம் அடையப் பெற்றார்.

வணிக குலத்தைச் சேர்ந்த இவர் தமது வணிகத் திறமையால் மிகப்பெரிய செல்வந்தராக விளங்கினார். இல்லறம் என்பது இறை அடியாரின் பணி செய்வது  என்பது அவரது கொள்கையாக இருந்தது. ஆதலால், சிவனடியார் யாரெனினும் அவர் வேண்டுவதை இல்லையென்று கூறாது கொடுக்கும் இயல்பினை உடையவராக வாழ்ந்து வந்தார்

அப்படி இருக்கையில் ஒரு அடியார் உடல் முழுதும் திருநீறு அணிந்து சிவனடியார் கோலத்தைக் கொண்டு இயற்பகையாரது இல்லத்தினை அடைந்தார். அவ்வடியாரை இயற்பகையார் உள்ளம் நிறைந்த அன்புடன் வரவேற்று, இங்கு தாங்கள் எழுந்தருளியது என் பெருந்தவப் பயன் என்று கூறி திருவடி தொழுது வழிபட்டு அன்புடன் வரவேற்றார்.

சிவனடியார் இயற்பகையாரை நோக்கி “சிவனடியார்கள் வேண்டியனவற்றை மறுக்காது தரும் உம்மிடத்தில் ஒரு பொருளை விரும்பி கேட்க வேண்டி இங்கு வந்தேன்”. எனக் கூறினார்.

இயற்பகையார், “என்னிடமிருக்கும் எதுவாயினும் அது எம்பெருமானாகிய சிவனடியாரது உடைமை. ஆதலால், நீவிர் விரும்பியதை கூறுவீராக” என்றார்.

அது கேட்ட சிவனடியார், “உன் மனைவியை விரும்பி வந்தேன்” எனச் சொன்னார்.

இதனைக் கேட்ட நாயனார் அதிர்ச்சியடையாது, ஆனந்தம் மேலிட மகிழ்ச்சியடைந்து, “எம்பிரான் என்னிடம் உள்ள பொருளையே வேண்டிக் கேட்டது எனது புண்ணியப் பயனாகும்” எனக் கூறினார்.

விரைந்து இல்லத்தினுள் புகுந்து கற்பில் சிறந்த தம் இல்லத்தரசியாரை நோக்கி, “பெண்ணே! இன்று உன்னை இச்சிவனடியாருக்கு நான் கொடுத்துறவிட்டேன்” என்றார். அதனைக் கேட்ட மனைவியார், மனம் கலங்கினார். பின்னர் தன் கணவரை நோக்கி “எனக்கு உரிமையாளராகிய, நீர் எமக்கு இட்ட கட்டளை இதுவென்றால், தாங்கள் கூறியதை செய்வது மட்டுமே எமது பணி” என்று கூறி தன் மணாளனாகிய இயற்பகையனாரை வணங்கினார். அங்கு வந்த சிவனடியாரது சேவடிகளைப் பணிந்து வணங்கி நின்றார்.

சிவனடியார் விரும்பிய வண்ணம் மனைவியாரைக் கொடுத்து மகிழும் அடியவராகிய இயற்பகையார், சிவனடியாரை நோக்கி, “இன்னும் நான் தங்களுக்கு செய்ய வேண்டிய பணி ஏதேனும் உள்ளதோ” என்றார்.

சிவனடியார், “இந்த பெண்ணை நான் தனியே அழைத்துச் செல்லும்போது உனது சுற்றம் மற்றும் இவ்வூரையும் கடந்து செல்ல நீ எனக்குத் துணையாக வர வேண்டும்” என்றார். அது கேட்ட இயற்பகையார் நானே இவ்வூரை விட்டுத் தாங்கள் செல்லும் வரை உடன் வருவேன்” என்றார். இயற்பகையார் போர்க்கோலம் பூண்டு வாளும் கேடயமும் கொண்டு வந்தார். அடியவரை வணங்கி தனது மனைவியையும் அவரையும் முன்னே போகச் சொல்லி, அவருக்கு பாதுகாப்பாக பின் தொடர்ந்து சென்றார்.

இச்செய்தியை அறிந்த மனைவியாரது சுற்றத்தாரும், இயற்பகையாரின் சுற்றத்தாரும், “இவன் பித்தன். அவன் மனைவியை மற்றொருவன் கொண்டு போவதா?” என கோபம் கொண்டனர். சிவனடியாரை நோக்கி, “கெடுபுத்தி கொண்ட அடியவரே, நற்குலத்தில் பிறந்த இப்பெண்ணை இங்கேயே விட்டுவிட்டு எமது குலத்தின் மீது ஏற்பட்ட பழிபோக இவ்விடத்தை விட்டுச் செல்லுங்கள்” எனக் கூறினர்.

இயற்பகையார் - மனைவி
இயற்பகையார் - மனைவி

இயற்பகையார் மனைவி, “அடியாரே, அஞ்ச வேண்டாம். இயற்பகை வெல்லும்” என்றார்.

வீரக்கழல் அணிந்த இயற்பகையார் நான் அவரையெல்லாம் வென்று வீழ்த்துவேன் என அடியவருக்கு ஆறுதல் கூறி, போருக்கு வந்த தம் சுற்றத்தாரை நோக்கி, “ஒருவரும் எதிர் நில்லாமல் ஓடிப் பிழைத்துக்கொள்ளுங்கள். இல்லையேல் என் வாளுக்கு இரையாகி மடிவீர்” என்று அறிவுறுத்தினார்.

அது கேட்ட சுற்றத்தவர் நீ என்ன காரியத்தைச் செய்துவிட்டு இவ்வாறு பேசுகின்றாய். நாங்கள் அனைவரும் இறந்தாலும்கூட இக்காரியத்தை உன்னை செய்யவிட மாட்டோம்” என்று முழங்கினர். இயற்பகையார், சுற்றத்தார் மேல் பாய்ந்து மாறி மாறி அவர்களுடைய கால்களையும் தலைகளையும் துண்டித்து வீழ்த்தினார்.

அடியவரை நோக்கி, “அடிகளே நீர் அஞ்சாது இக்காட்டினைக் கடக்கும் வரை உடன் வருகின்றேன்” என்று கூறித் துணையாக சென்றார்.

திருச்சாய்க்காட்டை சேர்ந்தபோது, சிவனடியார் “நீர் வீட்டிற்குத் திரும்பிச் செல்லலாம்” என்று கூறினார். இயற்பகையாரும் அவரை வணங்கிவிட்டு ஊருக்குத் திரும்பினார். மனைவியாரை மகிழ்வுடன் அளித்து திரும்பிக்கூட பாராது செல்லும் நாயனாரது அன்பின் திறத்தை எண்ணி இறைவன் மகிழ்ந்தார்.

மெய்யான அன்பு கொண்ட உள்ளமுடைய நாயனாரை நோக்கி சிவனடியார் இங்கு வருவாயாக என்று அழைத்தார். இதனைக் கேட்டு திரும்பிய இயற்பகையார் அடியவரை காணாது, தனது மனைவியை மட்டும் அவ்விடத்தில் கண்டார்.

இதையும் படியுங்கள்:
ஈஸியா செய்யலாம் வீட்டிலேயே மணமணக்கும் சாம்பார் பொடி!
இயற்பகை நாயனார்

விண்ணிலே இறைவன் மாதொருபாகராக விடையின்மேல் தோன்றியருளி தெய்வக் கோலத்தைக் காட்டி அருளினார். இயற்பகையார் நிலத்திலே பலமுறை வீழ்ந்து தொழுதார். இயற்பகையாரும், அவரது மனைவியாரும் இறைவனைக் கும்பிட்டு திருவடிப்பேறும் பெற்று அம்மையப்பன் உடனுறையும் பெருவாழ்வு பெற்றனர். அவர் தம் சுற்றத்தாராய் அவருடன் போர் செய்து உயிர் துறந்தவர்களும் திருவடிபேறு பெற்று சிவபுரத்தில் இன்புற்றனர்.

இயற்கைக்கு மாறாக யாரும் செய்யத் துணியாத காரியத்தை செய்தவராதலால், இவர் இயற்பகை நாயனார் என்று பெயர் பெற்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com