
கதை 1 - பேராசை பெருநஷ்டம்:
கடவுளை நோக்கி தவம் இருந்தான் ஒரு பக்தன். அவன் பக்கத்திலேயே பேராசைக்காரன் ஒருவனும் திருட்டுத்தனமாக அமர்ந்திருந்தான். பக்தனுக்கு தரிசனம் தர கடவுள் வரும்போது தானும் சேர்ந்து தரிசித்து விடலாம் என்ற திட்டத்தோடு அமர்ந்திருந்தான்.
பக்தனுடைய தவத்தை மெச்சி கடவுள் தோன்றினார். பேராசைக்காரனுக்கும் தரிசனம் கிடைத்தது.
கடவுள் இரண்டு குடங்களை வைத்து "யாருக்கு எது வேண்டுமோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்.." என்று கூறிவிட்டு மறைந்தார்.
ஒன்று களிமண் பானை. இன்னொன்று தங்கக் குடம். பேராசைக்காரன் அவசரமாக தங்கக் குடத்தை எடுத்துக் கொண்டு ஓடினான். பக்தனோ மண்பானை போதும் என்று திருப்தி அடைந்தான். பிறகுதான் விவரம் தெரிந்தது பக்தனுக்கு கிடைத்தது மேலே களிமண் கொண்டு பூசப்பட்ட தங்கக் குடம் என்றும், பேராசைக்காரன் எடுத்துக் கொண்டு ஓடியது தங்க முலாம் பூசப்பட்ட களிமண் குடம் என்றும், பிறகே புரிந்தது இருவருக்கும்.
கதை 2 - துறவியின் ஆசி:
அந்த ஊருக்கு ஒரு துறவி வந்திருப்பதை அறிந்த செல்வந்தன், மருத்துவம் படித்த தன் மகனை அவரிடம் அழைத்து வந்து, "சுவாமி என் மகனுடைய தொழில் அமோகமாக வளர ஆசீர்வதியுங்கள்.." என்றான். துறவி மற்றவர்களுக்கு ஆசிர்வதிப்பது போல் அவனை ஆசீர்வாதிக்காமல், "கடவுள் உன்னைக் காப்பாராக" என்று மட்டும் கூறி அனுப்பி வைத்தார்.
காரணம் புரியாத சீடன், துறவியிடம் கேட்டே விட்டான். துறவி புன்னகையுடன் கூறினார், "அவர் ஒரு மருத்துவர்... புதிதாக இந்த ஊரில் மருத்துவமனை ஆரம்பித்துள்ளார். அவர் தொழில் அமோகமாக வளர வேண்டும் என்று நான் ஆசி வழங்கினால்...? அதனால்தான் அவரது தொழில் ஏழைகளுக்கு பயன்பட வேண்டும் என்ற வகையில் வாழ்த்தினேன்..." என்றார்.