அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தின் சிறப்புகள்!

Thiruparankundram
Thiruparankundram
Published on

அழகுக்கும் அறிவுக்கும் பெயர் பெற்ற தமிழ் கடவுளான முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்று திருப்பரங்குன்றம். பல்வேறு அதிசயங்களுக்கும் அற்புதங்களுக்கும் புகழ்பெற்ற இந்த திருப்பரங்குன்றத்திலேயே முருகப் பெருமான் அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறார். மற்ற அனைத்து படைவீடுகளிலும் எழுந்த நிலையில் காட்சியளிப்பதே வழக்கம். இத்தகைய சிறப்பு வாய்ந்த அறுபடை வீடுகளில் முதல் வீடாக சொல்லப்படும் திருப்பரங்குன்றத்திற்கு உரிய சிறப்புகளைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

குறையாத இளமைக்கு சொந்தக்காரர் முருகப்பெருமான். தன் பக்தர்களுக்கு வரும் வினைகளை எல்லாம் தன்னுடைய வேலை பயன்படுத்தி அவர்களைக் காத்து அருள்வதால் தான் 'வேலுண்டு வினையில்லை' என்று கூறுகிறோம். முருகப்பெருமான் குறிஞ்சி நிலத்திற்கு உரிய தலைவன். குறிஞ்சி நிலம் என்பது மலையும் மலை சார்ந்த இடத்தையும் குறிப்பது. அதனால் தான் குன்று இருக்கும் இடமெல்லாம் கோவில் கட்டி வழிபட்டு வந்தனர். முருகப்பெருமானின் பெரும்பாலான கோவில்கள் மலை மீது தான் கட்டியிருக்கும். மேலும் மலைப்பாதைகளில் செல்லும்போது அதிகமான சுமையை தலையில் சுமந்து கொண்டு செல்வது சிரமமான காரியம். எனவே தான் அதனை தோளில் வைத்தோ அல்லது தோளில் ஒரு கம்பை வைத்து இருபுறமும் பொருட்களை கட்டி தொங்க விட்டுக் கொண்டோ செல்வது வழக்கம். இத்தகைய வழக்கத்தை முன்னிறுத்தியே இன்றும் கூட முருகப்பெருமானுக்கு 'காவடி' எடுப்பது தொன்று தொட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

மலைகளுக்கெல்லாம் அரசனாக விளங்கும் முருகப்பெருமானுக்கு மயில், யானை, சேவல் என்று பல வாகனங்கள் உண்டு. முருகப்பெருமானுக்கு உகந்த விழாவாக போற்றப்படுவது சூரசம்ஹாரம். இந்த திருவிழாவானது திருப்பரங்குன்றத்தில் மட்டும்தான் வருடத்திற்கு மூன்று முறை நடத்தப்படுகிறது. ஐப்பசி மாதத்தில் வரும் கந்த சஷ்டி, தை மாதத்தில் வரும் தெப்பத் திருவிழா, பங்குனி மாதத்தில் வரும் பெருவிழா போன்ற நாட்களில் இங்கே சூரசம்ஹாரம் வெகு விமர்சையாக நடைபெறுகிறது. முருகப்பெருமானை பல்வேறு புலவர்களும், நாயன்மார்களும் போற்றி பாடியுள்ளனர். அருணகிரிநாதர் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், நக்கீரர், சுந்தரர், மாணிக்கவாசகர், பாம்பன் சுவாமிகள் என முருகப்பெருமானை பாடியவர்களின் எண்ணிக்கை நீண்டு கொண்டே செல்லும்.

இதையும் படியுங்கள்:
உடும்பின் வால் போன்று காட்சி தரும் திருமாகறலீஸ்வரர்!
Thiruparankundram

இதில் நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப் படைக்குப் பின் ஒரு அற்புதமான புராணக்கதை ஒன்று உள்ளது. ஒருமுறை திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகப்பெருமானை எண்ணி நக்கீரர் தவம் ஒன்றை மேற்கொண்டாரம். அவ்வாறு அவர் தவத்தில் அமர்ந்திருந்த போது அருகில் இருந்த மரத்தில் இருந்து இலை ஒன்று தண்ணீரில் விழுந்திருக்கிறது. விழுந்த இலையின் கீழ் பகுதி மீனாகவும் மேல் பகுதி பறவையாகவும் மாறி உள்ளது. மீன் கீழே இழுக்க பறவை மேலே இழுக்க இந்த காட்சியை கண்ட நக்கீரர் ஒரு கணம் தான் தவம் செய்வதை நிறுத்தி விட்டாராம். உடனே அருகில் இருந்து ஒரு மிகப்பெரிய பூதம் ஒன்று தோன்றி அவரைப் பிடித்துக் கொண்டதாம்.

அதுவரை 999 பேரை ஆட்கொண்ட அந்த பூதம் 1000 ஆவது நபராக நக்கீரரை பிடித்துக் கொண்டு அனைவரையும் கொன்று சாப்பிட போவதாக கொக்கரிக்க ஆரம்பித்ததாம். எனவே இந்த நிலையை பார்த்த நக்கீரர் முருகப் பெருமானை எண்ணி தவம் ஒன்றை செய்யவே அங்கு தோன்றிய முருகப் பெருமான் பூதத்தை அழித்து ஆயிரம் பேரையும் காப்பாற்றினாராம். முருகப்பெருமானின் இத்தகைய அரும்பெரும் பெருமைகளை போற்றியே திருமுருகாற்றுப்படை பாடப்பட்டதாம்.

இதையும் படியுங்கள்:
சுரேந்திரபுரி போலாமா மக்களே! புராணக் கதைகளின் அருங்காட்சியகம்!
Thiruparankundram

அது மட்டும் அல்ல, அந்த அரக்கனை கொன்ற பாவத்தை எப்படியாவது போக்க வேண்டும் என்று அனைவரும் விரும்பவே முருகப்பெருமான் தன்னிடமிருந்த வேலை ஒரு பாறை மேல் இருந்தாராம். அந்த இடத்தில் நதி ஒன்று தோன்றவே அதில் அனைவரும் நீராடி தங்கள் பாவத்தை போக்கிக் கொண்டார்களாம். அந்த நதியே நாம் இன்று புண்ணிய நதிகளில் ஒன்றாக பார்க்கப்படக்கூடிய காசி தீர்த்தம் ஆகும். எனவே முருகப் பெருமானின் வேலுக்கு இருந்த மாபெரும் சக்தியை போற்றும் விதமாகவே திருப்பரங்குன்றத்தில் வருடம் தோறும் 'வேல் எடுத்தல்' திருவிழா மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

இத்திருவிழாவின் காலை நேரத்தில் பல்வேறு அபிஷேகங்கள் செய்து வேல் புறப்பாடு எடுத்து கொண்டு மலை மீது வைத்து வழிபடுகின்றனர். பின் மாலை நேரத்தில் இதே வேலை மலையில் இருந்து கீழே எடுத்து வந்து கோவிலுக்குள் வைத்து வழிபட்டு வருவதோடு அந்நாளில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்படுகிறது. இத்தகைய பல்வேறு நல்வினைகளுக்கு பெயர் பெற்ற திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு வாய்ப்பு கிடைத்தால் ஒரு முறை சென்று வாருங்கள்! முருகனின் அன்பும் அனுகிரகமும் உங்களுக்கும் பரிபூரணமாக கிடைக்கட்டும்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com