ஆன்மிகக் கதை - கண்ணனை நம்பினோர் கைவிடப்படார்!

ஓவியம்; சேகர்
ஓவியம்; சேகர்

-டி.எம்.இரத்தினவேல்

ண்டிதர் ஒருவர் அரசன் முன்னிலையில் பகவத் கீதையைப் பற்றி உரை நிகழ்த்தினார். அப்போது, பின்வரும் சுலோகத்தைச் சொல்லி விளக்க வேண்டிய இடம் வந்தது. அந்த ஸ்லோகம் இதுதான்.

'அனன்யாஸ் சிந்த யந்தோ மாம்

யே ஜனா: பர்யு பாஸதே

தேஷாம் நித்யா பியுக் தானாம்

யோக க்ஷேமம் வஹாம் யஹம்'

இதன் பொருள், 'என்னைத் தவிர, வேறு எந்த நினைவுமில்லாமல் என்னை யார் சிந்திக்கிறார்களோ, எப்பொழுதும் அவர்களுடைய யோக க்ஷேமத்தை நான் ஏற்கிறேன்' என்பதாகும்.

இந்தச் சுலோகத்தின் உட்கருத்துக்கள் பலவற்றை வெகு உற்சாகமாகப் பண்டிதர் விளக்கிக்கொண்டிருந்தார். ஆனால், அரசரோ அதைத் தலை யசைத்து மறுத்து,"இந்த விளக்கம் சரியில்லை" என்றார். இதேபோல் பண்டிதர் சொன்ன ஒவ்வொரு விளக்கத்தையும், 'தவறு' என்று மறுத்து வந்தார். அந்தப் பண்டிதரோ, பல அரசவைகளில் புகழுக்குரிய பாராட்டுக்களைப் பெற்றவர். அதன்பொருட்டு, ஆடம்பர விருதுகளினால் அரசர்களால் சிறப்பிக்கப்பட்டவர்.

இந்தச் சுலோகத்துக்குத் தான் சொன்ன விளக்கத்தை அங்கு இருந்த அத்தனை அரசவையினர் முன்னிலை யிலும் அரசர், 'தவறு' என்று கண்டித்ததும், பண்டிதர் தன் மேல் வேல் பாய்ந்ததுபோல் வருந்தினார். இந்த இகழ்ச்சியால் உள்ளம் கொதித்தார். ஆயினும், உறுதியை வருவித்துக்கொண்டு மேற்கொண்டு மறுபடியும் தமது உரையைத் தொடங்கினார். தம்முடைய கல்வியறிவை எல்லாம் ஒன்று திரட்டி, 'யோகம், க்ஷேமம்' என்ற சொற்களின் பல்வேறு பொருள்களைப் பற்றி அருவிபோல் சொற்பெருக்காற்றத் தொடங்கினார். அரசர் இப்பொழுதும் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை. அதுமட்டுமின்றி, “பண்டிதரே, இந்தச் சுலோகத்தின் பொருளைக் கண்டுபிடித்து, அதை நன்றாகப் புரிந்துகொண்டு நாளைக்கு மறுபடியும் வாரும்" என்று கூறிவிட்டு, எழுந்து தமது மாளிகைக்குப் போய்விட்டார்.

பண்டிதருக்குக் கொஞ்ச நஞ்சமிருந்த தைரியமும் போய்விட்டது. கலக்கம் அழுத்த இந்த இகழ்ச்சியினால் துன்புற்றார். வீட்டுக்கு வந்து சேர்ந்தார். கீதைப் புத்தகத்தை ஒருபுறம் வைத்துவிட்டுக் கட்டிலில் போய் விழுந்தார்.

இதைப் பார்த்து வியப்புற்ற அவரது மனைவி, "ஏன் இன்று அரண்மனையிலிருந்து அவ்வளவு துயரத்துடன் திரும்பி வந்தீர்கள்? என்ன நடந்தது?" என்று கேட்டாள். பண்டிதர் பதில் ஒன்றும் சொல்லாமல் இருக்க, மனைவி மேலும் கவலையுடன் தூண்டித் துருவிக் கேட்டாள். வேறு வழியின்றி, அரசர் இழித்துப் பேசியது, தன்னை வீட்டுக்குப் போகும்படி கட்டளையிட்டது எல்லாவற்றையும் பண்டிதர் சொல்லும்படியாயிற்று.

இதைப் பேசாமல் கேட்டுக்கொண்டிருந்தாள் அவர் மனைவி. நடந்த நிகழ்ச்சியைப் பற்றி நன்றாக யோசித்துவிட்டு, "ஆமாம், உண்மைதானே? அரசர் சொன்னது சரியே. நீங்கள் அந்தச் சுலோகத்துக்குச் சொன்ன விளக்கம் தவறுதான். அரசர் அதை எப்படி ஒப்புக்கொள்ளுவார்? தப்பு உங்களுடையதுதான்” என்றாள். இதைக் கேட்டவுடன் பண்டிதர், வாலை மிதித்த பாம்பு போல் கட்டிலிலிருந்து கோபத்துடன் துள்ளி எழுந்தார்.

"அறிவு கெட்டவளே! உனக்கு என்ன தெரியும்? என்னை விட நீ புத்திசாலியோ? அடுப்பங்கரையில் அனவரதமும் சமைத்துப் போட்டுக்கொண்டிருக்கும் உனக்கு என்னை விடத் தெரியுமோ? வாயை மூடிக்கொண்டு பேசாமல் போ" என்று கத்தினார்.

ஆனால்,  அந்தப் பெண்மணி நகரவில்லை."உண்மையைச் சொன்னதற்கு ஏன் இவ்வளவு கோபப்படுகிறீர்கள்? அந்தச் சுலோகத்தை மறுபடி மறுபடி சொல்லிப் பாருங்கள். அதன் பொருளையும் சிந்தித்துப் பாருங்கள். அப்பொழுது அதன் சரியான விளக்கம் உங்களுக்கே புலனாகும்" என்று இதமாகச் சொன்னாள். இந்த மென் சொற்களினால் கணவனுடைய உள்ளத்தில் அமைதியை உண்டாக்கினாள்.

பண்டிதரும் சுலோகத்திலுள்ள ஒவ்வொரு சொல்லின் பொருளையும் ஆராயத் தொடங்கினார். 'அனன்யாஸ் சிந்தயந்தோமாம்' என்று, மெதுவாக ஆழ்ந்த சிந்தனையோடு அச்சொற்களின் பல்வேறு பொருள்களை வாய்விட்டுச் சொல்லிக்கொண்டே வந்தார். அப்பொழுது அவர் மனைவி தடுத்து, "வெறும் சொற்களைக் கற்று அவற்றை விளக்குவதனால் என்ன பயன்?  நீங்கள் அரசரிடத்துக்குப் போனபொழுது உங்களுடைய நோக்கம் என்ன? எதற்காக அங்கே போனீர்கள்?” என்று கேட்டாள்.

இதைக் கேட்டு பண்டிதர் வெகுண்டார். "நான் இந்தக் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டாமா? குடும்பச் செலவை நான் எப்படிச் சமாளிப்பது? அதற்காகத்தான் நான் அரசனிடம் போனேன். இல்லாவிட்டால் அங்கே எனக்கு என்ன வேலை?" என்று இரைந்தார்.

இதையும் படியுங்கள்:
பாடி ஸ்கல்ப்டிங் என்றால் என்னவென்று தெரியுமா?
ஓவியம்; சேகர்

அப்பொழுது அவர் மனைவி, "இந்தச் சுலோகத்தில் பகவான் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை நீங்கள் புரிந்துகொண்டிருந்தால் அரசனிடத்துப் போக வேண்டிய தேவை வந்திருக்காது. 'வேறொரு நினைவுமில்லாமல், என்னையே சரணடைந்து, எப்பொழுதும் என்னிடத்தில் மனது பொருந்தியிருந்தால், அத்தகைய பக்தனுக்கு வேண்டியதையெல்லாம் நானே செய்துகொடுக்கிறேன்' என்று பகவான் இந்தச் சுலோகத்தில் சொல்லியிருக்கிறான். இந்த மூன்றையும் நீங்கள் செய்யவில்லை. அரசன்தான் உங்களுக்கு எல்லாவற்றையும் தருவான் என்று அரசனை நம்பிப் போனீர்கள்! இங்கேதான் நீங்கள் இந்தச் சுலோகத்தின் கருத்துக்கு முரணாக நடந்து கொண்டு விட்டீர்கள். இதனால்தான், நீங்கள் சொன்ன விளக்கத்தை அரசன் ஏற்றுக்கொள்ளவில்லை" என்று மென்மையாக விளக்கினாள்.

இதைக் கேட்டு அவளுடைய சொற்களில் இருந்த உண்மையைத் திரும்பத் திரும்ப நினைத்துப் பார்த்து, அந்தப் புகழ்பெற்ற அறிவாளி சிறிது நேரம் பேசாமல் உட்கார்ந்திருந்தார். பிறகு, அவரது தவற்றையும் உணர்ந்தார். மறுநாள் அவர் அரண்மனைக்குப் போகவில்லை. மாறாக, வீட்டிலேயே கண்ணணைத் தொழுவதில் ஈடுபட்டார்.

அரசர்,"பண்டிதர் ஏன் வரவில்லை" என்று விசாரித்தார். அதற்கு அரண்மனைப் பணியாளர்கள், "அவர் வீட்டிலேயே இருக்கிறார். எங்கும் போகவில்லை" என்றனர். உடனே அரசர், அவரை அழைத்து வரும்படி கட்டளையிட்டு, ஓர் பணியாளரையும் அனுப்பி வைத்தார்.

கண்ணணைத் தொழுதல்...
கண்ணணைத் தொழுதல்...

அரசர் அழைத்து வரும்படிக் கூறியும், பண்டிதர் அரண்மனைக்கு வர மறுத்துவிட்டார். அதோடு, "நான் யாரிடமும் போக வேண்டிய தேவையில்லை. என்னுடைய கண்ணன் எனக்கு வேண்டியவற்றைத் தருவான். என்னுடைய யோக க்ஷேமங்களை அவன் பார்த்துக்கொள்வான். இதை,  இந்நாள் வரை நான் உணரவில்லை. அதனால் இகழ்ச்சியடைந்தேன். வெறும் சொற்களின் பல்வேறு பொருள்களைத் தெரிந்துகொள்ளும் ஆவல் என் கண்களை மறைத்துவிட்டது. அவனைச் சரணடைந்து அவனைத் தொழுவதிலேயே ஈடுபடுவேனானால்,  எனக்கு வேண்டியவற்றையெல்லாம் அவனே தருவான்" என்று கூறி, அரண்மனைப் பணியாளைத் திருப்பி அனுப்பிவிட்டார்.

அரண்மனைப் பணியாள் அரசருக்கு இந்தச் செய்தியைச் சொல்ல,  அரசரே பண்டிதர் வீட்டுக்கு நேரில் வந்து,"நீங்கள் நேற்று அரண்மனையில் விளக்க முற்பட்ட சுலோகத்தின் பொருளை இன்றைக்கு உங்கள் அனுபவத்தின் மூலம் உணர்ந்து எனக்கு விளக்கியமைக்காக மனமார உங்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறி பண்டிதரை வணங்கினார்.

இவ்வாறு, ஒருவரது சொந்த உணர்வில் தோன்றாத எந்த ஆன்மிக விளக்கமும் வெறும் ஆரவாரமாகவும் போலியாகவும்தான் இருக்கும் என்று அரசர் பண்டிதருக்கு உணர்த்தினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com