சந்திராஷ்டமம் வந்தாலே பலருக்கும் பயமும் பதற்றமும் வந்துவிடும். சந்திராஷ்டமத்தின் பாதிப்புகள் நீங்க சில எளிமையான பரிகாரங்களைச் செய்தாலே பயமின்றி அந்த நாளினை கடந்து விடலாம். சந்திராஷ்டமம் என்றால் சந்திரன் + அஷ்டமம் =சந்திராஷ்டமம் ஆகும் .சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கும் இரண்டே கால் நாட்களைத்தான் சந்திராஷ்டம காலம் என்கிறோம். அதிலும் குறிப்பாக, நீங்கள் பிறந்த நட்சத்திரம் 17வது நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்யும் காலம்தான் சந்திராஷ்டம நாளாகும்.
ஒருவரின் மனதுக்கு அதிபதி சந்திரன். அவர் ஒரு ராசிக்கு எட்டாவது வீட்டில் மறைவு பெற்றிருக்கும்போது மனதில் தேவையற்ற சஞ்சலங்கள் ஏற்படக்கூடும். மனம் அமைதியின்றி தவிக்கவும் நேரிடும் . தெளிவான முடிவுகளை எடுக்க முடியாமல் போகும். எனவேதான் பெரும்பாலோர் சந்திராஷ்டம தினங்களில் எந்த ஒரு புது முயற்சியிலும் ஈடுபடாமல் வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்துவர்.
உண்மையில் சந்திராஷ்டமம் எல்லோருக்கும் கெடுதல் செய்யுமா என்றால் இல்லை. சந்திராஷ்டமம் என்றாலே இன்றைக்கு எல்லோர் மனதிலும் ஒரு அச்ச உணர்வு ஏற்படுகிறது. ஆனால் அதைக் கண்டு பயப்படத் தேவையில்லை. இது எல்லா நட்சத்திரக்காரர்களுக்கும் தொல்லை தராது. மேலும், ரிஷபம் மற்றும் கடக ராசியில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் நல்லது மட்டுமே செய்யும் என்பது ஜோதிடர்கள் கருத்தாகும்.
சந்திரன் மாத்ருகாரகன். ஒருவருக்கு சந்திராஷ்டம நாளில் தாயுடன் கருத்து வேறுபாடு, தாய் வழி உறவினர்களுடன் வீண் மனஸ்தாபம் போன்றவை ஏற்படும். ஜோதிட ரீதியாக, பொதுவாக ஒரு நாளைக்கான பலனைப் பார்க்கும்போது சந்திரனை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதனால்தான் ஜனன கால சந்திரனுக்கு கோசார சந்திரன் எந்த நிலையில் இருக்கிறாரோ, அதை வைத்து முடிவு செய்கிறோம். கடகம் மற்றும் ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டம நாள் கெடுதல் செய்யாது. காரணம், கடகம் சந்திரனின் ஆட்சி பெறும் ராசி என்பதாலும், ரிஷபம் சந்திரனின் உச்சம் பெறும் ராசி என்பதாலும் அந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு சந்திரன் நன்மையைச் செய்வார்.
அதேபோல், தன்னுடைய நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கும் சந்திராஷ்டம தினத்தில் நல்லது மட்டுமே நடக்கும். வளர்பிறையில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டம தினத்தில் நன்மையே நடக்கும். அதனால் சந்திராஷ்டமம் என்றால் எல்லோருக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் என்று சொல்ல முடியாது.
சந்திராஷ்டம நாளில் விநாயகருக்கு பால் அபிஷேகம் செய்வது நல்லது. அம்மன் கோயிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து வரலாம். சந்திராஷ்டம நாளில் எந்த ஒரு செயலையும் ஆரம்பிக்கும் முன்பு குலதெய்வத்தையும், முன்னோர்களையும், இஷ்ட தெய்வத்தையும் வணங்கி விட்டு ஆரம்பிப்பது நன்மை தரும். இப்படிச் செய்தால் தொடங்கும் காரியத்துக்கு எந்தத் தடையும் நேராது.
சந்திராஷ்டம நாளில் காலை எழுந்தவுடன் குளித்து முடித்து, சந்திரனை நினைத்து ‘ஓம் ஸ்ரீ சந்திராய நமஹ’ என்ற மந்திரத்தை உச்சரித்துவிட்டு அதன் பின்பு அன்றாட வேலைகளைத் தொடங்கினால் சந்திராஷ்டமத்தால் உங்களுக்கு பெரிய பிரச்னைகள் எதுவும் வராது. அதேபோல, வெண்மை நிற பொருட்கள் பாதிப்படைவது, அடுப்பில் வைத்த பால் பொங்குவது, உணவு வீணாவது என இயற்கையாக நடப்பது சந்திராஷ்டம தோஷத்தைப் போக்கிவிடும். சந்திராஷ்டம நாளன்று உங்களால் முடிந்த வரை ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். எந்த உதவியாக இருந்தாலும் சரி, ஒரு ஊனமுற்றவருக்காவது உதவி செய்து விடுங்கள்.