உடும்பின் வால் போன்று காட்சி தரும் திருமாகறலீஸ்வரர்!

Thirumakaraleeswarar temple...
திருமாகறலீஸ்வரர் திருக்கோவில்...
Published on

திருமாகறலீஸ்வரர் திருக்கோவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செய்யாற்றின் வடகரையில்  அமைந்துள்ளது. இங்குள்ள ஈசனின் பெயர் திருமாகறலீஸ்வரர். அம்பாள் பெயர் திரிபுவனநாயகி. தேவார பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களில் இது 7வது தலம். ஐந்து நிலை ராஜகோபுரமும், இரண்டு பிரகாரங்களும் கொண்ட கோவில் இது.

தல சிறப்பு:

இறைவன் உடும்பின் வால் போன்று காட்சி தரும் தலம் இது. அடைக்கலம் காத்த நாதர், உடும்பீசர், மகம் வாழ்வித்தவர், பாரத்தழும்பர், புற்றிடங் கொண்டார், நிலையிட்ட நாதர், மங்கலங்காத்தவர், அகத்தீஸ்வரர் என பல  பெயர்கள் கொண்ட இத்தலத்து ஈசன் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். அம்பாள் திருப்புவன நாயகி தெற்கு நோக்கி அருள்பாலிப்பது விசேஷமாக சொல்லப்படுகிறது.

இக்கோவிலில் முருகப்பெருமான் அபூர்வமாக யானை மீது அமர்ந்து காட்சி தருகிறார். இக்கோவிலின் அபிஷேகத் தீர்த்தத்தை சாப்பிட ரத்தம் சம்பந்தப்பட்ட நோய்களும், எலும்பு முறிவு, கண்பார்வை குறைவு, பக்கவாதம் போன்ற நோய்களின் தாக்கம் குறையும் என்ற நம்பிக்கை உள்ளது. பிரிந்த தம்பதியினர் ஒன்று சேரவும், கிரக தோஷம் நீங்கவும், குழந்தை பாக்கியம் வேண்டியும் இங்கு வந்து அங்க பிரதட்சணம் செய்கிறார்கள்.

இக்கோவிலின் தலவிருட்சம் எலுமிச்சை. தீர்த்தம் அக்னி தீர்த்தம். மாசி மாதம் 10 நாட்கள் பிரம்மோற்சவம் வெகு விமர்சையாக நடைபெறும். திருஞானசம்பந்தர் "வினை தீர்க்கும் பதிகம்" பாடிய தலம் இது.

தல வரலாறு:

முன்னொரு காலத்தில் பிரம்மா இத்தலத்தில் சிவபூஜை செய்து சத்தியலோகம் செல்லும் சமயம் ஆண்டு முழுவதும் காய்க்கும் அதிசய பலாமரம் ஒன்றை நட அது தினமும் கனி கொடுத்தது. ராஜேந்திர சோழ மன்னன் இதைக் கண்டு வியந்து ஊரிலிருந்து தினமும் ஒருவர் தலைச்சுமையாக இப்பழத்தைக் கொண்டு வந்து சிதம்பரம் நடராஜர் கோவில் சேர்க்க வேண்டும் எனவும், நடராஜருக்கு நைவேத்தியம் செய்து அதை மன்னருக்கு கொடுப்பதும் வழக்கமாய் இருந்தது.

ஒருமுறை அந்தண சிறுவனின் முறை வந்ததும் "தினமும் மக்களை ஏவும் மன்னன் இதற்கு தனியாக வேலைக்காரர்களை நியமித்திருக்கலாமே" என்று எண்ணி மரம் இருந்தால்தானே பிரச்னை வருகின்றது என்று எரித்து விடுகிறான். ஊர் மக்கள் கேட்டதற்கு தானாகவே தீப்பிடித்து சாம்பலாகி விட்டதாக கூற மக்களும் நம்பி விட்டனர்.

மறுநாள் பலாப்பழம் வராததால் மன்னர் சிறுவனை அழைத்து விசாரிக்க "பலாப்பழத்தை கொண்டுவர எங்களுக்கு எந்த வசதியும் செய்து தரவில்லை. அதனால்தான் மரத்தை எரித்தேன்" என்று கூற மன்னன் "தகுந்த வசதி வேண்டும் என நீ என்னிடம் தெரிவித்து இருக்க வேண்டும் அதைவிட்டு எரித்து இருக்கிறாய். எனவே உன் கண்களைக் கட்டி நாடு கடத்த உத்தரவிடுகிறேன்" என்றான். 

இதையும் படியுங்கள்:
திரௌபதி தொடங்கி வைத்த பதுகம்மா திருவிழா!
Thirumakaraleeswarar temple...

காவலர்களுடன் மன்னனும் சென்று ஊர் எல்லையில் அவனை விட்டுவிட்டு திரும்பிய பொழுது ஓர் இடத்தில் பொன்னிற உடும்பு தென்பட்டது. அதைக் காவலாளிகள் பிடிக்கச் சென்றபோது அது ஒரு புற்றினுள் சென்று மறைந்தது. காவலாளிகள் புற்றை கலைத்த பொழுது உடும்பின் வாலில் இருந்து ரத்தம் பிறீட்டு வர அசரீரியாக தோன்றி "சிறுவன் என்றும் பாராமல் நாடு கடத்தியது தவறு" என்று கூற மன்னன் மயங்கி விழுந்தான். மயக்கம் தெளிந்த மன்னனிடம் மீண்டும் அசரீரியாக சிவபெருமான்தானே உடும்பாக வந்ததாகவும் அந்த இடத்தில் ஒரு சிவாலயம் கட்டி வழிபாடு செய்யும்படியும் ஆணை இட மன்னனும் கோவில் கட்டினான்.

இன்றும் கூட உடும்பின் வால் போன்று காட்சி தரும் லிங்கம்தான் மூலஸ்தானத்தில் கிழக்கு நோக்கி காணப்படுகிறது.

கோவில் காலை 6:00 மணி முதல் 12 மணி வரையிலும் மாலை 5:30 முதல் 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com