சிறுகதை – கொலுசு!

ஓவியம்; வேதா
ஓவியம்; வேதா
Published on

தோ ஒரு காலகட்டத்தில் அந்த வேண்டுதல் செய்து கொள்ளப்பட்டது.

மதுரை மீனாக்ஷிக்கு, அவளுடைய திருவடிகளுக்கு அழகான ஒரு ஜோடி வெள்ளிக் கொலுசு அணிவித்து அழகு பார்க்க வேண்டும் என்று. நாம் கொடுத்தாலும் கோவிலில் மீனாக்ஷிக்கு நித்யம் அதனை அணிவிக்க மாட்டார்கள் என அறிவேன். அவள் தங்கத்திலும் நவரத்தினங்களிலும் வைரங்களிலும் ஜொலிப்பவள். நான் கொடுக்கும், கொடுக்க விரும்பும் கொலுசு எந்த மூலைக்கு? இருந்தாலும் அல்ப ஆசை யாரை விட்டது?

கொலுசுக் கடைகளுக்கு எல்லாம் போய் டிசைன்களைப் பார்ப்பதிலேயே பல நாட்கள் கழிந்தன. ஏனென்றால் ஒன்றும் அபூர்வ அழகாக, அவளுடைய காலுக்கு ஏற்றபடி எனக்குத் தோன்றவில்லை.

நீண்ட நாட்களுக்கு முன்பு வாங்கிய என்னுடைய கொலுசு மாதிரி ஒன்றைத் தேடி அலைந்தேன் நான். அது எப்படி இருக்கும் தெரியுமா? அருகருகாக குண்டுமல்லிகை மொட்டுக்கள் - மொட்டின் தலை கீழ்நோக்கியும், காம்பு மேல்நோக்கியும் இருக்கும்படி அமைந்தது அது. இப்போது நான் வேறுசில காரணங்களால் அதனை அணிவதில்லை. பீரோவுக்குள் தூங்குகிறது. அணிந்திருந்த காலங்களில் என் கால்களைச் சில நொடிகளாவது பார்த்து, கொலுசின் அழகை வியக்காதவர்களே இல்லை. அதே போன்ற ஒன்றைத் தேடினேன், தேடினேன், தேடியலைந்தேன். என்னுடைய கொலுசையே கொடுக்க வேண்டியதுதானே என உங்களில் சிலர் கூறலாம். என் நண்பர்கள் பலர்கூடக் கூறினார்கள். தெய்வங்களுக்கு நமது தங்க நகைகளைக் கொடுப்பதில்லையா? அது போலத்தான் இதுவும் எனலாம். ம்ஹும், என் அழுக்குக் கால்களில் போட்டுக் கொண்டது அந்த மகாராணிக்கா? என்ன அபசாரம்!

 ஒருநாள் நான் எப்போதும் போகும் நகைக் கடைக்காரர், "சில புது டிஸைன் வந்திருக்கு, பார்க்கிறீங்களா?" என்றார். அவரிடம் இது அம்பாளுக்காக எனக் கூறியிருந்ததனால் போகும் போதெல்லாம் நல்ல டிசைன்களையே காட்டுவார். வேறு ஏதோதான் வாங்கப் போயிருந்தேன். அதனால் அசிரத்தையாகப் பார்த்தபோது, மல்லிகை மொட்டுகள் இல்லைதான், ஆனால் அந்த வேறுவிதமான டிஸைன் கண்ணைக் கவர்ந்தது. அழுத்தமான சங்கிலி; அதில் மெல்லிய சங்கிலி ஒன்று சின்னச்சின்ன வளைவுகளாக கொலுசின் நீளம் முழுமையும். இடையிடையே சிகப்பு, பச்சைப் பூக்கள் பதித்திருந்தன. இதுவரை பார்த்திராத புது டிசைன். எத்தனை தேடினாலும் மல்லிகைமொட்டு டிசைன் கண்களில் படப்போவதில்லை என்பது நிரூபணமாகி விட்டது.

கொலுசுக்கு என வைத்திருந்த பணத்திற்கு மேலும் போட்டு அழகே உருவான அந்தக் கொலுசை வாங்கிவிட்டேன். உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளியது. ஆனால் மதுரைக்கு எப்போது போவது? அதுவும் அம்பாளுக்கு அருகாமையில் சென்று கொலுசை எப்படி சமர்ப்பித்து அதனை அவள் கால்களில் அணிந்திருப்பதனைப் பார்த்துக் கண் குளிர்வது? அருகாமையில் நின்று எப்படி தரிசனம் செய்வது?

து ஒரு காலம். நான் பல்கலைக் கழகத்தில் படித்தபோது ஞாயிறுதோறும் அரசரடியில் பாட்டுகிளாசை முடித்துக்கொண்டு காலைவேளையில் பத்து பத்தரை மணிக்கு கோவிலுக்குப் போவது வழக்கம். சிலநாட்களில் முதலில் கோவிலுக்குச் சென்றுவிட்டுப் பின்பு பாட்டுக்கிளாசிற்குச் செல்வேன்.

எது எப்படியோ, பெரும்பாலான தினங்களில் அந்த நேரத்தில் ஏகாந்த சேவை கிட்டும். அப்போதெல்லாம் அருகாமையில் நின்று அந்தக் கருணை பொழியும் மீன் விழிகளையும், அழகான  மரகத வடிவையும் கண்டு மெய்சிலிர்த்திருக்கிறேன். எனக்குத் தெரிந்த ஸ்லோகங்களையும், பாட்டுக்களையும் அவள் மட்டுமே கேட்க, ஆனந்தமாகப் பாடியிருக்கிறேன். இப்போது எப்படி அருகாமையில் போவது?

காத்திருந்து காத்திருந்து அந்த நாளும் வந்தது. ஒரு நிகழ்ச்சிக்காக மதுரை சென்றபோது, அதனை ஏற்பாடு செய்தவர்கள் கோவிலில் தரிசனத்திற்கும் ஏற்பாடு செய்தனர். அர்ச்சனை செய்யும்போது வேண்டுதல் பற்றிய விவரத்தைச் சொல்லி, கையோடு கொண்டு வந்திருந்த கொலுசை அவரிடம் கொடுத்தேன்.

"அம்பாள் காலடியில் வைக்கிறோம். தீபாராதனை காட்டுகிறோம். பின்பு உங்களிடமே கொடுத்து விடுவோம். அதோ அந்த உண்டியலில் போட்டு விடுங்கள்," என்றார். பின்பு கொலுசை அணிந்திருப்பது போன்ற பாணியில் அதன் திருகுகளைப் போட்டு அழகாக வட்ட வடிவில் பண்ணி, அந்த ஜோடியை மீனாக்ஷியின் பாதத்தினருகே வைத்தார். அதன்மீது குங்குமம் இட்டு அர்ச்சனை செய்து, தீபாராதனை காட்டினார் குருக்கள். அன்னையின் திருவடிகளில் அவை அணியப்பட்டதாக மனக்கண்ணில் கண்டு கொண்டேன். பின் எடுத்து என்னிடமே திருப்பி அளித்தார். வாங்கிக் கண்களில் ஒற்றிக் கொண்டேன். அன்னையின் திருவடிகள் பட்டவை அல்லவா அவை?

இதையும் படியுங்கள்:
நல்லோர்களது நட்பு நன்மைக்கே!
ஓவியம்; வேதா

பின்பு பிரதட்சிணம் வந்துவிட்டு அதனை வாங்கியபோது கொடுத்த ஒரு சிறு பட்டுப்பையில் வைத்து உண்டியலில் கொண்டு சேர்த்தேன். மனம் நிம்மதி அடைந்தாலும், ஒரு கோடியில் ஒரு நப்பாசை. அழகாக அம்பாளின் கால்களில் கொஞ்ச நேரமாவது இருந்திருக்கலாகாதா என்று. ஏதோ எனக்கு இவ்வளவாவது கொடுத்து வைத்ததே என்று சமாதானம் செய்து கொண்டே வெளிப்பிரகாரத்தைச் சுற்றி வரலானோம். திடீரென "அம்மா, அம்மா" என அழைத்தபடி ஒரு ஏழெட்டு வயதுச் சிறுமி முன்னே சென்று விட்ட தனது பெற்றோருடன் சேர்ந்துகொள்ள ஓடினாள். முழங்கால்வரை வரும் ஒரு கவுன்தான் அணிந்திருந்தாள்.

ஓடிய சிறுமியைப் பார்த்த எனக்கு தூக்கிவாரிப் போட்டது. அதிர்ச்சியில் சிலையாக நின்றேன்.  உடன்வந்த கணவரிடம், "அதோ பாருங்கள், அந்தக் குழந்தையின் பாதங்களை," எனக் கூறினேன். நான் அம்பாளுக்கு வாங்கிச் சாற்றிய அதே டிசைனில் அந்தக் குழந்தையும் கொலுசு அணிந்திருந்தாள். அச்சு அசல் அதே டிசைன். துளிக்கூட வித்தியாசமில்லை. இப்போது அந்தக் குடும்பம் ஓரிடத்தில் நின்றிருந்ததால் அதனை நன்றாகவே பார்க்க முடிந்தது.

"மீனாக்ஷி கொலுசை ஏத்துண்டு காலிலேயும் போட்டுண்டா பார்," எனப் புன்னகைத்தார் கணவர். கண்களில் வழிந்தோடிய நீருடன் தடுமாறியபடி அவர் கையைப் பிடித்துக் கொண்டு நடந்தேன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com