ஆன்மிகக் கதை: விடா முயற்சி!

ஓவியம்: சேகர்
ஓவியம்: சேகர்

சைவ மகரிஷியின் சிஷ்யர்களில் ஒருவர் உதங்கர். குருகுல கல்வி முடிந்ததும், குருதட்சணை தர  விரும்பிய அவரிடம்,“உதங்கா! எனக்கெதுவும் வேண்டாம். உன் குரு மாதாவைக் கேள்” என்றார் குரு. 

குரு பத்தினி, “உதங்கா! நீ பௌஷ்ய மன்னனின் பார்யை அணிந்திருக்கும் காது குண்டலங்களைப் பெற்றுத் தந்தால் சந்தோஷப்படுவேன். இன்றிலிருந்து நான்காம் நாள் நடக்கும் பிராமண போஜன சமயம் அந்தக் குண்டலங்கள் என் செவிகளில் இருக்க வேண்டும்” என்றாள்.

உதங்கர் பௌஷ்ய வேந்தனை சந்தித்து தன் கோரிக்கையைத் தெரிவித்தார். வேந்தன் அரசியிடம் கேட்கச் சொல்ல, உதங்கர் அந்தப்புரம் போய் அரசியைத் தேடினார். அங்கு ராணி தென்படவில்லை. திரும்பி மன்னனிடம் வந்து “அரசியார் காணவில்லை” என்றார்.

கொற்றவன்,“நீங்கள் இன்று நீராடிய பின் கடவுளைத் தியானித்து விட்டு உணவருந்தினீர்களா?” என்று வினவினார்.

உதங்கர் சற்றே யோசித்தபின், “பசி அதிகமாயிருந்த தால் ஸ்நானம் செய்தவுடன் சாப்பிட்டு விட்டேன்” என்று பதிலளித்தார்.

“ராணியின் காதிலுள்ள குண்டலங்கள் ஆசாரக் குறைவாயிருப்பவர், தீய நோக்கமுடையவர் பார்வையிலிருந்து தரித்திருப்பவரை மறைத்து விடும். நாளை குளித்துவிட்டு தெய்வத்தை ஆராதித்த பின் போய் பாருங்கள்” என்றார் அரசர்.

உதங்கர் அவ்வாறே செய்ய, அரசி தென்பட்டாள். குண்டலங்களை யாசித்தார். மகிமை பொருந்திய அக்குண்டலங்களைத் தர மறுத்தாள் பட்டத்தரசி.

“ரிஷிபத்தினி அரசியை விட உயர்ந்தவர். என் குரு தங்கள் கணவருக்கும் ஆசார்யரல்லவா? தானமாக அளிக்கப்படும் இக்குண்டலங்கள் குருமாதாவின் செவிகளில் இலங்குவதால் தங்களுக்கும் பெருமை தானே! துஷ்டர்கள் பார்வையில் படாமல் குருமாதா பாதுகாப்பாய் இருக்க நீங்கள்தான் உதவ வேண்டும்” என்று உதங்கர் கேட்க, குண்டலங்களைக்  கொடுத்தாள் ராணி.

 குண்டலங்களோடு  ஆசிரமம் நோக்கிப் பயணமானார் உதங்கர். மறுநாள் அதிகாலையில் குண்டலங்களைக் கரையில் வைத்துவிட்டு நதியில் நீராடினார். அப்போது ஒரு துறவி குண்டலங்களை எடுத்துக் கொண்டு ஓட, உதங்கரும் அவரைத் தூரத்திக் கொண்டு ஓடினார். சன்யாசி சர்ப்பமாக மாறி பூமியின் வெடிப்பில் மறைந்தார்.

இதையும் படியுங்கள்:
விஷத்தை முறிக்கும் சிறியாநங்கை தெரியுமா?
ஓவியம்: சேகர்

உதங்கர் இந்திரனை நோக்கிக் தவமிருந்தார். இந்திரன் வஜ்ஜிராயுதத்தை எறிய பூமி பிளந்து வழி தென்பட்டது. அதன் பாதையில் சென்ற உதங்கர், வழியில் கறுப்பாய் ஒரு காரிகையும், வெளுப்பாய் ஒரு வனிதையும் நெசவு செய்வதைக் கண்டார். அவர்களது தறிச் சக்கரங்களில் பன்னிரண்டு ஆரக்கால்கள் இருந்தன. அவற்றை ஆறு சிறுவர்கள் சுற்றினர். முடிவில் நாகராஜனைப் பார்த்தார். “தங்களது குண்டலங்களை அபகரித்தவன் தட்சகன்” என்று கூறி குண்டலங்களை அளித்தார் நாகராஜன். வழியில் பார்த்தவற்றுக்கு விளக்கம் கேட்டார் உதங்கர்.

“நெசவு செய்யும் இரு பாவையரும் பகலும், இரவு மாவர். பன்னிரண்டு ஆரக்கால்களும் பன்னிரண்டு மாதங்கள். அவற்றைச் சுற்றும் ஆறு சிறுவர்களும் ஆறு ருதுக்கள்” என விவரித்த சர்ப்பராஜன் உதங்கருக்குப் பல பரிசுகள் அளித்து கௌரவித்தான். உதங்கரும் குறிப்பிட்ட தினத்துக்குள் குருமாதாவிடம் குண்டலங்களை சமர்ப்பித்தார். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com