

-ஆர். பொன்னம்மாள்
அவர் பெயர் காலக விருக்ஷீய ரிஷியாம்! அவர் கூண்டிலுள்ள காகத்துக்கு நடப்பது, நடந்து கொண்டிருப்பது, நடக்கப்போவது எல்லாம் தெரியுமாம்! அதைத் தன் காக மொழியில் சொல்லுமாம்! அவருக்கு காக பாஷை தெரியுமாம்!” என்றான் காவலன். அவரை அழைத்து வர உத்தரவிட்டார் கோசல தேசத்து அரசர் ஷேமதர்சி.
முனிவர் விரும்பியதும் அதைத்தான்! ‘இந்த மன்னர் ஆட்சிக்கு வந்த பிறகு தீயவர்களின் ஆக்கிரமிப்பு அரண்மனை முழுவதும் ஆக்கிரமித்து விட்டது. கஜானா காலியாகி வருவதை, அதற்குக் காரணமானவர்களை முனிவரின் கையாட்கள் அவ்வப்போது தெரிவித்தனர். ஒரே சமயத்தில் எல்லோரையும் பகைத்துக் கொள்ளக் கூடாது’ என்று யோசித்தே முனிவர் இந்த முடிவுக்கு வந்திருந்தார்.
“மகரிஷே! நிகழ் காலத்தைப் பற்றி முதலில் சொல்லுங்கள்” என்றார் வேந்தர். காகமிருந்த கூண்டை எடுத்து அசைத்தார் ரிஷி. காகம் பயந்து “கா, கா” எனக் கத்தியது.
“மன்னா! என்னை விட்டுவிடுங்கள். நான் எது சொன்னாலும் நீங்கள் நம்பப்போவதில்லை. என் காகம் ஒருபோதும் பொய் சொல்லாது” என்று பயந்தவர் போல் எழுந்தார் முனிவர்.
“முனிவரே! அமருங்கள். உங்கள் காகம் சொன்னதென்ன? நீங்கள் சொல்வதை நான் அப்படியே நம்புகிறேன்” என வாக்களித்தான் கொற்றவன்.
“அதோ, உங்களுக்கருகில் அமர்ந்திருக்கிறாரே பொக்கிஷ அதிகாரி புருஷோத்தமர், அவர் கஜானாவை காலி செய்து, சொந்த வீடு, நிலம், ஆபரணம் என்று சொத்துக் குவித்திருக்கிறாரென்று காகம் மொழிகிறது. அவர் வீட்டை சோதனையிட்டால் உண்மை புரியும் என்கிறது” என்றார் முனிவர்.
அரசன் திகைத்தான். துர்மந்திரிகளுக்கு வயிற்றில் புளியைக் கரைக்க, பீதியுடன் அமர்ந்திருந்தனர்.
வேறு வழியின்றி மந்திரி புருஷோத்தமன் மாளிகையைச் தோதனையிட ஏவலர்களை அனுப்பினான் மன்னன். ஏவலர் பொன்னும், மணியும் மூட்டை கட்டிக் கொண்டு வந்தனர். காகத்தை வைத்து, துரோகிகளின் வஞ்சகத்தையெல்லாம் அடையாளம் காட்டினார் ரிஷி. முனிவர் தன்னுடனேயே இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் வேந்தர்.
பாதிக்கப்பட்ட அமைச்சர்கள் கூட்டு சேர்ந்து ‘காகம் இருந்தால்தானே காட்டிக் கொடுக்கும். அதைக் கொன்றுவிடலாமென முடிவுகட்டி உணவில் விஷம் கலந்து காகத்தைக் கொன்றனர்.
முனிவர் அரசனிடம், “மன்னா! காகத்துக்கு நேர்ந்த கதி நாளை எனக்கோ, தங்களுக்கோ நடக்காது என்பதற்கு என்ன உத்திரவாதம்” என்றார்.
“துரோகிகள் அனைவரையும் பதவியை விட்டு விலக்கி விடலாமா?” என்று கேட்டார் அரசர்.
“அப்படிச் செய்தால் பகையரசரோடு கூட்டு சேர்ந்து போருக்கு வருவர். ஒவ்வொருவராய் இடைவெளி விட்டு நீக்கி, நல்ல நபரை மாற்றாகப் பதவியில் அமர்த்தினால் நிர்வாகம் சீர்குலையாதிருக்கும்” என்றார் மகரிஷி. முனிவர் கூறியபடி செய்தார் அரசர்.
முனிவர் எப்போது வேண்டுமானாலும் வந்து தம்மைப் பார்க்க சுதந்திரம் தந்தார் அரசர். நாடு சுபிட்சமாகியது. நெடுநாள் கழித்து காகம் எதுவும் சொல்லவில்லை என்ற ரகசியத்தை வெளியிட்டார் முனிவர்.
‘தம்மால் ஒரு பறவை உயிர்விட்டதே’ என மன்னன் வருந்தினான். ‘யுத்தத்தில் பலர் உயிரிழப்பதில்லையா’ என முனிவர் சமாதானம் செய்தார். அன்று முதல் தினமும் காகங்களுக்கு உணவிடுவதை வழக்கமாய் கொண்டான் மன்னன் ஷேமதர்சி.
பின்குறிப்பு:-
தீபம் நவம்பர் 2015 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !
- ஆசிரியர், கல்கி ஆன்லைன்