
கதை 1 - பணத்தால் வந்தது
பணக்காரன் ஒருவன் மகான் ஒருவனிடம் சென்று, "சுவாமி என்னிடம் ஏராளமான பொன்னும், பொருளும் இருக்கின்றன. இருந்தும் இறைவன் அருள் கிட்டவே இல்லை.. என்ன செய்வது..?" என்று கேட்டான்.
"பணத்தால் வந்ததை எல்லாம் கொடுத்து விடு." என்றார் மகான்.
மறுநாளே தன் செல்வம் முழுவதையும் மூட்டை கட்டிக்கொண்டு வந்து மகானின் காலடியில் சமர்ப்பித்து, "இப்போதாவது எனக்கு இறைவன் அருள் கிடைக்குமா சுவாமி..?" என்று கேட்டான்.
மகான் சிரித்துக்கொண்டே கூறினார், "மகனே.. பணத்தால் வந்தது என நான் கூறியது உன் செல்வத்தை அல்ல.. பணத்தால் உன்னிடம் வந்த அகந்தை, ஆணவம் போன்ற குணங்களைத்தான் விட்டு விடு என்று கூறினேன்.."
பணக்காரன் மனம் தெளிந்தான்.
கதை 2 - யாருக்கு புண்ணியம்
ஒரு துறவிக்கு இரு சீடர்கள். ஒரு சமயம் துறவி, "தானத்தில் சிறந்தது அன்னதானம்" என்று கூறினார்.
உடனே முதல் சீடன் தன் வீட்டிற்கு 100 ஏழைகளை அழைத்து வந்து அவர்களுக்கு உணவளித்தான். இரண்டாமவனோ, இரண்டே இரண்டு ஏழைகளை வீட்டுக்கு அழைத்து வந்து அவர்களுக்கு வயிறார உணவளித்தான்.
மறுநாள் இருவரும் குருவிடம் வந்தனர். முதல் சீடன் கேட்டான்: "குருவே..! இரண்டே இரண்டு பேருக்கு உணவளித்த இவனை விட 100 பேருக்கு உணவிட்ட எனக்குத்தானே அதிக புண்ணியம் கிட்டும்..?"
அதற்கு குரு, "நிச்சயமாக இல்லை.. இவனுக்கே அதிக புண்ணியம் கிட்டும்.." என்றார்.
முதல் சீடன் அதிர்ச்சியுற்றான். பின்னர் குருவே விளக்கினார்.
"இவன் இருவருக்கு மட்டுமே உணவளித்தாலும், உளமாற, புண்ணியத்தை எதிர்பாராது உணவிட்டான். ஆனால் நீயோ தானத்திற்கு இவ்வளவு பணம் செலவாகிறதே என்ற மனநிலையிலேயே இருந்தாய்.. புண்ணியத்தை எதிர்பார்ப்பதிலும் குறியாய் இருந்தாய்.. ஆகவே நிச்சயம் உனக்கு புண்ணியம் கிட்டாது.." என்றார் குரு.
அவன் மனம் தெளிவடைந்தது.