

சித்ரா பௌர்ணமி, தமிழ் மாதமான சித்திரையில் வரும் முழு நிலவு நன்னாள் ஆகும்.
சித்ரா பௌர்ணமி இரவில் நிலவொளியில் தியானம் செய்வது, மன அமைதி மற்றும் உடல் நலனை மேம்படுத்தும். அன்று புனித நதிகள் மற்றும் கடலில் நீராடுவது பாவங்களை அகற்றும் என்றும் கூறப்படுகிறது.
சித்ரா பௌர்ணமி, சித்ரகுப்தரின் அருளைப் பெற இது ஒரு பொன்னான நன்னாள். கர்ம வினைகளை துடைத்து நம் தலை எழுத்தை மாற்ற ஏற்ற ஒரு நாள் இது. அன்று புனித நதிகள் நீராடி விரதம் இருந்து தானங்கள் செய்து சித்ர குப்தரை வழிபட்டால் பாவங்கள் நீங்கி புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஏழைகளுக்கு உதவுவது போன்ற நல்ல செயல்களை செய்வதன் மூலம் சித்ர குப்தரின் அருளை பெறலாம். பார்வதி தேவி வரைந்த சித்திரத்தில் இருந்து இவர் பிறந்தவர் என்பதால் அவருக்கு சித்ர குப்தர் என்ற பெயர் ஏற்பட்டது. இந்த நாளில் சித்ர குப்தரை வழிபாடு செய்து வணங்கினால் அவர் நமக்கு எளிய முறையில் சிவன் அருளை அடைய செய்வார் என்பது நம்பிக்கை.
சித்ர குப்தருக்கு என்று தனி கோவில் தேனி மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ளது. நாம் அறியாமல் செய்த பாவங்களில் இருந்து விமோசனம் பெறலாம்.
சித்ரா பௌர்ணமி நாளில் வீட்டில் சித்ரான்னங்கள் செய்து இறைவனுக்கு படைத்து குடும்பத்துடன் சாப்பிடலாம். மாலையில் கடற்கரை, குளம், ஆறுகளுக்குச் சென்று மகிழலாம்.
திருவண்ணாமலையில் கிரிவலம் வருவது மிகவும் பிரசித்தி பெற்றதும், சிறப்பு வாய்ந்த நல்ல நாளாகும்.
சித்ரா பௌர்ணமி அன்று மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி மண்டூக மகரிஷிக்கு அருள் புரியும் வைபவம் மிகவும் விசேஷமாக நடக்கும்.
சித்ராபௌர்ணமி நாளில் காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள், 'நடவாவி' எனும் கிணற்றுக்குள் எழுந்தருள்வார். ஸ்ரீ ராமானுஜருக்கு வரதராஜ பெருமாள் காட்சியளித்து அருள்பாலித்த வைபவத்தை கொண்டாடும் விதமாக இத்திருவிழா மிக சிறப்பாக நடந்து வருகிறது.
குற்றாலத்தில் உள்ள செண்பகாதேவிக்கு மிக சிறப்பான பூஜைகள் நடைபெறும். அப்போது சந்தன வாசனையுடன் மழை பொழியும் என்று புராணங்கள் கூறுகின்றன.
நாமக்கல் கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோயிலில் சித்ரா பௌர்ணமி அன்று சித்தர்கள் நீராடிய பொய்கை கோயில் தீர்த்தமான சரபேஸ்வரர் தீர்த்தத்தில் நல்ல தீர்த்தம் கலப்பதாக புராணங்கள் கூறுகின்றன.
சித்ரா பௌர்ணமி நாளில் சத்ய நாராயண விரத பூஜை மிகவும் விஷேசம். மனிதர்கள் தங்கள் கஷ்டங்களில் இருந்து விடுபட, ஸ்ரீ மகா விஷ்ணுவே நாரதரிடம் இப்பூஜையைப் பற்றி கூறியதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
சித்ரா பௌர்ணமி நாளில் கூவாகம் ஊரில் கூத்தாண்டவர் கோயிலில் அரவானை கணவராக திருநங்கைகள் வழிபடும் திருவிழா கொண்டாடுவார்கள்.
தேனி மாவட்டம் குமுளியிலிருந்து 14 கி.மீ தொலைவில் மங்களா தேவி கண்ணகி கோயில் உள்ளது. இங்கு சித்ரா பௌர்ணமி தினத்தன்று ஒரு நாள் மட்டுமே திறந்து பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
சித்ரா பௌர்ணமி நாளில் பக்கத்தில் உள்ள கோயில்களுக்குச் சென்று இறைவனை வழிபட்டு அருள் பெறலாம்.