ஆன்மிகக் கதை - பக்த சேனா!

ஓவியம்; சேகர்
ஓவியம்; சேகர்
Published on

-பொன்னம்மாள்

துரோணருக்கு ஒரு மகள் இருந்தாள். அவள் பெயர் சாந்தா. துரோணர் வாழ்ந்த ஊரில் திருக்குலத்து அடியார் ஒருவர் இருந்தார். அவர் பெயர் பக்த சேதனா. செருப்பு தைப்பது அவரது தொழில் என்றாலும், மிகச் சிறந்த விஷ்ணு பக்தர். அவரது மனைவி காந்தா. இறைவன் சேவைக்காகவே வாய்த்ததாக எண்ணி தமது மகளுக்கு, 'சேவா' என்று பெயரிட்டு வளர்த்தார் சேதனா

துரோணர், மகா விஷ்ணுவை மலர்களால் அர்ச்சிப்பதைப் போலவே, தமது இல்லத்திலும் பெருமாளுக்கு மலர் அர்ச்சனை செய்ய வேண்டும் என விரும்பினாள் சேவா. அவளிடம்,  துரோணருக்கு ஒரு ஜோடி செருப்பைத் தைத்துக்கொடுத்து, அதற்கு பதில் அவர்கள் வீட்டிலிருந்து பூக்கள் வாங்கி வரச் சொன்னார் சேதனா.

செருப்பைக் கொடுத்து, பூக்கள் வாங்கி வர துரோணர் வீட்டுக்குச் சென்ற சேவாவிடம், தமது வீட்டு பெருமையைப் பேசி எள்ளி நகையாடினாள். சாந்தா. அவளுக்கு பதில் கூறும்விதமாக, "எங்கள் வீட்டு நிவேதனத்தைச் சாப்பிட பகவான் நேரில் வருவார்" என்று கூறினாள் சேவா. "பகவான் உங்களோடு சாப்பிடுகிறாரா? பொய்" என்றாள் சாந்தா. "என்னுடன் வா காட்டுகிறேன்” என்று அவளை தம்  வீட்டுக்கு அழைத்துச் சென்று காட்டினாள் சேவா.

தந்தை துரோணரிடம் இதைச் சொல்லி அதிசயித்தாள் சாந்தா. "இது பொய். சேதனா கதை கட்டி விடுகிறான். அவனை அடக்கி வைக்க வேண்டும்" என்று கறுவிய துரோணர், சேதனாவைக் கூப்பிட்டு, "நாளைக் காலையில் ஆயிரம் ஜோடி செருப்புகள் தைத்துத் தர வேண்டும். இல்லையேல் மரண தண்டனை கிடைக்கும்' என எச்சரித்தார்.

"ஒரு ஜோடி தைக்க முடியும். ஒரே நாளில் ஆயிரம் ஜோடி எப்படிங்க முடியும்? அதுக்குத் தேவையான தோல் வேணாமுங்களா?" என்று சேதனா கேட்க, "எதிர்த்து வாயாடாதே" என்று எச்சரித்துக் கதவைச் சாத்திக்கொண்டார் துரோணர்.

அழுதுகொண்டே படுத்த சேதனா,  களைப்பால் உறங்கிப்போனார். காலை சூரியன் 'சுள்ளென்று சுட, எழுந்த அவர், அங்கே ஆயிரம் ஜோடி செருப்புகள் தைத்து அடுக்கி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டார். குறித்த நேரத்தில் புதுச் செருப்புகள் வாசலில் அடுக்கியிருப்பதைக் கண்ட துரோணர், கோபம் கொண்டு சேதனாவை அடித்து விட்டார்.

'தந்தை ஏன் சேதனாவை அடிக்க வேண்டும். அடியெல்லாம் பரந்தாமன் மேலல்லவா விழும்' என்று நொந்துகொண்ட சாந்தா உண்ணாவிரதம் இருந்தாள். அவளையும் சேவாவிடம் பேசக்கூடாதென்று அறையில் தள்ளிப் பூட்டினார் துரோணர். கதவு தானாகத் திறந்தது. சாந்தா வெளியேறினாள்.

கோபம் கொண்ட துரோணர், துரியோதனனிடம் சென்று, "சேதனா, பக்தி என்ற பெயரில் ஊரை ஏமாற்றுவதாகவும், அவனுக்குத் தக்க தண்டனை தர வேண்டும்" என்றும் கோள்மூட்டினார். அதை நம்பிய துரியோதனன், "சேதனாவின் கண்களைப் பிடுங்கி, கைகளை வெட்டி விடுங்கள்" என உத்தரவிட்டான். காந்தா கணவனின் அவல நிலை கண்டு அலறினாள். கணவன் பார்க்காத உலகத்தை நானும் பார்க்க மாட்டேன் என்று கண்களைப் பறித்து வீசினாள். அப்போது, சிறைச்சாலை தகர்ந்தது. பூமி ஆடியது. குறவனும் குறத்தியுமாக ருக்மிணியோடு வந்தார் கிருஷ்ண பரமாத்மா. சேதனாவுக்குக் கால்கள் பொருந்திக்கொண்டன. கணவன்- மனைவி இருவருக்கும் கண்கள் ஒளி வீசின.

இதையும் படியுங்கள்:
அழகுக்கு மட்டுமில்லை நெடுஞ்சாலை அரளிச் செடிகள்!
ஓவியம்; சேகர்

இதற்குள் துரோணர், சேதனா வாழ்ந்த சேரிக்குத் தீ வைக்கச் சொல்ல, சேரி தீப்பற்றி எரிந்தது. முடிந்தவரை சேரி ஜனங்களைக் காப்பாற்றினாள் சாந்தா. ஆனால், நெருப்புக்கு நடுவில் அகப்பட்டுக் கொண்டாள். பெற்ற பாசத்தில் துரோணர் ஓடி வந்தார். சேவா சாந்தாவைக் காப்பாற்றினாள். 'ஐயோ! பகவான் விக்ரஹம்' என்று அலறியபடி தீக்குள் சேவாவும்,சாந்தாவும் ஓடினர். என்ன ஆச்சரியம்! பகவானைச் சுற்றி அக்னி பற்றவில்லை. நெருப்பு அணைந்தது. உயிர் சேதமில்லை என்று கண்டு ஆனந்தமுற்றார் பக்த சேதனா.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com